கடல்நீரின் உவர்ப்பியம்
"உவர்ப்பியம்" என்பது 1,000 கிராம் கடல் நீருக்கும் அதில் கரைந்துள்ள உப்பின் எடைக்கும் (கிராம்களில்) இடையே உள்ள விகிதமேயாகும். இது % என்று ஆயிரத்தின் பகுதியாக எந்த அலகும் இல்லாமல் கூறப்படுகிறது.
எடுத்துக் காட்டாக, 30% என்றால் கொடுக்கப்பட்டுள்ள 1000 கிராம் கடல்நீரில் 30 கிராம் உப்பு உள்ளது என்று பொருள். பெருங்கடலின் சராசரி உவர்ப்பியம் 35% ஆகும்.
பெருங்கடல் உப்பிற்கான காரணம்
கடல் நீர் தாது உப்புக்கள் மற்றும் மட்கிய கடல்சார் உயிரினங்கள் போன்ற பலப் பொருட்களாலான ஒரு வலிமை குறைந்த சிக்கலான கரைசலாகும். புவி மேற்பரப்பில் ஏற்படுகின்ற வானிலைச் சிதைவு மற்றும் ஆற்றின் அரித்தலால் பெரும்பாலான பெருங்கடல்கள் உப்பைப் பெறுகின்றன. பெருங்கடலின் சில வகை உப்புகள் கடலடி தரைப்பரப்பில் காணப்படும் பாறைகளும், படிவுகளும் நீரில் கரைந்து உருவாகுபவையாகும். வேறு சிலவகை உப்புகள் எரிமலை வெடித்து சிதறும்போது புவியோட்டிலிருந்து வெளிப்பட்டு திடப் பொருட்களாகவும், வாயுக்களாகவும் அருகில் உள்ள கடல் நீரில் கரைந்து ஏற்படுபவையாகும்.
சிந்திக்க
எந்த பெருங்கடலில் நாம் நடக்கலாம்? ஏன்?
கடல்நீரின் உவர்ப்பியத்தை பாதிக்கும் காரணிகள்
பெருங்கடல்களின் உவர்ப்பியம் கீழ்க்கண்டவற்றை சார்ந்துள்ளது.
அ. கடல்நீர் ஆவியாகும் வீதம்,
ஆ. மழைப் பொழிவுகள்,
இ. ஆறுகளிலிருந்து கடலில் சேரும் நன்னீரின் அளவு
ஈ. துருவப்பகுதியில் உள்ள பனி உருகி கடல் நீரில் கலப்பது,
உ. கோள்காற்றுகளால் மேலெழும் ஆழ்கடல்நீர்
ஊ. கடல் நீரோட்டங்களால் கலக்கும் நீர்
உவர்ப்பியத்தின் பரவல்
பெருங்கடல்களின் சராசரி உவர்ப்பியம் புவியிடைக் கோட்டிலிருந்து துருவத்தை நோக்கிச் செல்லச் செல்ல குறைகிறது. உலகின் அதிக உவர்ப்பியம் 20° வடக்கு மற்றும் 40° வடக்கு அட்சங்களுக்கு இடையில் உள்ள கடல்களில் காணப்படுகிறது. இந்தப்பகுதி அதிக வெப்பம், அதிக நீராவியாதல் அதே நேரத்தில் புவிடைக்கோட்டுப்பகுதியை விட குறைவான மழைப்பொழிவு போன்ற தன்மையைக் காரணமாகக் கொண்டுள்ளது.
கண்டங்களின் கடலோர எல்லைப்பகுதியில் ஆற்றின் நன்னீர் சேர்வதால் உவர்ப்பியமானது பெருங்கடலின் உட்பகுதியைவிடக் குறைவாக இருக்கிறது.
அதிகபட்ச உவர்ப்பியம் துருக்கியில் உள்ள வான் ஏரியில் (330%) பதிவாகியுள்ளது. இரண்டாவதாக சாக்கடலும் (238%). மூன்றாவதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் உட்டாவில் உள்ள பெரிய உப்பு (Great Salt Lake) ஏரியிலும் (220%) காணப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
உப்பு சேகரித்தலில் மரத்தாலான – நீண்ட கைப்பிடியும், பற்களும் கொண்ட பழங்காலக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு உப்பு வாரி என்று பெயர்.
தகவல் குறிப்பு
ஒரே அளவு உவர்ப்பியம் கொண்ட பகுதிகளை இணைக்கும் கற்பனைக் கோட்டிற்கு 'சம உவர்ப்பியக் கோடு’ (iso halinc) என்று பெயர்.
சாக்கடலில் காணப்படும் உப்பின் அளவு மற்ற கடல்களோடு ஒப்பிடும் போது 8.6 மடங்கு அதிகமாகும். சாக்கடல் கடல் மட்டத்திலிருந்து 423 மீட்டர் தாழ்வாக அமைந்துள்ளது. இது நிலப்பரப்பின் மிகத் தாழ்வான பகுதியாகும். இக்கடல் 377 மீட்டர் ஆழமுடையது. இக்கடலின் அதிக உவர்ப்பியம் காரணமாக மனிதர்களால் இதன்மீது மிதக்கமுடிகிறது. அதிக உவர்ப்பியம் காரணமாக உயிரினங்கள் ஏதுமில்லாத கடலாகக் காணப்படுகிறது.
மாணவர் செயல் பாடு
உலக வரைபடத்தில் அதிக உவர்ப்பியமும், குறைவான உவர்ப்பியமும் கொண்டுள்ள பெருங்கடல் பகுதிகளைக் கண்டறிக.
அரபிக் கடலின் உவர்ப்பியத்தையும், வங்காள விரிகுடா கடலின் உவர்ப்பியத்தையும் ஒப்பிட்டு வேறுபாடுகள் இருப்பின் காரணத்தை கண்டறிக. ஆசியாவின் கிழக்கு கடற்கரையிலும், வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலும் உவர்ப்பியம் குறைவாக இருப்பதற்கானக் காரணத்தை கண்டறிக.
தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உவர்ப்பியம் வேறுபடுவதற்கான காரணத்தை ஆராய்க.