புள்ளியியல் நுட்பங்கள் - புவியியல் - தரவுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் வகைப்படுத்துதல் | 12th Geography : Chapter 13 : Statistical Techniques
தரவுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் வகைப்படுத்துதல்
தரவுகளை சேகரித்த பிறகு அவற்றை வகைப்படுத்தி மற்றும் புள்ளியியல் பகுப்பாய்விற்கு உட்படுத்தவேண்டும். வகைப்படுத்திய தரவுகள் பெரிய அளவில் இருப்பதால் அவற்றை பகுப்பாய்விற்கு முன்பு குறைத்தல் அவசியம். இவை தரவுகளை ஒருங்கிணைக்க வழிவகுக்கும்.
தரவுகளை ஒருங்கிணைக்கும்போது கொடுக்கப்பட்ட தரவில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மதிப்பைக் கண்டறிய வேண்டும். இவ்விரண்டு மதிப்புகளுக்கிடையே உள்ள வேறுபாடு வீச்சு என்பதாகும்.
(எடுத்துக்காட்டு)
பின்வரும் தரவுக்கு வீச்சை கண்டுபிடி. 2, 6, 4, 9, 12, 8, 5, 8
தீர்வு:
அதிகபட்ச மதிப்பு = 12, குறைந்தபட்ச மதிப்பு = 2 எனவே, வீச்சு = அதிகபட்ச மதிப்பு - குறைந்தபட்ச மதிப்பு
வீச்சு = 12 - 2 = 10
புள்ளியியலில் வரிசை என்பது ஒரு வகையான முறைப்படுத்தப்பட்ட அமைப்பாகும். தரவுகள் ஏறுவரிசையிலோ, இறங்கு வரிசையிலோ ஒழுங்கமைக்கப்படுவதை நிகழ்வெண் வரிசை என்கிறோம்.
நிகழ்வெண் பரவல் என்பது தரவுகளை குழுக்களுக்குள் வகைப்படுத்துதல். இவற்றின் சில முக்கிய நுட்ப கலைச்சொற்களைக் காணலாம் (Technical Terms);
பிரிவு என்பது மாறிகளை பல பாகங்களாக பிரித்து நிகழ்வெண்களை உருவாக்கும் ஒரு தொகுப்பு.
ஒரு பிரிவின் இரு எல்லைகளும் பிரிவு எல்லைகள் எனப்படும். பிரிவின் சிறிய மதிப்பு கீழ் எல்லை எனவும், பெரிய மதிப்பு மேல் எல்லை என்றும் அழைக்கப்படும்.
எடுத்துக்காட்டு
10 - 20 என்ற பிரிவிற்கு, 10 என்பது கீழ் எல்லை மற்றும் 20 என்பது மேல் எல்லை ஆகும்.
கீழ் எல்லை மதிப்பையும் மேல் எல்லை மதிப்பையும் கூட்டி , இரண்டால் (2) வகுக்கும் போது மைய மதிப்பு பெறப்படுகிறது.
எடுத்துக்காட்டு
10 - 20 என்ற குழுவிற்கு, மைய மதிப்பு = 10 +20 / 2 = 15
ஒரு பிரிவின் மேல் எல்லைக்கும், கீழ் எல்லைக்கும் இடையேயுள்ள வித்தியாசமே, பிரிவு இடைவெளியாகும்.
எடுத்துக்காட்டு
10 -20 என்ற பிரிவிற்கு
பிரிவு இடைவெளி 20 - 10 = 10
குழுவில் நிகழ்வெண்களை கணக்கிடுவதற்கு அடையாளக் குறியீடுகளை பயன்படுத்துகிறார்கள். அப்பிரிவிற்கு எதிரே செங்குத்து கோடாக அடையாள குறியீட்டை (1) இடுக. நான்கு கோடுகளுக்கு மேற்பட்டால், நான்கு கோடுகளின் மீது ஒரு குறுக்குக்கோடு இடுதல் வேண்டும். இவை நிகழ்வெண்களை எளிதாக கணக்கிடுவதற்கு உதவுகிறது.
ஒவ்வொரு பிரிவில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவின் மொத்த அடையாளக் குறியீடுகளின் எண்ணிக்கை.
பிரிவில் உள்ள நிகழ்வெண்களின் மொத்த மதிப்பை மொத்த நிகழ்வெண் எனலாம். அவை உறுப்புகளின் மொத்த எண்ணிக்கை ஆகும்.