ராஜமார்த்தாண்டன் | பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: அப்படியே நிற்கட்டும் அந்த மரம் | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu
இயல் இரண்டு
கவிதைப்பேழை
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
நுழையும்முன்
நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள். அவை மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. மரங்களைப் பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன. கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம். அவற்றைப் பற்றிய நினைவுகள் மறையா என்பதை விளக்கும் கவிதை ஒன்றை அறிவோம்.
ஊரின் வடகோடியில் அந்த மரம்
ஐந்து வயதில் பார்த்தபோதும்
இப்படியேதானிருந்தது
ஐம்பதைத் தாண்டி இன்றும்
அப்படியேதான்
தாத்தாவின் தாத்தா காலத்தில்
நட்டு வளர்த்த மரமாம்
அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்
பச்சைக்காய்கள் நிறம் மாறிச்
செங்காய்த் தோற்றம் கொண்டதுமே
சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும்
பளபளக்கும் பச்சை இலைகளூடே
கருநீலக் கோலிக்குண்டுகளாய்
நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும்
பார்க்கும்போதே நாவில் நீரூறும்
காக்கை குருவி மைனா கிளிகள்
இன்னும் பெயரறியாப் பறவைகளுடன்
அணில்களும் காற்றும் உதிர்த்திடும்
சுட்ட பழங்கள் பொறுக்க
சிறுவர் கூட்டம் அலைமோதும்
வயதுவந்த அக்காக்களுக்காய்
கையில் பெட்டியுடன் ஓடிஓடிப்
பழம் பொறுக்கும் தங்கச்சிகள்
இரவில் மெல்லிய நிலவொளியில்
படையெடுத்து வரும்
பழந்தின்னி வௌவால் கூட்டம்
தோப்பு முழுக்கப் பரவிக்கிடக்கும்
மரத்தின் குளிர்ந்த நிழலிலே
கிளியாந்தட்டின் சுவாரசியம்
புளியமிளாறுடன் அப்பா வரும்வரை
நேற்று மதியம் நண்பர்களுடன்
என் மகன் விளையாடியதும்
அந்த மரத்தின் நிழலில்தானே
பெருவாழ்வு வாழ்ந்த மரம்
நேற்றிரவுப் பேய்க்காற்றில்
வேரோடு சாய்ந்துவிட்டதாமே
விடிந்தும் விடியாததுமாய்
துஷ்டி கேட்கும் பதற்றத்தில்
விரைந்து செல்கிறார் ஊர்மக்கள்
குஞ்சு குளுவான்களோடு
எனக்குப் போக மனமில்லை
என்றும் என்மன வெளியில்
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
குன்றுகளின் நடுவே மாமலைபோல
- ராஜமார்த்தாண்டன்
சொல்லும் பொருளும்
பரவசம் - மகிழ்ச்சிப் பெருக்கு
துஷ்டி கேட்டல் - துக்கம் விசாரித்தல்
நூல் வெளி
ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர். கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர். ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர். சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
இவரது அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலில் உள்ள கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.