Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | உரைநடை: விலங்குகள் உலகம்

பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: விலங்குகள் உலகம் | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu

   Posted On :  11.07.2022 02:08 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு

உரைநடை: விலங்குகள் உலகம்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : உரைநடை: விலங்குகள் உலகம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

உரைநடை உலகம் 

விலங்குகள் உலகம்நுழையும்முன்

வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என அனைத்தும் நிரம்பியது காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாகும். காடுகளின் செழிப்புக்குக் காட்டுயிரிகள் உதவுகின்றன. மனிதனின் முதல் இருப்பிடம் காடுதான். அதன் மரபுத் தொடர்ச்சியாகத் தான் காட்டைப்பற்றியும் காட்டு விலங்குகள் பற்றியும் அறியும் ஆர்வம் மனிதர்களிடம் இன்றும் தொடர்கிறது. காட்டு விலங்குகளின் உறைவிடமான முண்டந்துறை புலிகள் காப்பகத்துள் ஓர் உலா வருவோமா!


பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ஆதினி தன் அம்மாவுக்காகக் காத்திருந்தாள். பணியில் இருந்து வீடு திரும்பிய அம்மாவிடம் 'அம்மா! எனக்குக் காட்டு விலங்குகள் பற்றிய புகைப்படத் தொகுப்பு ஒன்று தயாரிக்க வேண்டி இருக்கிறது. அதற்குத் தாங்கள் தான் உதவ வேண்டும்' என்று கூறினாள். 'அப்படியா! எனக்குத் தெரிந்த வனஅலுவலர் ஒருவர் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பணியாற்றுகிறார். அவரிடம் முன் இசைவு பெற்று நாளை நாம் அங்குச் செல்லலாம். வன அலுவலர் நம்மைக் காட்டுக்குள் அழைத்துச் செல்வார்; அப்பொழுது நீ காட்டு விலங்குகளைப் புகைப்படம் எடுக்கலாம்; அவற்றைப் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். என்ன மகிழ்ச்சிதானே!' என்றார் அம்மா.

மறுநாள் ஆதினியும் அவளது தாய் மலர்விழியும் முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குச் சென்றனர். அங்கு வன அலுவலர் (வனவர்) அவர்களை வரவேற்றார். அவர்கள் இருவரையும் பாதுகாப்பு ஊர்தியில் ஏற்றிக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார். அப்போது.... 

ஆதினி : ! எவ்வளவு பெரிய அடர்ந்த காடு! பார்க்கவே வியப்பாக உள்ளதே! மாமா இந்தக் காட்டைப் பற்றிச் சொல்லுங்களேன்!

வனவர் : மனித முயற்சியின்றி வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள், புல், புதர்கள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம்தான் இக்காடாகும். இடை இடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும்.

மலர்விழி : காடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்தப் புலிகள் காப்பகம் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ளலாமா ஐயா?

வனவர் : இது தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம். 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டுமாடு போன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன. அவற்றை எல்லாம் பார்க்கலாம்.

ஆதினி : இன்று எல்லா விலங்குகளையும் பார்க்க முடியுமா மாமா?

வனவர் : அப்படிச் சொல்ல முடியாது. நாம் பயணம் செய்யும் பாதைக்கு அருகில் வரக்கூடிய விலங்குகளைத்தான் பார்க்க முடியும்.

மலர்விழி : அவை இருக்கும் இடங்களுக்குச் சென்று பார்க்க முடியாதா ஐயா?

வனவர் : எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது. காட்டு விலங்குகளுக்குத் துன்பம் தருவது சட்டப்படி குற்றமாகும். நாம் அரசு அனுமதித்துள்ள தூரம் வரை சென்று வரலாம். கவலை வேண்டாம். அவ்விடத்திற்குள்ளேயே அனைத்து விலங்குகளையும் நம்மால் பார்க்க முடியும்.

(அப்போது தூரத்தில் யானைக் கூட்டம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஆதினி 'யானை! யானை!' என்று மகிழ்ச்சியுடன் கைதட்டினாள். பின்பு அந்த யானைகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.)


ஆதினி : மாமா! யானையைப் பற்றிப் புதிய தகவல்கள் ஏதாவது சொல்லுங்களேன்?

வனவர் : உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆசிய யானை; இன்னொன்று ஆப்பிரிக்க யானை.

ஆதினி : அவை இரண்டுக்கும் என்ன வேறுபாடு மாமா?

மலர்விழி : எனக்குத் தெரியும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத் தந்தம் இல்லை. ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு. சரிதானே ஐயா?

வனவர் : சரியாகச் சொன்னீர்கள்! அது மட்டுமன்றி அவற்றின் உயரம், நிறம், நகம் ஆகியவற்றிலும் சில வேறுபாடுகள் உள்ளன.

ஆதினி : மாமா! யானைகள் எப்போதும் கூட்டமாகத்தான் இருக்குமா?

வனவர் : ஆம் ஆதினி. யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும். இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும். யானைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு ஆகியவற்றிற்காக இடம் பெயர்ந்துகொண்டே இருக்கும். ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவாக உட்கொள்ளும். அதற்குக் குடிக்க அறுபத்தைந்து லிட்டர் தண்ணீர் தேவைப்படும். யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு. அது பாசம் நிறைந்த விலங்கும் கூட.

மலர்விழி : ஆனால் யானைகள் மனிதர்களைத் தாக்குவதாகச் செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றனவே ஐயா?

வனவர் : யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவது இல்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போதுதான் மனிதர்களைத் தாக்குகின்றன. மேலும் யானைக்குக் கண்பார்வை குறைவு; கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி.

(அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் யானைகள் அவ்விடத்தைக் கடந்து சென்றன. ஊர்தி தொடர்ந்து மேலே சென்றது.)

வனவர் : அதோ! அந்த மரத்தின் மீது இருப்பது என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்?

ஆதினி : ! எவ்வளவு பெரிய கரடி. கரடிக்கு மரம் ஏறத்தெரியுமா?

வனவர் : கரடி ஓர் அனைத்துண்ணி . அது பழங்கள், தேன் போன்றவற்றை உண்பதற்காக மரங்களில் ஏறும். உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல் ஆகியவற்றையும் தேடி உண்ணும். கறையான் அதற்கு மிகவும் பிடித்த  உணவு.

தெரிந்து தெளிவோம்

• தமிழ் நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் - மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்

• கோவையிலுள்ள தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வனவியல் (BSc. Forestry), முதுநிலை வனவியல் (MSc. Forestry) ஆகிய படிப்புகள் உள்ளன.

மலர்விழி : தேன் கூட்டைக் கலைக்கும் போது தேனீக்கள் அதைக் கொட்டிவிடாதா ஐயா?

வனவர் : கரடியின் உடலைப் போர்த்தி இருக்கும் அடர்ந்த முடிகள் தேனீக்களிடமிருந்து அதனைக் காப்பாற்றி விடும். நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும்.

(ஆதினி தன் அலைபேசியில் கரடியைப் புகைப்படம் எடுத்துக்கொண்டாள். 'இன்னும் ஒரு புலிகூட நம் கண்ணில் படவில்லையே!' என்று ஆதினி சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது வனவர் ஊர்தியை நிறுத்தினார். சற்றுத் தொலைவில் புல்வெளி மீது புலி ஒன்று படுத்திருந்தது. வனவர் அதை அனைவருக்கும் காட்டினார்.)


ஆதினி : எனக்கு அச்சமாக உள்ளது. புலி நம்மைத் தாக்கிவிட்டால் என்ன செய்வது? வாருங்கள் திரும்பிவிடலாம்.

வனவர் : அச்சம் வேண்டாம் ஆதினி! புலி மனிதர்களைத் தாக்குவதில்லை. இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மை கொண்டது.

ஆதினி : அப்படியா! நான் இங்கிருந்தபடியே புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். மாமா இங்கு ஒரே ஒரு புலி தானே இருக்கிறது.


வனவர் : ஆமாம். புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது. கருவுற்ற புலியானது தொண்ணூறு நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும். அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும்.

ஆதினி : அரிய தகவலாக இருக்கிறதே!

வனவர் : ஆம். புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு. புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே, அதனைப் பண்புள்ள விலங்கு என்று நாங்கள் கூறுவோம். சரி காட்டுக்குள் நமக்கு அனுமதிக்கப்பட்ட இடம் வரைக்கும் வந்து விட்டோம். இனி நாம் அலுவலகம் செல்வோம்.

ஆதினி : 'காட்டுக்கு அரசன்' என்று சிங்கத்தைச் சொல்கிறார்களே! அதுபற்றிச் சொல்லுங்கள் மாமா.

வனவர் : உலகில் ஆசியச் சிங்கம், ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள் வாழ்கின்றன. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் 'கிர் சரணாலயத்தில்’ மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன. நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.

(ஊர்தி அலுவலகம் நோக்கி விரையும் வழியில் ஒரு புள்ளிமான் தன் குட்டியுடன் புல்தரையில் நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் ஆதினி ஊர்தியை நிறுத்தச் சொல்லிக் கீழே இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.)


வனவர் : ஆதினி, இவை புள்ளிமான்கள். இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் எனப் பல வகையான மான்கள் உள்ளன. எல்லாவகை மான்களிலும் நம் நாட்டுப் புள்ளிமான்களே அழகில் சிறந்தவை என்பர்.

(ஆதினியும் அவள் தாய் மலர்விழியும் வனஅலுவலர்க்கு நன்றி கூறி விடை பெற்றனர். ஆதினி, தன் படத்தொகுப்பிற்குத் தேவையான புகைப்படங்களும் குறிப்புகளும் கிடைத்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள்.)


Tags : Term 1 Chapter 2 | 7th Tamil பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu : Prose: Vilangugal ulagam Term 1 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : உரைநடை: விலங்குகள் உலகம் - பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு