சுரதா | பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: காடு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu
(இயல் 2 : கவிதைப் பேழை : காடு)
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வாழை, கன்றை -------------
அ) ஈன்றது
ஆ) வழங்கியது
இ) கொடுத்தது
ஈ) தந்தது
[விடை : அ. ஈன்றது]
2. 'காடெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------
அ) காடு + டெல்லாம்
ஆ) காடு + எல்லாம்
இ) கா + டெல்லாம்
ஈ) கான் + எல்லாம்
[விடை : ஆ. காடு + எல்லாம்]
3. ‘கிழங்கு + எடுக்கும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் --------
அ) கிழங்கு எடுக்கும்
ஆ) கிழங்கெடுக்கும்
இ) கிழங்குடுக்கும்
ஈ) கிழங்கொடுக்கும்
[விடை : ஆ. கிழங்கெடுக்கும்]
நயம் அறிக
பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனை
செய்யுளில் அடி (அல்லது) சீரில் உள்ள சொற்களில் முதல் எழுத்து ஒன்று போல (ஒரே மாதிரி) வருவது மோனை ஆகும்.
எதுகை
செய்யுளில் அடி (அல்லது) சீரில் உள்ள சொற்களில் இரண்டாம் எழுத்து ஒன்று போல (ஒரே மாதிரி) வருவது எதுகை ஆகும்.
இயைபு
செய்யுளில் ஒவ்வோர் அடியின் இறுதியிலும் உள்ள சீரோ எழுத்தோ ஒன்று போல (ஒரே மாதிரி) வருவது இயைபு ஆகும்.
பாடலில் உள்ள மோனைச் சொற்கள்
கார்த்திகை – காடெல்லாம்
பார்த்திட - பார்வை
காடு – காய்கனி
பச்சை – பன்றி
நச்சர – நரியெலாம்
சிங்கம் - சிறுத்தை
பாடலில் உள்ள எதுகைச் சொற்கள்
கார்த்திகை - பார்த்திட – பார்வை
களித்திடவே - குளிர்ந்திடவே
குரங்கு - மரங்கள்
பச்சை - நச்சர
சிங்கம் - எங்கும்
பாடலில் உள்ள இயைபுச் சொற்கள்
ஈன்றெடுக்கும் - நிழல் கொடுக்கும்
கனிபறிக்கும் - தடையிருக்கும் - கிழங்கெடுக்கும்
குறு வினா
1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
காட்டுப்பூக்களுக்குக் கார்த்திகை விளக்கை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்.
2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?
❖ காட்டிலுள்ள மலர்களைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும்.
❖ காடு பல வகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும்.
❖ எல்லோரும் சேர்ந்துமகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.
❖ காட்டு விலங்குகளுக்கு உணவாகக் கனி தரும்.
சிறு வினா
‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
❖ பன்றிகள் காட்டிலுள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.
❖ நரிக் கூட்டம் ஊளையிடும்.
❖ மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
❖ இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.
சிந்தனை வினா
காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன?
❖ பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அஃறிணை உயிர்களுக்குத் தேவையான உறையுள் (தங்குமிடம்) - உணவு ஆகியன காட்டில் இயற்கையாகவே உள்ளன.
❖ மரங்கள், செடி கொடிகள் ஆகியன பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்குத் தங்குமிடம் மற்றும் உணவை இயற்கை அன்னையே வழங்குவதால், காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறுகிறார்.
கற்பவை கற்றபின்
1. காடு என்னும் தலைப்பில் அமைந்த 'கிளிக்கண்ணிப்' பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
2. பின்வரும் கிளிக்கண்ணிப் பாடலைப் பாடி மகிழ்க.
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ! - கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே
நாளில் மறப்பாரடீ.
- பாரதியார்