பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu
இயல் இரண்டு
வாழ்வியல்
திருக்குறள்
நுழையும்முன்
"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்"
என்று திருக்குறளின் பெருமையை ஔவையார் போற்றுகிறார். மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி, அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள். இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை என்பர். அத்தகைய பெருமைமிகு திருக்குறளைப் படிப்போம்.
அழுக்காறாமை
1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
பொருள் : ஒருவர் தன் நெஞ்சில் பொறாமையில்லாத குணத்தையே ஒழுக்க
நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.
2. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
பொருள் : பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.
புறங்கூறாமை
3. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.
பொருள்: ஒருவருக்கு நேர்நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அவர் இல்லாதபோது புறங்கூறுதல் கூடாது.
4. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.*
பொருள்: பிறருடைய குற்றத்தைக் காண்பது போல், தன்னுடைய குற்றத்தையும் காண்பவருடைய வாழ்வில் துன்பம் இல்லை.
அருளுடைமை
5. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
பொருள்: அருளாகிய செல்வமே செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.
6. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.
பொருள்: ஒருவர் தம்மைவிட மெலிந்தவரை துன்புறுத்தும்போது, தம்மைவிட வலிமையுடையவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
வாய்மை
7. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.*
பொருள்: வாய்மை எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
8. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
பொருள்: ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக்கூடாது. அவ்வாறு கூறினால் அவர் நெஞ்சமே அவனை வருத்தும்.
9. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.”
பொருள்: உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.
இறைமாட்சி
10. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.”
பொருள்: பொருள் வரும் வழிகளை அறிதலும், அவ்வழிகளில் பொருள்களைச் சேர்த்தலும், சேர்த்த பொருளைப் பாதுகாத்தலும், காத்த பொருளைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டுச் செலவிடுதலும் சிறந்த அரசின் செயல்களாகும்.
நூல் வெளி
திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று கூறுவர். இவர் முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் போன்ற சிறப்புப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார்.
தமிழ்நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது. இதில் அறம்-38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன. இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.