நெல்லை சு.முத்து | பருவம் 1 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: அறிவியல் ஆத்திசூடி | 6th Tamil : Term 1 Chapter 3 : Enthira ulagam
இயல் மூன்று
கவிதைப்பேழை
அறிவியல் ஆத்திசூடி
நுழையும்முன்
ஆத்திசூடி என்பது அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம். ஔவையின் ஆத்திசூடியை நாம் அறிவோம். பாரதியார் 'புதிய ஆத்திசூடி' என்று காலத்திற்கேற்ற அறிவுரைகளைக் கூறினார். அகர வரிசையில் அறிவியல் அறிவோம்; அகில உலகையும் ஆய்வு செய்வோம்; அனைத்தையும் உலகின் நலத்திற்கு வழங்குவோம்!
அறிவியல் சிந்தனை கொள்
ஆய்வில் மூழ்கு
இயன்றவரை புரிந்துகொள்
ஈடுபாட்டுடன் அணுகு
உண்மை கண்டறி
ஊக்கம் வெற்றிதரும்
என்றும் அறிவியலே வெல்லும்
ஏன் என்று கேள்
ஐயம் தெளிந்து சொல்
ஒருமித்துச் செயல்படு
ஓய்வற உழை
ஔடதமாம் அனுபவம்
- நெல்லை சு.முத்து
சொல்லும் பொருளும்
இயன்றவரை -
முடிந்தவரை
ஒருமித்து -
ஒன்றுபட்டு
ஔடதம் -
மருந்து
நூல் வெளி
"தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியீட்டுள்ளார்.
அறிவியல் ஆத்திசூடி என்னும் நூலின் ஒரு பகுதி இங்கத் தரப்பட்டுள்ளது.