பருவம் 1 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: ஒளி பிறந்தது: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 3 : Enthira ulagam
மதிப்பீடு
1. சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல் கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
விடை
சுதத்திர இந்தியாவின் வெற்றிகள் :
(i) உணவு உற்பத்தியில் தன்னிறைவு.
(ii) தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி.
(iii) எவ்வகையான செயற்கைக்கோளையும் ஏவும் திறன்.
(iv) அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணி. நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி.
(v) பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை ‘அக்னி’ மற்றும் பிரித்வி’ ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி. இவையெல்லாம் சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்.
2. தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?
விடை
தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு : ‘போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் ‘கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் தனக்குப் பெருமகிழ்வை அளித்ததாகக் கலாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கற்பவை கற்றபின்
1. கனவு காணுங்கள் என்பது அப்துல் கலாமின் பொன்மொழி. உங்கள் கனவுகள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
விடை :
வகுப்பில் மாணவர்கள் தங்கள் கனவுகளைப் பற்றிக் கலந்துரையாடுதல்)
மாணவர் 1 : வணக்கம். என் கனவு நன்றாகப் படித்து உலகமே என்னைப் பற்றி அறியும்படி சாதனை புரிய வேண்டும் என்பதுதான்.
மாணவர் 2 : நல்லது. எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறாய்?
மாணவர் 1 : நான் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு அப்துல்கலாம் மாதிரி விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது என் வாழ்க்கை இலட்சியமாகவே எண்ணுகிறேன்.
மாணவர் 2 : நன்று! நன்று! அதுசரி எத்தனையோ விஞ்ஞானிகள் உள்ளனர். நீஎன்ன அப்துல்கலாம் மாதிரி என்று கூறுகிறாய்?
மாணவர் 1 : நன்றாகக் கேட்டாய். அவரை நான் என் முன்மாதிரியாக எண்ணுகிறேன். அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியில் படித்து விஞ்ஞானி ஆனவர்.
மாணவர் 2 : ஆமாம். அவர் காட்சிக்கு எளிமையானவர். நம்மைப் போன்ற மாணவர்களிடம் உரையாடுவதை மிகவும் விரும்பியவர்.
மாணவர் 1 : அதுமட்டுமா? தம்முடைய கடுமையான உழைப்பால் முன்னேறியவர். அவர் சென்ற பணிகளுக்கெல்லாம் அவருடைய உழைப்பும் அவர் கற்ற கல்வியுமே பரிந்துரையாக இருந்துள்ளது.
மாணவர் 2 : அதுசரி. நீ எதிர்காலத்தில் எவற்றில் எல்லாம் மாற்றம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?
மாணவர் 1 : நான் அறிவியல் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வருவேன். அப்துல்கலாம் ஐயா கூறியதைப்போல் நான் கிராமங்களில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்வேன். ஐயா அவர்களின் கனவை நனவாக்க கிராமங்களில் உள்ள இளைஞர்களைக் கனவு காணச் செய்வேன்.
மாணவர் 2 : இளைஞர்கள் என்ன கனவு காண வேண்டும்.
மாணவர் 1 : சொல்கிறேன் கேள். இளைஞர்கள் வாய்மைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். நல்லவற்றை எண்ண வேண்டும். அதன்வழி நடக்க வேண்டும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைக்க வேண்டும். தோல்விக்குத் தோல்வியைத் தர வேண்டும். துன்பத்திற்குத் துன்பத்தைத் தர வேண்டும். அவர்களுடைய கனவுகளாவன “அரும் பெரும் இலட்சியத்துடன் நாளைய வரலாற்றை உருவாக்குவோம்.
நாம் வசிக்கும் கிராமத்தை வளம் பொருந்தியதாக மாற்றுவோம். மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் வேளாண்துறையைத் தேர்ந்தெடுப்போம். வேளாண்மையில் புதுமைகள் செய்வோம். நாட்டின் உயிர் கிராமங்கள் என உணர்ந்து செயல்படுவோம். இடைத்தரகர்கள் இன்றி நேரடி விற்பனை முறையைக் கொண்டு வருவோம்” இளைஞர்கள் இக்கனவை நனவாக்கினால் கட்டாயம் நம் கிராமங்கள் முன்னேறும். அதனைத் தொடர்ந்து நாடும் முன்னேறும்.
மாணவர் 2 : நீ விஞ்ஞானியாக வேண்டும் என்று கூறினாயே. ஏதோ செயற்கைக்கோள், ஏவுகணை என்று கூறுவாய் என எதிர்பார்த்தேன்.
மாணவர் 1 : இதுவும் விஞ்ஞானம்தான். நிலம் விவசாயத்திற்கு ஏற்றார்போல் உள்ளதா எனச் சோதித்து அதற்கேற்றபடி மாற்றுவது, நிலத்தடி நீர் பெருகுவதற்குச் செய்ய வேண்டிய வழிமுறைகள், நல்ல விதைகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை ஆய்வு செய்து விவசாயம் மேம்படச் செய்ய வேண்டும். அம்முறையில் விவசாயம் செய்து பல மடங்கு விளைச்சல் பெறுவதற்கு ஆவன செய்தல் வேண்டும். இவையெல்லாம் அறிவியல் சார்ந்ததே. இயற்கை முறையில் வேளாண்மை செய்து மக்கள் நோய் நொடியின்றி வாழ வழி வகுப்பேன்.
மாணவர் 2 : உன்னுடைய கனவு நனவாக வாழ்த்துகள்.
மாணவர் 1 : நன்றி!
2. நீங்கள் நேர்காணல் செய்ய விரும்பும் ஒருவரைக் குறிப்பிடுக. அவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களைப் பட்டியலிடுக.
விடை
நான் நேர்காணல் செய்ய விரும்பும் நபர் Dr.APJ அப்துல் கலாம் அவர்கள்.
வினாக்கள் :
(i) அறிவியல் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்படக்காரணம் எது?
(ii) சிறு வயதில் என்னவாக வேண்டும் என விரும்பினீர்கள்?
(iii) உங்களுக்குப் பிடித்தத் துறை எது? (அறிவியல் தவிர)
(iv) உங்களுக்கு முன் மாதிரியாக யார் இருந்தனர்?
(v) வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய சில யோசனைகள் கூறுங்கள் ஐயா?
3. நீங்கள் அப்துல் கலாமிடம் கேட்க விரும்பும் வினாக்களை எழுதுக.
கேள்விகள் :
(i) நீங்கள் சிறு வயதில் விஞ்ஞானியாக வருவேன் என்று நினைத்துப் பார்த்ததுண்டா?
(ii) உங்கள் ஆராய்ச்சியில் உங்களைக் கவர்ந்தது எது?
(iii) ஒரு சிறந்த குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
(iv) நம்முடைய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பங்கள் விவசாயத்திற்கு எந்த அளவு பயன்படுகிறது?
(v) நாட்டில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய வழி சொல்லுங்கள்?
(vi) உங்களுக்குப் பிடித்தத் தலைவர் யார்? ஏன்?
(vii) உங்க ளுக்குப் பிடித்தப் புத்தகம் எது? ஏன்?
(viii) “ஊழல் இல்லாத நாடு” சாத்தியப்படுமா?
(ix) இந்த உலகிலே மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது?
(x) எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்?