பருவம் 1 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 6th Tamil : Term 1 Chapter 3 : Enthira ulagam
திருக்குறள்
கடவுள் வாழ்த்து (1)
1) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
2) கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
3) மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4) வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
5) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6) பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7) தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
8) அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.
9) கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
10) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
வான்சிறப்பு (2)
1) வான்நின்று உலகம் வழங்கி வருதலான்
தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று
2) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
3) விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
4) ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
5) கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
6) விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
7) நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்.
8) சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
9) தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
10) நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
நீத்தார் பெருமை (3)
1) ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
2) துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
3) இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
4) உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து.
5) ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
6) செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்குஅரிய செய்கலா தார்.
7) சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
8) நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
9) குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
10) அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்.
மக்கட் பேறு (7)
1) பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
2) எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.
3) தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
4) அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
5) மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
6) குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
7) தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
8) தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
9) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
10) மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
அன்புடைமை (8)
1) அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
2) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
3) அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
4) அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
5) அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
6) அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
7) என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
8) அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.
9) புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
10) அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
இனியவை கூறல் (10)
1) இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
2) அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
3) முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான் ஆம்
இன்சொ லினதே அறம்.
4) துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
5) பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.
6) அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
7) நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
8) சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
9) இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
10) இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று..
வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும். அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறளின் 051 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சீர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன அலகிடுவதற்காக அன்று.
திருக்குறள் கருத்துகளை
மாணவர்களிடையே பரப்புவதற்கான வழிகாட்டுதல்கள்
• நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் திருக்குறளைப் பொருளுடன் கூறலாம்.
• வகுப்பு வாரியாகத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தலாம்.
• இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகளைக் கூறலாம்.
• திருக்குறள் கருத்துகளை விளக்கும் நாடகங்களை நடத்தச் செய்யலாம்.
• திருக்குறள் கருத்துகளை விளக்கும் ஓவியப் போட்டியை நடத்தலாம்.
• குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து வினாடி வினா நடத்தலாம்.
• சான்றோர் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் கருத்துகளை விளக்கலாம்.
• உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள் இசைப்பாடல்கள்,சித்திரக் கதைகள் அசைவூட்டப் படங்கள் ஆகியவற்றை உருவாக்கி அவற்றின் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.