பருவம் 1 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: ஒளி பிறந்தது | 6th Tamil : Term 1 Chapter 3 : Enthira ulagam
இயல் மூன்று
விரிவானம்
ஒளி பிறந்தது
அப்துல் கலாமுடன் நேர்காணல்
நுழையும்முன்
குழந்தைகளிடமும் மாணவர்களிடமும் மிகுந்த அன்பு காட்டியவர் மறைந்த மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம். மாணவர்கள் முன்னேற பல வழிகளை எடுத்துச் சொன்னவர். எதிர்காலம் பற்றிக் கனவுகண்டு, அதை அடைய வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. மாணவர்களோடு பேசுவதை மிகவும் விரும்பிய அவரைச் சந்தித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா? வாருங்கள் அவரிடம் கேட்டிடலாம்; அறிவியலைக் கற்றிடலாம்.
இடம்: தொழில்நுட்பக் கண்காட்சி
மாணவர்கள் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்குகளை ஒவ்வொன்றாகப் பார்வையிட்டுக் கொண்டே வருகின்றனர். அங்கிருக்கும் கலாம் அரங்கு என்னும் பெயர்ப்பலகை அவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அரங்கினுள் ஆர்வத்துடன் நுழைகின்றனர். அங்கு அப்துல் கலாமின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அவற்றைப் பார்வையிட்டு முடித்த நேரத்தில் அங்கே ஒரு பெரிய திரை இருப்பதை காண்கின்றனர். அப்போது.....
அரங்கப் பொறுப்பாளர் : மாணவர்களே இங்கே வாருங்கள்!
(மாணவர்கள் அனைவரும் அகன்ற திரையின் முன் கூடுகின்றனர்)
அரங்கப் பொறுப்பாளர் : அப்துல் கலாம் அவர்களை நீங்கள் காணவேண்டுமா?
மாணவர்கள் : கலாம் ஐயாவைக் காண்பதா! எப்படி?
அரங்கப் பொறுப்பாளர் : பொறுங்கள்! கலாம் அவர்கள் இதோ வருகிறார்.
(திரையில் அப்துல் கலாம் தோன்றுகிறார்)
மாணவர்கள் : கலாம் ஐயா, எங்கள் வினாக்களுக்கு விடை தருவாரா?
அரங்கப் பொறுப்பாளர் :: நிச்சயம் பதில் தருவார்.
மாணவர்கள் : நான் கேட்கிறேன். நான்தான் முதலில் கேட்பேன். எது கேட்டாலும் பதில் சொல்வாரா? (அங்கே ஒரே ஆரவாரம் )
அரங்கப் பொறுப்பாளர் : பொறுங்கள்! உங்கள் வினாக்களை ஒவ்வொருவராகத் திரையை நோக்கிச் சத்தமாகக் கேளுங்கள். ஐயா பதில் தருவார்.
அருண்மொழி : எமுதில் கேள்வியை நான் கேட்கிறேன்.
அறிவியல் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமான முதல் நிகழ்வு எது ஐயா?
(அப்துல் கலாம் பதிலளிக்கிறார்)
அப்துல் கலாம் : நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது என் அறிவியல் ஆசிரியர் பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை விளக்கிக் கூறினார். அன்று முதல், வானில் பறக்க வேண்டும் என்பது என் வாழ்க்கையின் குறிக்கோள் ஆகிவிட்டது. அதுவே என் அறிவியல் ஆர்வத்தின் தொடக்கம்.
தேன்மொழி : அடுத்து நான் கேட்கட்டுமா? உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது ஐயா?
அப்துல் கலாம் : தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும்.
'அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்'
என்னும் குறள் என் வாழ்க்கைக்கு வலுசேர்த்தது. அதுபோல்'லிலியன் வாட்சன்' எழுதிய, விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps) என்னும் நூலையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் படித்தபோது அறிவு, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றேன்.
அப்துல்லா : நீங்கள் பெரிதும் மகிழ்ந்த நிகழ்வு ஏவுகணைச் சோதனைதான் அல்லவா?
அப்துல் கலாம் : இல்லை. போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக்கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் எனக்குப் பெருமகிழ்வை அளித்தது.
இளம்பரிதி : ஐயா சுதந்திர இந்தியாவின் வெற்றிகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
அப்துல் கலாம் :: • உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம்.
• தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம்
• எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.
• அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளோம்.
• நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.
• பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்.
இவற்றையெல்லாம் இந்தியாவின் வெற்றிகளாகக் கருதுகின்றேன்.
நீலன் : இந்த அளவிற்கு முன்னேறியுள்ளோம். ஆனால், மனிதர்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவற்றிற்கான மருந்துகள் இல்லையே! அவற்றைக் கண்டுபிடிக்க என்ன மாதிரியான ஆய்வுகள் நடைபெறுகின்றன ஐயா?
அப்துல் கலாம் :: கடலுக்கு அடியில் மனிதரால் கண்டறியப்படாத ஏராளமான தாவரங்கள், உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து புதிய மூலக்கூறுகளைப் பெற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவை வெற்றிபெறும் போது 'எய்ட்ஸ்' போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு மட்டுமல்லாமல் இனிவரும் புதிய நோய்களுக்கும்கூடத் தடுப்பு மருந்து கண்டறியப்படலாம்.
வான்மதி : நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்தியா எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள் ஐயா?
அப்துல் கலாம் : மூன்று சிறப்புகளைப் பெற்றிருக்கும் என நம்புகிறேன்.
1. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை இருக்கும்.
2. அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போயிருக்கும். ஆயினும், நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும்.
3. செவ்வாய்க்கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.
மேரி : செவ்வாய்க்கோளில் மனிதன் வாழ முடியுமா? சரி. எங்களையெல்லாம் எப்போது நிலவிற்கு அழைத்துச் செல்வீர்கள்?
அப்துல் கலாம் : 525 கிலோ எடையுள்ள ஆளில்லாச் செயற்கைக்கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏவூர்திகளில் மனிதர்களை நிலவிற்கு அனுப்புவோம். எனவே, நிலவிற்குச் செல்லத் தயாராக இருங்கள்.
பாத்திமா : நிலவிற்குச் செல்லலாம் என்றால் சூரியனுக்கும் கூடச் செல்ல முடியுமா ஐயா?
அப்துல் கலாம் : சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால் ஒளியையும் வெப்பத்தையும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. அவ்வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு இன்றைய சூழலில் கவசங்கள் இல்லை. வருங்காலத்தில் அதிகபட்ச வெப்பத்தைத் தாங்கும் கருவிகள் கண்பறியப்படலாம் அப்போது மனிதன் சூரியனையும்கூடச் சென்றடையலாம்.
இளம்பிறை : ஐயா, உலகின் முதல் விஞ்ஞானியாக யாரைக் கூறலாம்? சொல்லுங்களேன்?
அப்துல் கலாம் : அறிவியலின் அடிப்படை, கேள்வி கேட்கின்ற மனப்பான்மைதான். அறிவியல் பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது எல்லாம் இந்தக் கேள்வி கேட்கும் திறனால்தான். குழந்தைகளின் கேள்விகளுக்குத்தான் முடிவே இல்லை. கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். எனவே குழந்தைகளாகிய நீங்கள்தாம் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள்.
கவி அமுதன் : நாங்கள்தான் முதல் விஞ்ஞானிகளா? அப்படியென்றால் வளரும் இந்தியாவிற்கான எங்கள் பங்கு என்னவாக இருக்க வேண்டும் ஐயா?
அப்துல் கலாம் : மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துக் கற்றாலும் அதில் உயர்ந்த குறிக்கோளை மனதில் கொள்ளுங்கள். அக்குறிக்கோளுக்கான அறிவையும் அனுபவத்தையும் சேகரித்துக் கொள்ளுங்கள். கடின உழைப்பால் வெற்றியடையுங்கள். உங்கள் வெற்றி இந்தியாவின் வெற்றிக்கு உதவும்
வெண்பா : வெற்றியை அடையும் வழி எது ஐயா?
அப்துல் கலாம் : இரண்டு வழிகள் உள்ளன.
1. அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள்.
2. வியர்வை! வியர்வை! வியர்வை!
("நன்றி குழந்தைகளே!" என்றபடி திரையில் அப்துல்கலாம் கையசைத்து மெல்ல மறைகிறார். மாணவர்கள் வியந்து நிற்கின்றனர்.)
அரங்கப் பொறுப்பாளர் : என்ன மாணவர்களே! அப்துல் கலாம் ஐயாவிடம் இருந்து உங்களின் எல்லா வினாக்களுக்கும் விடை கிடைத்ததல்லவா? மகிழ்ச்சிதானே?
மாணவர்கள் : மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா!
மாணவ - மாணவியர் புத்தொளி பெற்றவர்களாக அரங்கைவிட்டு வெளியேறுகின்றனர்.