Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: எங்கள் தமிழ்

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் | பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: எங்கள் தமிழ் | 7th Tamil : Term 1 Chapter 1 : Amutha Tamil

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்

கவிதைப்பேழை: எங்கள் தமிழ்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் : கவிதைப்பேழை: எங்கள் தமிழ் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று 

கவிதைப்பேழை 

எங்கள் தமிழ்



நுழையும் முன் 

உலக மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்மொழி. அது மென்மையும் இனிமையும் வளமையும் உடையது; வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது; காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழ்வது. அத்தகு தமிழ்மொழியின் சிறப்பை நாமக்கல் கவிஞரின் பாடல் மூலம் அறிவோம்.

*அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது


கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

 எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்பறமே


அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்

 இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்*

- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்


சொல்லும் பொருளும்

ஊக்கிவிடும்  -  ஊக்கப்படுத்தும்

குறி  -  குறிக்கோள்

விரதம்  –  நோன்பு

பொழிகிற  –  தருகின்ற

பாடலின் பொருள்

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும்  உதவும்.

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும்.

நூல் வெளி  


இப்பாடலின் ஆசிரியரை, நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர். இவர்     தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர். மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.


Tags : by Namakkal kavignar ve.Ramalinganar | Term 1 Chapter 1 | 7th Tamil நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் | பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 1 : Amutha Tamil : Poem: Engal Tamil by Namakkal kavignar ve.Ramalinganar | Term 1 Chapter 1 | 7th Tamil in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் : கவிதைப்பேழை: எங்கள் தமிழ் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் | பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்