பருவம் 1 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 1 : Amutha Tamil
மொழியை ஆழ்வோம்
கேட்க.
தமிழின் சிறப்பைப் பற்றிய அறிஞர்களின் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்க.
பாரதியாரின் சொற்பொழிவுச் செய்தி
தமிழின் சிறப்பை விளக்கும் வண்ணம் காந்தியடிகளிடம் பாரதி நடத்திய கடித உரையாடல் ஒன்றைத் தனது சொற்பொழிவில் எடுத்துரைத்தார்.
காந்தியடிகளின் சொற்பொழிவை நான் கேட்க நேர்ந்தது. வெள்ளையனே வெளியேறு என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். அவருடைய சொற்பொழிவைப் பற்றி நான் ஒரு மடல் எழுதினேன். அதில் மகாத்மாவே நேற்றைய சொற்பொழிவில், வெள்ளையனே வெளியேறு என்ற பேச்சு அருமை. ஆனால் ஒரு வருத்தம்.வெள்ளையனை வெளியேறச் சொல்லி, தங்கள் சொற்பொழிவு இந்தியிலோ குஜராத்தியிலோ அமையாமல் ஆங்கிலத்தில் இருந்தது மிகுந்த வருத்தம் அளிக்கின்றது என்று எழுதியிருந்தேன். அதற்கு காந்தியார் மறுமடலில், நான் ஆங்கிலத்தில் பேசியதை நீங்கள் மடலில் குறிப்பிடும் போது ஏன் நீங்களும் ஆங்கிலத்தில் எனக்கு மடல் எழுதினீர் என்றார். அதற்கு நான், யாருடைய மனமும் புண்படும் படியான செய்தியைப் பேசுவதாக இருந்தாலும், எழுதுவதாக இருந்தாலும் என்னுடைய தாய்மொழியாகிய தமிழைப் பயன்படுத்த மாட்டேன் என்று மடல் எழுதினேன் என்றார்.
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
நான் அறிந்த பழமொழிகள்
தமிழன்னையின் தாழ்பணிந்து வணக்கங்கள் பலசொல்லி என்னுரையை ஆரம்பம் செய்கின்றேன். நான் அறிந்தபழமொழிகள் பற்றிச் சில நிமிடங்கள் பேசுகின்றேன். பழமொழி என்பது என்ன? நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய மொழிகள் பழமொழி ஆகும். அவை அனுபவமொழிகள். வாழ்க்கையை வளப்படுத்துவன.
அவற்றின் வழிநம் எண்ணங்களையும் வாழக்கைப் பாதையையும் முடிவு செய்யலாம். யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே, இக்கதைக்கு அக்கரை பச்சை, ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும், ஆலும் வேலும் பல்லுக்குறுதிநாளும் இரண்டும் சொல்லுக்குறுதி, காற்றுள்ளபோதே தூற்றிக் கொள், அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் ஆகியன நான் அறிந்த பழமொழிகள் ஆகும். இவை போல பல்லாயிரக்கணக்கான பழமொழிகள் நம் நாட்டில் உள்ளன. அதனை அறிந்து பயன்படுத்துவோம். நன்றி. வணக்கம்.
சொல்லக் கேட்டு எழுதுக.
1. நமது தாய்மொழி தமிழாகும்.
2. தமிழ்மொழி இனிமை, வளமை, சீர்மை மிக்கது.
3. தமிழுக்குத் தலைகொடுத்தவன் குமணவள்ளல்.
4. தமிழ்மொழி பேச்சுமொழி, எழுத்துமொழி என்னும் இரண்டு கூறுகளை உடையது.
5. பேச்சு மொழியை உலகவழக்கு என்றும் கூறுவர்.
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.
கோதை கவிதையைப் படித்தாள்.
வினா
கோதை எதைப் படித்தாள்?
கவிதையைப் படித்தது யார்?
கோதை கவிதையை என்ன செய்தாள்?
அழுத்தம் தர வேண்டிய சொல்
கவிதை
கோதை
படித்தாள்
படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக.
உயர்திணை அஃறிணை உயர்திணை
கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.
வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்.
உயர்திணை
முகிலன்
கயல்விழி
தலைவி
ஆசிரியர்
சுரதா
அஃறிணை
வயல்
குதிரை
கடல்
புத்தகம்
மரம்
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
தாய்மொழிப் பற்று
(முன்னுரை - மொழி பற்றிய விளக்கம் - தாய்மொழி - தாய்மொழிப் பற்று - தாய்மொழிப் - பற்றுக் கொண்ட சான்றோர் - சாதுவன் வரலாறு - நமது கடமை - முடிவுரை)
முன்னுரை:
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை' என்பது சான்றோர் பெருமக்கள் பலரின் வாக்காகும். நம்மைப் பெற்ற தாயைவிட சிறந்ததொரு தெய்வம் கிடையாது என்பதால் தான் ‘தாய்மொழி' என்று அழைத்தனர். தாய்மொழியின் மீது பற்றுதலோடு இருக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.
மொழி பற்றிய விளக்கம்:
நமது எண்ணங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளவும், நமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் உதவுவது மொழியாகும். மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் நாகரிக உயர்வுக்கும் அடிப்படையாக அமைவது மொழியாகும்.
தாய்மொழிப் பற்று:
குழந்தைக்குத் தாய் முதன் முதலில் சொல்லித் தரும் மொழியே தாய்மொழி. குழந்தைகளுக்குத் தாய்மொழி இயல்பாகவே வரும். கனவிலும் நனவிலும் தாய்மொழியே இயல்பாக அமையும். அவரவர் தாய்மொழி மீது தணியாத பற்று கொள்ள வேண்டும்.
தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர்:
இன்றைய காலத்தில் தாய்மொழியில் பேசவும் படிக்கவும் பலர் தயங்குகின்றனர். இது பெற்ற தாயைப் புறந்தள்ளி வைப்பது போன்றதாகும். எண்ணற்ற உலகம் போற்றும் சான்றோர்கள் தத்தம் தாய்மொழியிலேயே செயல்களைச் செய்து உயர்ந்துள்ளனர். பாரதியார், காந்தியடிகள், இரவீந்திரநாத் தாகூர் எனப் பலரும் பன்மொழி அறிந்திருந்த போதும், சிறந்த உலகம் போற்றும் படைப்புகளைத் தம் தாய்மொழியிலேயே தந்தனர். சந்திரபோஸ் தன் மகன் ஜெகதீஸ் சந்திரபோஸைத் தாய்மொழி கற்பிக்கும் பள்ளியிலேயே படிக்க வைத்தார். அவர் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த அறிவியல் அறிஞரானர்.
சாதுவன் வரலாறு:
ஆதிரையின் கணவன் சாதுவன் வணிகம் செய்ய கப்பற் பயணம் செய்கின்றான் பெருங்காற்றால் கப்பல் கவிழ்ந்து விடுகின்றது. சாதுவன் பிழைத்து நாகர்கள் வாழும் தீவை அடைகின்றான். அவர்கள் மனித மாமிசம் உண்பவர்கள். சாதுவனைத் தின்ன நினைக்கின்றனர். ஆனால் சாதுவன், நாகர்கள் பேசும் மொழியைப் பேசுகின்றான். நாகர்கள் சாதுவனுக்கு வேண்டியதைக் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். தாய்மொழியே எதையும் மாற்றும்.
நமது கடமை:
❖ அந்நிய மொழி மோகம் கொண்டு அலையாமல் தாய்மொழியின் மீது அளவற்ற பற்றுதல் வைக்கவேண்டும்.
❖ தாய்மொழி வழிக் கல்வி பெறுதலே சிறப்பு என்பதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
❖ கல்லூரிக் கல்வி வரைத் தாய்மொழியிலேயே பயில வேண்டும்.
முடிவுரை:
ஆங்கில வழிக்கல்வி மூலம் நாம் நம்மை இழந்து கொண்டு இருக்கின்றோம். நமது பண்பாடு, கலாச்சாரத்தை மீட்டுக் கொண்டுவரத் தாய்மொழிப் பற்றுடன் தாய்மொழியில் பயில்வது இன்றைய காலத்தில் அவசியமாகும்.
மொழியோடு விளையாடு
தொகைச் சொற்களை விரித்து எழுதுக.
(எ.கா) இருதிணை - உயர்திணை, அஃறிணை.
முக்கனி - மா, பலா, வாழை.
முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.
நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.
ஐவகைநிலம் - குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை.
அறுசுவை - இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு.
கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக.
இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.
1. அரசுக்கு தவறாமல் வரி செலுத்த வேண்டும்.
ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.
2. மழலை பேசும் மொழி அழகு.
இனிமைத் தமிழ் மொழி எமது.
3. அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை நடை பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி நடை.
4. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்.
எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்.
5. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் சென்றனர்.
குழந்தையை மெதுவாக நட என்போம்.
6. நீதி மன்றத்தில் தொடுப்பது வழக்கு.
'நீச்சத் தண்ணி குடி' என்பது பேச்சு வழக்கு.
நிற்க அதற்குத் தக...
என் பொறுப்புகள்....
1. கடிதங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதும்போது திருத்தமான மொழி நடையையே கையாள்வேன்.
2. பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைகளைப் போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. ஊடகம் - Media
2. மொழியியல் - Linguistics
3. ஒலியியல் – Phonology
4. இதழியல் - Journalism
5. பருவ இதழ் - Magazine
6. பொம்மலாட்டம் - Puppetry
7. எழுத்திலக்கணம் - Orthography
8. உரையாடல் - Dialogue
இணையத்தில் காண்க
சிறந்த மேடைப் பேச்சாளர்களின் பெயர்களை இணையத்தில் தேடித் தொகுத்து வருக.