Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: காற்றே வா!

பாரதியார் | இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: காற்றே வா! | 10th Tamil : Chapter 2 : Uyirin osai

   Posted On :  21.07.2022 08:49 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை

கவிதைப்பேழை: காற்றே வா!

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : கவிதைப்பேழை: காற்றே வா! - பாரதியார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயற்கை

கவிதைப் பேழை

காற்றே வா!

- பாரதியார்



நுழையும்முன்

நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் இயற்கையை நாம் என்றேனும் உற்றுப் பார்க்கிறோமா? இருளில் நடந்தாலும் வானத்து விண்மீன்களையும் நம்முடனேயே நடந்துவரும் நிலவையும் கண்டு மகிழ்கிறோமா? காடு, மலை, அருவி, கதிரவன் இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு. நீரின்றி அமையாது உலகு என்றாற் போல காற்றின்றி அமையாது உலக உயிரியக்கம் என்பதையே வெவ்வேறு கோணங்களில் காலந்தோறும் கவிஞர்கள் பலரும் பாடிவருகிறார்கள்.


காற்றே, வா.

மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை

மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;

இலைகளின் மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த

ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.

காற்றே, வா.

எமது உயிர் - நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு

நன்றாக வீசு.

சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.

பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்

நின்று வீசிக் கொண்டிரு.

உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.

உன்னை வழிபடுகின்றோம்.

பாரதியார் கவிதைகள்

 

சொல்லும் பொருளும்:

மயலுறுத்து - மயங்கச்செய்

ப்ராண - ரஸம் - உயிர்வளி

லயத்துடன் – சீராக

 

நூல் வெளி

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்; குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்; இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.

 

தெரிந்து தெளிவோம்

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று..

 

கற்பவை கற்றபின்...

1. இவ்வசன கவிதையில் இடம்பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களும் கட்டளைச் சொற்களும் (வாசனையுடன் வா, அவித்து விடாதே......) கவிதையின் உட்பொருளை வெளிப்படுத்தத் துணைநிற்பது குறித்துப் பேசுக.

2. "திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட

தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்

சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு

தக்கை யடிக்குது காற்று - தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட" - பாரதியார்

இது போன்ற இயற்கையொலிகளை உணர்வுடன் வெளிப்படுத்தும் கவிதைகளைத் திரட்டி வந்து வகுப்பறையில் படித்துக்காட்டுக.

 

Tags : by Bharathiyar | Chapter 2 | 10th Tamil பாரதியார் | இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 2 : Uyirin osai : Poem: Kaatra vaa by Bharathiyar | Chapter 2 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : கவிதைப்பேழை: காற்றே வா! - பாரதியார் | இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை