காளமேகப்புலவர் | பருவம் 2 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்) | 7th Tamil : Term 2 Chapter 3 : Kalai vannam
இயல் மூன்று
கவிதைப்பேழை
கீரைப்பாத்தியும் குதிரையும்
(இரட்டுற மொழிதல்)
நுழையும்முன்
தமிழில் சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்த பலவகையான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் இரட்டுறமொழிதலும் அவற்றுள் ஒன்று. இதனைச் 'சிலேடை’ என்றும் கூறுவர். அவ்வகையில் அமைந்த சுவையான பாடல் ஒன்றை அறிவோம்.
கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியாகு மே*
- காளமேகப்புலவர்
சொல்லும் பொருளும்
வண்கீரை - வளமான கீரை
முட்டப்போய் - முழுதாகச் சென்று
மறித்தல் - தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
பரி - குதிரை
கால் - வாய்க்கால், குதிரையின் கால்
பாடலின் பொருள்
கீரைப்பாத்தியில்
மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்; மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.
குதிரை
வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்; கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.
இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப்பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.
நூல் வெளி
காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம். சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. அந்நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.