Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: ஒரு வேண்டுகோள்

தேனரசன் | பருவம் 2 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஒரு வேண்டுகோள் | 7th Tamil : Term 2 Chapter 3 : Kalai vannam

   Posted On :  12.07.2022 08:39 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம்

கவிதைப்பேழை: ஒரு வேண்டுகோள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் : கவிதைப்பேழை: ஒரு வேண்டுகோள் - தேனரசன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

கவிதைப்பேழை

ஒரு வேண்டுகோள்



நுழையும்முன்

கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன. ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான். கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அது மானுடத்தைப் பேச வேண்டும். இதனைக் கலைஞர்களிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கிறார் இப்பாடலின் ஆசிரியர். அதனை அறிவோம்.


கலையுலகப் பிரும்மாக்களே 

மண்ணின் வனப்புக்குப் 

புதிய அழகுகள் சேர்ப்பவர்களே 

ஒரு மானுடத்தின் வேண்டுகோள்


நீங்கள் சிற்பிகளாகப் 

பாறை உடைப்பவனின் 

சிலை வடித்தால் 

வியர்வை நெடி வீசட்டும் அதில் 


வயல்வெளி உழவனின் 

உருவ வார்ப்பெனில் 

ஈரமண் வாசம் 

இருக்க வேண்டும் அதில் 


ஓவியர்களாகத் 

தாய்மையின் பூரிப்பைச் சித்திரமாக்கினால் 

அவள் முகப்பொலிவில் 

வழித்தெடுக்குமாறு இருக்கட்டும் 

கரிசன பாச உணர்வுகள் 


ஒரு சின்ன மழலைச் சித்திரமா 

பால் மணம் கமழ வேண்டும் 

அதன் பளிங்கு மேனியில் 


ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களா

அட்லாண்டிக் சமுத்திர அலைகளா 

அமேசான் காடுகளா

பனிபடர் பள்ளத்தாக்குகளா

தொங்கும் அதிசயத் தோட்டங்களா

இயற்கையின் பிரமிப்பு எதுவும்

கலைவடிவு கொள்ளலாம்


ஏதாயினும் இதை நினைவில் கொள்ளுங்கள்

மானுட அடையாளம் ஒன்று 

இருக்கவேண்டும் அதில் கட்டாயம் 

மனிதன் இல்லாத - இணையாத 

எந்த வனப்பும் வனப்பில்லை 

அவன் கலவாத எதிலும்ஜீவ உயிர்ப்பில்லை .... 

--தேனரசன்


சொல்லும் பொருளும் 

பிரும்மாக்கள் படைப்பாளர்கள் 

நெடி -  நாற்றம் 

மழலை குழந்தை

வனப்பு - அழகு

பூரிப்பு மகிழ்ச்சி

மேனி - உடல்

பாடலின் பொருள்

கலையுலகப் படைப்பாளர்களே! மண்ணின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களே! உங்களுக்கு ஒரு மனிதச் சமுதாயத்தின் வேண்டுகோள்!

நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீசவேண்டும். உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும். சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.

நூல் வெளி 

தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இவர் வானம்பாடி, குயில்,  தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும். மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்

பாடப்பகுதியிலுள்ள கவிதை பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.


Tags : by Theanarasan | Term 2 Chapter 3 | 7th Tamil தேனரசன் | பருவம் 2 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 2 Chapter 3 : Kalai vannam : Poem: Oru Vendukol by Theanarasan | Term 2 Chapter 3 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் : கவிதைப்பேழை: ஒரு வேண்டுகோள் - தேனரசன் | பருவம் 2 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம்