ஒளவையார் | பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: மூதுரை: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 2 Chapter 1 : Kanena thakum
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர்கள் நூல்களை --------- கற்க வேண்டும்.
அ) மேலோட்டமாக
ஆ) மாசுற
இ) மாசற
ஈ) மயக்கமுற
[விடை : இ) மாசற]
2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது -
அ) இடம் + மெல்லாம்
ஆ) இடம் + எல்லாம்
இ) இட + எல்லாம்
ஈ) இட + மெல்லாம்
[விடை : ஆ) இடம் + எல்லாம்]
3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மாச + அற
ஆ) மாசு + அற
இ) மாச + உற
ஈ) மாசு + உற
[விடை : ஆ) மாசு + அற]
4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்
அ) குற்றமில்லாதவர்
இ) குற்றமல்லாதவர்
ஆ) குற்றம்இல்லாதவர்
ஈ) குற்றம் அல்லாதவர்
[விடை : அ) குற்றமில்லாதவர்]
5. சிறப்பு
+ உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சிறப்பு:உடையார்
ஆ) சிறப்புடையார்
இ) சிறப்படையார்
ஈ) சிறப்பிடையார்
[விடை : ஆ) சிறப்புடையார்]
குறுவினா
கற்றவரின் பெருமைகளாக முதுரை கூறுவன யாவை?
விடை
(i) மன்னனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கற்றவரே சிறந்தவர்.
(ii) மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்க்குச்
சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
சிந்தனை வினா
1. கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக.
விடை
கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகள் :
(i) கல்லாதவர்
எவராலும் மதிக்கப்பட மாட்டார். வீட்டில் பெரிய பிள்ளையாக இருந்தாலும் கற்கவில்லையெனில்
பெற்றோர் அவனை ஒரு பொருட்டாக
நினைக்கமாட்டார்கள்.
(ii) நன்மை
தீமைகளைப் பகுத்தறிய இயலாது. எல்லோராலும் இகழப்படுவான்.
2. கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?
விடை
(i) கல்வி மனிதனை உயர்த்துகிறது. கல்வியும் செல்வமாகக் கருதத்தக்கது.
(ii) கல்வி பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும்.
(iii) கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது.
(iv) அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப்
பெறுவான். மன்னனையும் குறை இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக்
கற்றவரே சிறந்தவராகக் கருதப்படுவர்.
(v) மன்னனாக இருந்தாலும் அவனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு
கிடைக்கும். ஆனால் கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு கிடைக்கும்.
கற்பவை கற்றபின்
1. கல்வியே அழியாச் செல்வம் என்னும் தலைப்பில்
பேசுக.
விடை
வணக்கம்! கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு
ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை. கல்வியை யாராலும் அழிக்க முடியாத செல்வமாகும்.
இளமையில் கல்’ என்பதை உணர்ந்திருக்க வேண்டும். இளம்வயதில் படிப்பது
நம் மனதில் அப்படியே பசுமரத்தாணி போல் பதிந்துவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கல்விதான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. அறியாமை
எனும் இருட்டைக் கல்வி எனும் ஒளிதான் போக்குகிறது. நல்ல புத்தகங்கள் அறிவு கண்ணைத்
திறக்கும் ஒரு திறவுகோல். கல்வி ஒருவனை மட்டும் மேம்படுத்தாது. அவனைச் சார்ந்தவர்களையும், சமுதாயத்தையும், ஏன் நாட்டையுமே அது உயர்த்த உதவும்.
கல்வியின் பெருமையைப் பழம் பாடல் ஒன்று அழகாகப்
பேசும். கல்வி என்பது அழியாத செல்வம். அது காலத்தால் அழியாது. கள்வராலும் கவர முடியாதது.
வெள்ளத்தால் போகாது. தீயினாலும் வேகாது. கல்விச் செல்வம் தவிர ஏனைய செல்வங்களைக் கள்வர்கள்
திருடிச் சென்றுவிட முடியும்;
வெள்ளம் அடித்துக் கொண்டு போகும். தீ தனது செந்நிற
ஒளியாய் பொசுக்க முடியும்.
ஒரு முறை பாரதியார் எட்டயபுர அரச சபையில் இருந்து
தன் ஊருக்குத் திரும்பிச் சென்றார். அரசர் கொடுத்த பணத்தில் நல்ல நல்ல நூல்களை வாங்கி
வந்தார். பாரதியின் மனைவி செல்லம்மா தன் கணவர் தமக்குப் பிடித்ததாய் வாங்கி வருவார்
என்று ஆசையாக வாசலில் நின்றவாறு அவரது வரவை எதிர்நோக்கிப் பார்த்திருந்தார். ஆனால், தன் கணவரோ புத்தகங்களாக வாங்கி வந்ததைக் கண்டு
சினம் கொள்கிறாள். சினம் கொண்ட மனைவியைப் பாரதியார் சமாதானப்படுத்துகிறார்.
கல்விச் செல்வம் அள்ள அள்ளக் குறையாது. கொடுத்தாலும்
குறையாது. எடுத்தாலும் குறையாது.
“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு”
இறைக்க இறைக்கச் சுரக்கும் நீர் போல அறிவானது
கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்கும். பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை! உங்கள்
குழந்தைக்குக் கல்வியின் – அவசியத்தைப் புரிய வையுங்கள். கற்பதில் விருப்பத்தை
உண்டாக்குங்கள். “ஒரு பெண் கல்வி கற்றால் அது அவளது குடும்பத்துக்கே
கற்பிப்பதுபோல்” என்பார் பாரதிதாசன்.
கல்விதான் எது நல்லது? எது கெட்டது? எனப் பகுத்தறியக்
கற்றுக் கொடுக்கும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு என்பதையும் உணர வைக்கும். எந்த
விஷயத்தையும் உற்று நோக்கக் கற்றுக் கொடுக்கும். சமயோசிதமாக நடந்து கொள்ளவும் கல்வியறிவே
கைக் கொடுக்கிறது. இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன் நன்றி! வணக்கம்.
2. கல்வி பற்றிய பழமொழிகள் அல்லது பாடல் அடிகள்
எவையேனும் இரண்டனைப் பெரியோர்களிடம் கேட்டு எழுதி வருக.
விடை
(i) ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
(ii) ஓதுவது ஒழியேல்.
(iii) அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
(iv) இளமையில் கல்வி, கல் மேல் எழுத்து.
(v) எண் இல்லாதவர் கண் இல்லாதவர். எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
(vi) ஓதார்க்கு இல்லை. உணர்வோடு ஒழுக்கம்.
(vii) கல்வி அழகே அழகு.
(viii) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
(ix) கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே
இனிப்பு.