Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | உரைநடை: கல்விக்கண் திறந்தவர்

பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: கல்விக்கண் திறந்தவர் | 6th Tamil : Term 2 Chapter 1 : Kanena thakum

   Posted On :  30.06.2023 06:49 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும்

உரைநடை: கல்விக்கண் திறந்தவர்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும் : உரைநடை: கல்விக்கண் திறந்தவர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

உரைநடை உலகம்

கல்விக்கண் திறந்தவர்


 

நுழையும்முன்

கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன. தொடக்கத்தில் ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி மாணவர்கள் கல்வி கற்றனர். பிறகு நாள்தோறும் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கல்வி கற்றனர். அதன் பிறகு பொதுவான ஓர் இடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர். இவையே இன்றைய பள்ளிக்கூடங்கள் ஆகும். முன்பு ஒரு சில ஊர்களில் மட்டும் பன்னிகள் இருந்தன. இன்று பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவரைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

 

நிகழ்வு – 1


சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அவ்வழியாக மகிழுந்து ஒன்று அங்கே வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் கீழே இறங்கினார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களைக் கூப்பிட்டு, அவர்கனோடு உரையாடினார்.

"என்னடா தம்பிகளா! பள்ளிக்கூடம் போகாமல் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருக்கீங்க? ஏன் பள்ளிக்கூடம் விடுமுறையா?" என்று அவர் கேட்டார்.

பள்ளிக்கூடமா? அதெல்லாம் எங்க ஊரில் கிடையாது" என்றனர் சிறுவர்கள். "அப்படியா? உங்க ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தா நீங்கள் எல்லாரும் படிப்பீங்களா?" என்று கேட்டார் அவர்.

"ஓ! படிப்போமே!' என்றனர் சிறுவர்கள்.

ஊர்தோறும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் அவர்,

நிகழ்வு-2

பள்ளி விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றார் அவர். அப்போது மாணவர்களிடம் "படிப்பறிவு இருந்தால்தான் நாடு முன்னேற்றம் அடையும். எனவேதான் நாடு முழுக்க ஐம்பதாயிரம் பள்ளிகளைத் திறக்க முடிவு பண்ணியிருக்கோம். குழந்தைங்க நீங்க எவ்வளவு தூரம் நடந்து போவிங்க? நீண்ட தூரம் நடந்தால் களைச்சுப்போயிடுவீங்க. அப்புறம் எப்படிப் படிக்க முடியும்? அதனால் ஒரு மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி, மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி, ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி இருக்கணும்னு திட்டம்" என்று பேசினார்.

நிகழ்வு-3

பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தேசியக் கொடி ஏற்ற அவரை அழைத்தனர் அவர் கொடி ஏற்றும்போது அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர். அப்போது மாணவன் ஒருவன் மயங்கி விழுந்தான். அனைவரும் பதற்றம் அடைந்தனர். தண்ணீர் தெளித்து அவனை எழுப்பினர்,

மயக்கம் தெளிந்த சிறுவனிடம் அவர் 'காலையில் சாப்பிட்டாயா?" என்று கேட்டார். அவன் " எதுவும் சாப்பிடவில்லை" என்றான். அதற்கு அவர் "ஏன்?" என்று கேட்டார். மாணவன் "சாப்பிட எதுவும் இல்லை' என்று பதில் கூறினான். இதற்குப் பிறகு படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வேனை உணவாவது வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார் அவர்.

நிகழ்வு – 4


பரமக்குடி தரைப்பாலத்தைப் பார்த்த போது உடன் வந்த கல்வி அதிகாரியிடம் பேசினார். இந்தக் காட்டாற்றில் தண்ணீர் போகும் போது, இந்தப் பக்கத்து மாணவர்கள் எப்படிப் பள்ளிக்கூடத்திற்குப் போவார்கள்?" என்றார். "மழைக்காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள் ஐயா' என்றார் அதிகாரி, 'அப்போ! இந்தப் பக்கம் ஒரு பள்ளிக்கூடம் கட்டலாமே?" என்றார் அவர். 'கல்வித்துறை விதியின்படி மூன்று மைல் தூரத்திற்குள் பள்ளிக்கூடம் இருந்தால், பக்கத்தில் வேறு பள்ளிக்கு அனுமதி கிடையாதே!' என்று அதிகாரி கூறினார். அவர் முடிப்பதற்குள் "நீங்க இந்தக் காட்டாற்றைக் காரணம் காட்டுங்க. இந்தப் பக்கம் ஒரு பள்ளிக்கூடம் கட்டஅனுமதி கேளுங்க. நான் ஏற்பாடு செய்கிறேன்" என்றார் அவர்,

ஆடு மேய்க்கும் சிறுவர்களையும் பள்ளிக்கூடம் செல்ல வழி செய்தவர் யார் தெரியுமா? குழந்தைகள் பள்ளி செல்வதற்காக நீண்ட தூரம் நடக்கக்கூடாது என்று எண்ணியவர் யார் தெரியுமா?

பள்ளிக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்று நினைத்தவர் யார் தெரியுமா?

கல்வித்துறை விதிகளை மாணவர்களின் நலனுக்காக மாற்றி, அவர்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிக்கூடங்களைத் திறக்கச் செய்த சிந்தனையாளர் யார் தெரியுமா?

அவர்தான் கல்விக் கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் மனதாரப் பாராட்டப்பட்ட மறைந்த மேனாள் முதல்வர் காமராசர் ஆவார்.

தெரிந்து தெளிவோம்


காமராசரின் சிறப்புப் பெயர்கள்

பெருந்தலைவர்

படிக்காத மேதை

கர்மவீரர்

கருப்புக் காந்தி

ஏழைப்பங்காளர்

தலைவர்களை உருவாக்குபவர்

காமராசரின் கல்விப்பணிகள்

காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார். மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார். பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.

மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார். தமிழ்நாட்டில் பல கிளைநூலகங்களைத் தொடங்கினார். இவ்வாறு கல்விப்புரட்சிக்கு வித்திட்டவர் காமராசரே ஆவார்.

தெரிந்து தெளிவோம்.

காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள்

மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.

காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.

சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

Tags : Term 2 Chapter 1 | 6th Tamil பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 1 : Kanena thakum : Prose: Kalvikkan thirandhavar Term 2 Chapter 1 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும் : உரைநடை: கல்விக்கண் திறந்தவர் - பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும்