Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: ஓடை

வாணிதாசன் | இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஓடை | 8th Tamil : Chapter 2 : Idilla iyarkai

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை

கவிதைப்பேழை: ஓடை

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : கவிதைப்பேழை: ஓடை - வாணிதாசன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கவிதைப்பேழை

ஓடை

 

நுழையும்முன்

மனித வாழ்வு இயற்கையோடு இயைந்தது. கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும்,சுத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை. அவ்வாறு மனத்திற்கு இன்பமூட்டும் கவிதை ஒன்றைக் கற்போம் வாருங்கள்!


*ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! - கல்லில்

உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்

(ஓடை ஆட...)

 

பாட இந்த ஓடை எந்தப்

பள்ளி சென்று பயின்ற தோடி!

ஏடு போதா இதன்கவிக் கார்

ஈடு செய்யப் போரா ரோடி!

 (ஓடை ஆட...)

 

நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி

நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்

கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்

குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி

 (ஓடை ஆட...)

 

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச்

செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்"

(ஓடை ஆட....)

- வாணிதாசன்

 

சொல்லும் பொருளும்

தூண்டுதல் - ஆர்வம் கொள்ளுதல்

ஈரம் - இரக்கம்

முழவு - இசைக்கருவி

பயிலுதல் - படித்தல்

நாணம் - வெட்கம்

செஞ்சொல் - திருந்திய சொல்

நன்செய் - நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்

புன்செய் - குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

வன்னைப்பாட்டு - நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்

பாடலின் பொருள்

நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத் முடியும்?

நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது. சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வன்னைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது.

 

நூல் வெளி


தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிகுரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழ்ச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும்.

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

Tags : by Vanidasan | Chapter 2 | 8th Tamil வாணிதாசன் | இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 2 : Idilla iyarkai : Poem: Odai by Vanidasan | Chapter 2 | 8th Tamil in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை : கவிதைப்பேழை: ஓடை - வாணிதாசன் | இயல் 2 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை