Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: பாஞ்சை வளம்

வகானமகாமர்ல | பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பாஞ்சை வளம் | 7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu

   Posted On :  11.07.2022 04:02 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு

கவிதைப்பேழை: பாஞ்சை வளம்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு : கவிதைப்பேழை: பாஞ்சை வளம் - வகானமகாமர்ல | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

கவிதைப்பேழை

பாஞ்சை வளம்


நுழையும்முன்

தமிழ்நாட்டில் பல வகையான நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் கதைப்பாடல் என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும். அது சமூகக்கதைப் பாடல், வரலாற்றுக்கதைப் பாடல், புராணக்கதைப் பாடல் எனப் பலவகைப்படும். வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைக் கூறும் கதைப்பாடலின் ஒரு பகுதியை அறிவோம்.


சுத்தவீர சூரன் கட்ட பொம்முதுரை 

துலங்கும் பாஞ்சை வளங்கள் சொல்வேன்


நாட்டு வளங்களைச் சொல்லுகிறேன் - பாஞ்சைக்

கோட்டை வளங்களைக் கேளுமையா 

கோட்டைகளாம் சுத்துக் கோட்டைகளாம் - மதில் 

கோட்டைகள்தான் கெட்டி வேலைகளாம்


வீட்டிலுயர் மணிமேடைகளாம் - மெத்தை

வீடுகளா மதிலோடை களாம் 

பூட்டுங்கதவுகள் நேர்த்திகளாம் - பணப் 

பொக்கிஷ வீடும்பார் சாஸ்திகளாம்


ஆசார வாசல் அலங்காரம் - துரை

ராசன் கட்டபொம்மு சிங்காரம் 

ராசாதி ராசன் அரண்மனையில் - பாஞ்சை

நாட்டரசன் கொலுவீற்றிருந்தான்


விந்தையாகத் தெருவீதிகளும் - வெகு

விஸ்தாரமாய்க் கடை வாசல்களும் 

நந்தவனங்களும் சந்தனச் சோலையும் - அங்கே

நதியும் செந்நெல் கமுகுகளும், 


வாரணச் சாலை ஒருபுறமாம் - பரி

வளரும் சாலை ஒருபுறமாம் 

தோரண மேடை ஒருபுறமாம் - தெருச் 

சொக்கட்டான் சாரியல்ஓர் புறமாம்


சோலையில் மாங்குயில் கூப்பிடுமாம் - வளம்

சொல்லி மயில் விளையாடிடுமாம் 

அன்பு வளர்ந்தேறும் பாஞ்சாலநாட்டில் - சில 

அதிசயம் சொல்கிறேன் கேளுமையா


முயலும் நாயை விரட்டிடுமாம் - நல்ல

முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே 

பசுவும் புலியும் ஒரு துறையில் - வந்து 

பால்குடிக்குந் தண்ணீர் தான் குடிக்கும்.


கறந்த பாலையுங் காகங் குடியாது - எங்கள்

கட்டபொம்மு துரை பேரு சொன்னால் 

வரந்தருவாளே சக்க தேவி - திரு 

வாக்கருள் செய்வாளே சக்க தேவி


சொல்லும் பொருளும் 

சூரன் -   வீரன் 

பொக்கிஷம் -   செல்வம் 

சாஸ்தி -   மிகுதி 

விஸ்தாரம் -   பெரும்பரப்பு

வாரணம் -  யானை 

பரி -   குதிரை

சிங்காரம் –   அழகு

கமுகு -   பாக்கு


பாடலின் பொருள்

குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் இருந்து ஆட்சி செய்யும் பாஞ்சாலங்குறிச்சியின் வளங்களைக் கூறுகின்றேன்.

அந்நாட்டின் வளத்தையும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வளத்தையும் கேளுங்கள். அந்நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.

வீடுகள் தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடிவீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும்.

அரண்மனை வாயில் முறைப்படி அழகுபடுத்தப்பட்டு இருக்கும். அழகு மிகுந்த அரசனாகிய கட்டபொம்மன் அரசவையில் வீற்றிருப்பான்.

புதுமையான தெருவீதிகளும் பெரும்பரப்பில் அமைந்த கடைகளும் இருக்கும். பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும்.

யானைக் கூடமும் குதிரைக் கொட்டிலும் ஒருபுறம் இருக்கும். தோரணங்கள் கட்டப்பட்ட மேடையும் தாயம் ஆடுவதற்கான இடமும் ஒருபுறம் இருக்கும்.

சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும். அன்பு வளரும் நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் நிகழும் சில விந்தைகளைச் சொல்கிறேன்.

வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும். பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.

மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது.

சக்கமாதேவி பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருவாக்கு அருள்வாள்.


நூல் வெளி 

கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன. அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நம் பாடப்பகுதி நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.


Tags : by Vakanamahamarla | Term 1 Chapter 3 | 7th Tamil வகானமகாமர்ல | பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu : Poem: Paanjai valam by Vakanamahamarla | Term 1 Chapter 3 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு : கவிதைப்பேழை: பாஞ்சை வளம் - வகானமகாமர்ல | பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு