Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்

பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் | 7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu

   Posted On :  11.07.2022 04:12 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு

உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு : உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

உரைநடை உலகம் 

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்நுழையும்முன்

தமது தொண்டால் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த தலைவர்கள் பலர். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டோர் பலர். சமுதாயப் பணி செய்தோர் பலர். அரசியல் பணி செய்தோர் பலர். இவை அனைத்தையும் ஒருசேரச் செய்து புகழ் பெற்ற தலைவர் ஒருவரைப் பற்றி அறிவோம்.


தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் பசும்பொன் . முத்துராமலிங்கத்தேவர். இவர் 'வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர்; உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர்; சுத்தத் தியாகி' என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்

இளமைக்காலம்

முத்துராமலிங்கத்தேவர் கி.பி.(பொ..) 1908 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் முப்பதாம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோர் உக்கிர பாண்டியத்தேவர் - இந்திராணி அம்மையார். இவர் இளமையிலேயே அன்னையை இழந்ததால் இசுலாமியத் தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்

முத்துராமலிங்கத்தேவர் தன் தொடக்கக்கல்வியைக் கமுதியிலும் உயர்நிலைக் கல்வியை மதுரை பசுமலைப் பள்ளியிலும் இராமநாதபுரத்திலும் பயின்றார். இவர் இராமநாதபுரத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அவ்வூரில் பிளேக் நோய் பரவியதால் அவரது படிப்பு பாதியில் நின்றது. அதன்பிறகு தாமாகவே நிறைய நூல்களைப் படித்துத் தமது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார்

பல்துறை ஆற்றல்

முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச்சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பலதுறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார். முத்துராமலிங்கத்தேவர் இளமையிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கு 

முத்துராமலிங்கத்தேவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். தமது பேச்சாற்றலால் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். மேடைகளில் அவர் ஆற்றிய வீர உரையைக் கேட்ட மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர். அதனால் அச்சமடைந்த ஆங்கில அரசு பலமுறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்குத் தடை விதித்தது. வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் பாலகங்காதர திலகர். அவரைப்போலவே தென்னாட்டில் அச்சட்டத்திற்கு ஆட்பட்ட தலைவர் முத்துராமலிங்கத்தேவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது விடுதலை வேட்கையை அறிந்த திரு. வி. கலியாணசுந்தரனார் தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியுள்ளார்

நேதாஜியுடன் தொடர்பு

வங்கச்சிங்கம் என்று போற்றப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவரைத் தமது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்றுக் கி.பி.(பொ..) 1939 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் ஆறாம் நாள் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார். நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர். விடுதலைக்குப்பின் நேதாஜி என்னும் பெயரில் வார இதழ் ஒன்றையும் நடத்தினார்.

பேச்சாற்றல்

தமது பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தவர் முத்துராமலிங்கத்தேவர். அவர் முதன் முதலில் சாயல்குடி என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் மூன்று மணிநேரம் உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராசரும் இருந்தார். 'இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை; முத்துராமலிங்கத்தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்' என்று காமராசர் மகிழ்ந்தார்.

தெரிந்து தெளிவோம்

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவர் தோன்றி மறைந்த அக்டோபர் முப்பதாம் நாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எடுக்கப்படுகிறது. தமிழகச் சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அரசு சார்பாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நாடளுமன்ற வளாகத்திலும் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசால் 1995 இல் தபால் தலை வெளியிடப்பட்டது.


மேலும் தலைவர்கள் பலர் முத்துராமலிங்கத்தேவரின் பேச்சாற்றலைப் பாராட்டியுள்ளனர். 'தென்னாட்டுச் சிங்கம் என்று தேவரைச் சொல்லுகிறார்களே, அது சாலப்பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்ததுஎன்று அறிஞர் அண்ணாவும் அவரைப் புகழ்ந்துரைத்துள்ளார். 'முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது; உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர் வழக்கம்' என்று மூதறிஞர் இராஜாஜி பாராட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் இவர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டின. அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளை அனைவரும் பாராட்டினர்

தேர்தல் வெற்றிகள்

மக்களின் பேராதரவு பெற்ற தலைவராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். 1937 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது இலண்டனில் பாரிஸ்டருக்குப் படித்துவந்த தோழர் கே.டி.கே.தங்கமணி, 'இந்தியத் தேர்தலில் இராமநாதபுரம் மன்னரை எதிர்த்துப் போட்டியிட்ட தேவர் அவர்களின் வெற்றியையும் பொப்பிலி அரசரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.வி.கிரி அவர்களின் வெற்றியையுமே இந்திய மாணவர்கள் எதிர்பார்த்திருந்தோம்' எனக் குறிப்பிட்டிருந்தார். 1946 இல் போட்டியின்றி வெற்றிபெற்றார். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். 1962 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக, பரப்புரை செய்ய இயலாதபோதிலும் தேர்தலில் வெற்றிபெற்றார்

குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாடு

ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது குற்றப்பரம்பரைச் சட்டம் ஆகும். பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதும் அச்சட்டத்தை நீக்குவதற்காக மக்களைத் திரட்டிப் பலவேறு போராட்டங்களை நடத்தினார் முத்துராமலிங்கத்தேவர். 1934 ஆம் ஆண்டு மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். அவரது தொடர் போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது.

தெரிந்து தெளிவோம்

முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள்

தேசியம் காத்த செம்மல், வித்யா பாஸ்கர், பிரவசன கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்தசமய மேதை.

ஆலய நுழைவுப் போராட்டம்

அக்காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல ஒரு சாராருக்குத் தடை இருந்தது. அத்தடையை எதிர்த்து 1939 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் எட்டாம் நாள் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார். அதனை எதிர்த்து அர்ச்சகர்கள் ஆலயப்பணியைப் புறக்கணித்தனர். தேவர் திருச்சுழியில் இருந்து அர்ச்சகர்கள் இருவரை அழைத்துவந்து ஆலய நுழைவுப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்தார்

விவசாயிகள் தோழர்

ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகள் துயர்துடைக்கப் பாடுபட்டார். உழுபவர்களுக்கே நிலம் என்றார். தமக்குச் சொந்தமாக 31 சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களை குத்தகை இல்லாமல் உழுபவர்க்கே பங்கிட்டுக் கொடுத்தார். அவற்றை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அளித்து மகிழ்ந்தார்

கூட்டுறவுச் சிந்தனையாளர்

கமுதியில் வியாபாரிகள் விவசாய உற்பத்திப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச்செய்தார்

தொழிலாளர் தலைவர்

1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார். மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் .ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு திங்கள் சிறைத் தண்டனை பெற்றார். உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப் பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார். பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்

சிறை வாசம்

சுதந்திரப் போராட்டத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர் போன்ற சிறைகளில் சிறைவைக்கப்பட்டிருந்தார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மத்திய பிரதேசத்தின் தாமோ என்னும் நகரில் உள்ள இராணுவச்சிறையில் அடைக்கப்பட்டுப் போர் முடிந்தபிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்.  

பெண்களைத் தெய்வமாக மதித்துப் போற்றியவர்

தேவர் 1936, 1955 ஆகிய ஆண்டுகளில் இரண்டுமுறை பர்மா சென்றிருந்தார். பர்மாவில் புத்த பிட்சுகளில் உயர்ந்தவர்களுக்குப் பெண்கள் தங்கள் கூந்தலை நடைபாதையாக விரித்து வரவேற்பு அளிப்பது வழக்கம். தேவர் பர்மா சென்றிருந்தபோது அவருக்கும் அத்தகைய வரவேற்பு அளிக்க முன்வந்தனர். "இது பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது" என்று கூறி, அதனை ஏற்க மறுத்துவிட்டார்

தெரிந்து தெளிவோம்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாள்கள் 20,075. சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறையில் கழித்த நாள்கள் 4000. தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினைச் சிறையில் கழித்த தியாகச் செம்மல் முத்துராமலிங்கத்தேவர் ஆவார்.

நாடு போற்றும் நன்மகன்

பொதுத்தொண்டுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதித் திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழ்ந்தார் முத்துராமலிங்கத்தேவர். அவர் விவேகானந்தரின் தூதராக, நேதாஜியின் தளபதியாக, சத்தியசீலராக, முருகபக்தராக, ஆன்மிகப் புத்திரராக, தமிழ்பாடும் சித்தராக, தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக, நீதிவழுவா நேர்மையாளராக, புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணனாக, பக்தியில் பரமஹம்சராக, இந்தியத் தாயின் நன்மகனாக விளங்கினார்.

இத்தகைய பெருமை வாய்ந்த முத்துராமலிங்கத்தேவர் கி.பி.(பொ..) 1963 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் முப்பதாம் நாளில் இவ்வுலகை விட்டு நீங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.


Tags : Term 1 Chapter 3 | 7th Tamil பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu : Prose: Desiyam kaatha chammal pasumpon oo Muthuramalingathevar Term 1 Chapter 3 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு : உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் - பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு