Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: பட்டமரம்

கவிஞர் தமிழ்ஒளி | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பட்டமரம் | 9th Tamil : Chapter 2 : Uyirukku wer

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்

கவிதைப்பேழை: பட்டமரம்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் : கவிதைப்பேழை: பட்டமரம் - கவிஞர் தமிழ்ஒளி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயற்கை

கவிதைப் பேழை 

பட்ட மரம்

- கவிஞர் தமிழ்ஒளி



நுழையும்முன் 

நம் முன்னோரின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது. அவர்கள் மரம், செடி, கொடிகளையும் போற்றிக்காத்தனர். கால மாற்றத்தில் இவ்வாழ்வு சிறிது சிறிதாக மறைந்துகொண்டே வருகிறது. மரம் நுழையும்முன் என்பது மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாதது. மரங்கள் இல்லை என்றால் நமக்கு உயிர்வளி கிடைக்காமல் போய்விடும். அவ்வகையில் பட்டுப்போன மரமொன்று கவிஞர் ஒருவரின் உள்ளத்தில் ஏற்படுத்திய குமுறலை வெளிப்படுத்தும் இக்கவிதை, மரங்களை வளர்த்துப் பேணிக் காத்திட வேண்டும் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது.



மொட்டைக் கிளையொடு 

நின்று தினம்பெரு

மூச்சு விடும்மரமே!

வெட்டப் படும்ஒரு

நாள்வரு மென்று

விசனம் அடைந்தனையோ?

குந்த நிழல்தரக்

கந்த மலர்தரக்

கூரை விரித்தஇலை!

வெந்து கருகிட

இந்த நிறம்வர

வெம்பிக் குமைந்தனையோ?

கட்டை யெனும்பெயர்

உற்றுக் கொடுந்துயர்

பட்டுக் கருகினையே!

பட்டை யெனும்உடை

இற்றுக் கிழிந்தெழில் 

முற்றும் இழந்தனையே!

காலம் எனும்புயல்

சீறி எதிர்க்கக்

கலங்கும் ஒருமனிதன்

ஓலமி டக்கரம்

நீட்டிய போல்இடர்

எய்தி உழன்றனையே!

பாடும் பறவைகள்

கூடி உனக்கொரு

பாடல் புனைந்ததுவும்

மூடு பனித்திரை

யூடு புவிக்கொரு

மோகங் கொடுத்ததுவும் ஆடுங் கிளைமிசை

ஏறிச் சிறுவர்

குதிரை விடுத்ததுவும்

ஏடு தருங்கதை

யாக முடிந்தன! 

இன்று வெறுங்கனவே!


சொல்லும் பொருளும் 

குந்த - உட்கார, கந்தம் - மணம் 

மிசை - மேல் , விசனம் – கவலை

இலக்கணக்குறிப்பு 

வெந்து, வெம்பி, எய்தி - வினையெச்சங்கள் 

மூடுபனி - வினைத்தொகை, 

ஆடுங்கிளை – பெயரெச்சத் தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

விரித்த - விரி + த் + த் + அ

விரி - பகுதி த் - சந்தி 

த் - இறந்தகால இடைநிலை

அ - பெயரெச்ச விகுதி

குமைந்தனை - குமை + த்(ந்) + த் + அன் + ஐ 

குமை - பகுதி 

த் - சந்தி. த் - ந் ஆனது விகாரம் 

த் - இறந்தகால இடைநிலை, அன் - சாரியை 

ஐ - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி


நூல் வெளி

கவிஞர் தமிழ்ஒளி (1924-1965) புதுவையில் பிறந்தவர். பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர்: மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர். நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை. இப்பாடப்பகுதி தமிழ் ஒளியின் கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.


Tags : by Kavignar Tamil oli | Chapter 2 | 9th Tamil கவிஞர் தமிழ்ஒளி | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 2 : Uyirukku wer : Poem: Patta maram by Kavignar Tamil oli | Chapter 2 | 9th Tamil in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் : கவிதைப்பேழை: பட்டமரம் - கவிஞர் தமிழ்ஒளி | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்