Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: புறநானூறு

குடபுலவியனார் | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: புறநானூறு | 9th Tamil : Chapter 2 : Uyirukku wer

   Posted On :  19.08.2023 04:24 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்

கவிதைப்பேழை: புறநானூறு

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் : கவிதைப்பேழை: புறநானூறு - குடபுலவியனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயற்கை – உ 

கவிதைப் பேழை

புறநானூறு

- குடபுலவியனார்



நுழையும்முன்

நிலம், நீர், காற்று என்பவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும். இயற்கை நமக்குக் கொடையாகத் தந்திருக்கும் இவற்றை உரிய முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும். நீரின் இன்றியமையாமையை உணர்ந்த நம் முன்னோர்கள், நீர்நிலைகளை உருவாக்குபவர்களை "உயிரை உருவாக்குபவர்கள்" என்று போற்றினர்.


வான் உட்கும் வடிநீண் மதில், 

மல்லல் மூதூர் வய வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் 

ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி, 

ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த 

நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றுஅதன் 

தகுதி கேள்இனி மிகுதி ஆள!


நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் 

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! 

உண்டி முதற்றே உணவின் பிண்டம்; 

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; 

நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு 

உடம்பும் உயிரும் படைத்திசினோரே!*


வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் 

வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் 

இறைவன் தாட்கு உதவாதே ! அதனால் 

அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே; 

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத் 

தட்டோர் அம்ம ! இவண் தட்டோரே! 

தள்ளாதோர் இவண் தள்ளா தோரே!

(புறம் 18:11 – 30)

(பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது) 

திணை: பொதுவியல் துறை: முதுமொழிக்காஞ்சி


விண்ணை முட்டும் திண்ணிய நெடுமதில் 

வளமை நாட்டின் வலிய மன்னவா 

போகும் இடத்திற்குப் பொருள் 

உலகம் வெல்லும் ஒரு தனி ஆட்சி

வாடாத புகழ் மாலை வரவேண்டுமென்றால்

தகுதிகள் இவைதாம் தவறாது தெரிந்துகொள் 

உணவால் ஆனது உடல் 

நீரால் ஆனது உணவு 

உணவு என்பது நிலமும் நீரும் 

நீரையும் நிலத்தையும் இணைத்தவர் 

உடலையும் உயிரையும் படைத்தவர் 

புல்லிய நிலத்தின் நெஞ்சம் குளிர 

வான் இரங்கவில்லையேல்

யார் ஆண்டு என்ன 

அதனால் எனது சொல் இகழாது 

நீர்வளம் பெருக்கி நிலவளம் விரிக்கப் 

பெற்றோர் நீடுபுகழ் இன்பம் பெற்றோர் 

நீணிலத்தில் மற்றவர் இருந்தும் இறந்தும் 

கெட்டோர் மண்ணுக்குப் பாரமாய்க் கெட்டோர்


பொதுவியல் திணை 

வெட்சி முதலிய புறத்திணைகளுக் கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.

முதுமொழிக்காஞ்சித் துறை 

அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல்.


சொல்லும் பொருளும் 

யாக்கை - உடம்பு, புணரியோர் - தந்தவர், புன்புலம் - புல்லிய நிலம், தாட்கு - முயற்சி, ஆளுமை; தள்ளாதோர் இவண் தள்ளாதோரே - குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.

பாடலின் பொருள் 

வான்வரை உயர்ந்த மதிலைக் கொண்ட பழைமையான ஊரின் தலைவனே! வலிமை மிக்க வேந்தனே! நீ மறுமை இன்பத்தை அடைய விரும்பினாலோ உலகு முழுவதையும் வெல்ல விரும்பினாலோ நிலையான புகழைப் பெற விரும்பினாலோ செய்ய வேண்டியன என்னவென்று கூறுகிறேன். கேட்பாயாக!

உலகில் உள்ள யாவற்றையும் மிகுதியாகக் கொண்டு விளங்கும் பாண்டிய நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.

உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர். நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது. அதனால், நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாகக் கடைப்பிடிப்பாயாக.

நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்.

இலக்கணக்குறிப்பு 

மூதூர், நல்லிசை, புன்புலம் - பண்புத்தொகைகள்; நிறுத்தல் - தொழிற்பெயர் ; அமையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். நீரும் நிலமும், உடம்பும் உயிரும் - எண்ணும் மைகள்; அடு போர் - வினைத்தொகை.

கொடுத்தோர் - வினையாலணையும் பெயர்.

பகுபத உறுப்பிலக்கணம்

நிறுத்தல் - நிறு + த் + தல்

நிறு - பகுதி

த் - சந்தி

தல் - தொழிற்பெயர் விகுதி

கொடுத்தோர் - கொடு +த் + த் + ஓர்

கொடு - பகுதி

த் - சந்தி

த் - இறந்தகால இடைநிலை

ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி


நூல்வெளி

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. இது பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது. இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து 

உளம்தொட்டு உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப் 

பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்

ஏகும் சொர்க்கத்து இனிது

- சிறுபஞ்சமூலம் 64

Tags : by Kudapulaviyanar | Chapter 2 | 9th Tamil குடபுலவியனார் | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 2 : Uyirukku wer : Poem: Puranaanuru by Kudapulaviyanar | Chapter 2 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் : கவிதைப்பேழை: புறநானூறு - குடபுலவியனார் | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்