Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: பெரியபுராணம்

சேக்கிழார் | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பெரியபுராணம் | 9th Tamil : Chapter 2 : Uyirukku wer

   Posted On :  19.08.2023 04:23 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்

கவிதைப்பேழை: பெரியபுராணம்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் : கவிதைப்பேழை: பெரியபுராணம் - சேக்கிழார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயற்கை

கவிதைப் பேழை

பெரியபுராணம்

- சேக்கிழார்



நுழையும்முன்

வரப்புயர நீர் உயரும்; நீருயர நெல் உயரும்; நெல்லுயரக் குடி உயரும். உயர்ந்த குடியாக, நாடெல்லாம் நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது. காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது பெரிய புராணம்; வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற் கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது.



திருநாட்டுச் சிறப்பு

1. மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு 

பூவி ரித்த புதுமதுப் பொங்கிட 

வாவி யிற்பொலி நாடு வளந்தரக் 

காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால் (பா.எ.59) 

சொல்லும் பொருளும்: மா - வண்டு; மது - தேன் ; வாவி பொய்கை.


2. மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக் 

கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்

தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்

வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார் (பா.எ.63) 

சொல்லும் பொருளும்: வளர் முதல் - நெற்பயிர் ; தரளம் - முத்து; பணிலம் - சங்கு; வரம்பு - வரப்பு.


3. காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு 

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை 

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன 

நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்* (பா.எ.67) 

சொல்லும் பொருளும்: கழை - கரும்பு ; கா - சோலை ; குழை - சிறு கிளை; அரும்பு - மலர் மொட்டு; மாடு - பக்கம்; நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள் ; கோடு - குளக்கரை.


4. அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில் 

துன்னும் மேதி படியத் துதைந்தெழும் 

கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன 

மன்னு வான்மிசை வானவில் போலுமால் (பா.எ.69) 

சொல்லும் பொருளும்: ஆடும் - நீராடும் ; மேதி - எருமை ; துதைந்து எழும் - கலக்கி எழும்; கன்னி வாளை - இளமையான வாளைமீன்.


5. அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் 

பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார் 

சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யாப்பார் 

விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார் (பா.எ.73) 

சொல்லும் பொருளும்: சூடு - நெல் அரிக்கட்டு ; சுரிவளை - சங்கு ; வேரி - தேன்.


6. சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக் 

காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம் 

ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல் 

போல்வலங் கொண்டு சூழும் காட்சியின் மிக்க தன்றே. (பா.எ.74) 

சொல்லும் பொருளும்: பகடு - எருமைக்கடா ; பாண்டில் - வட்டம் ; சிமயம் - மலையுச்சி.


7. நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்தம் எங்கும் 

கோளிசா லந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும் 

தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்

நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும். (பா.எ.78)

சொல்லும் பொருளும்: நாளிகேரம் - தென்னை ; நரந்தம் - நாரத்தை ; கோளி - அரசமரம் ; சாலம் - ஆச்சா மரம் ; தமாலம் - பச்சிலை மரம்; இரும்போந்து - பருத்த பனைமரம் ; சந்து - சந்தன மரம் ; நாகம் - நாகமரம் ; காஞ்சி - ஆற்றுப்பூவரசு


பாடலின் பொருள்

1. காவிரிநீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக்கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. நீர்நிலைகள் நிறைந்த நாட்டுக்கு வளத்தைத் தரும் பொருட்டுக் காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

2. நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக் கண்ட உழவர் இதுதான் களை பறிக்கும் பருவம் என்றனர். அவ்வாறே களைகளைக் களைந்து செல்லும் உழத்தியரின் கால்களில் குளிர்ந்த முத்துகளை ஈனும் சங்குகள் இடறின. அதனால், இடை தளர்ந்து வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அசையுமாறு மென்மையாக நடந்து அருகில் உள்ள வரப்பினை அடைவர்.

3. காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளன. சோலைகள் எங்கும் குழைகளில் (செடிகளின் புதிய கிளைகளில், புதிய தளிர்களில்) மலர் அரும்புகள் உள்ளன.

பக்கங்களில் எங்கும் கரிய குவளை மலர்கள் மலர்ந்துள்ளன. வயல்களில் எங்கும் நெருக்கமாகச் சங்குகள் கிடக்கின்றன. நீர் நிலையின் கரையெங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன. குளங்கள் எல்லாம் கடலைப்போன்ற பரப்பை உடையன. அதனால், நாடு முழுதும் நீர்நாடு என்று சொல்லத்தக்கதாய் உள்ளது. இத்தகைய சிறப்புடைய சோழநாட்டிற்குப் பிற நாடுகள் ஈடாக மாட்டா.

4. அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால், அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும். இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.


5. அரியப்பட்ட செந்நெற்கட்டுகளை அடுக்கிப் பெரிய போராகக் குவிப்பர். மிகுதியாகப் பிடிக்கப்பட்ட பலவகை மீன்களையும் நீண்ட குன்றைப்போல் குவிப்பர்.

வளைந்த சங்குகள் ஈன்ற முத்துகளையும் குன்றைப் போல் உயர்த்திக் கூட்டுவர். தேன் வடியும் விரிந்த மலர்த்தொகுதியை மலைபோல் குவித்து வைப்பர்.

6. நெல்கற்றைகள் குவிந்த பெரிய மலைபோன்ற போரை மேலேயிருந்து சாயச் செய்வர். பெரிய வண்டிகளைச் செலுத்தும் கருமையான எருமைக்கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும். இத்தோற்றமானது கரிய மேகங்கள் பெரிய பொன்மலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற காட்சிபோல உள்ளது. இத்தகைய காட்சிகள் அங்கு மிகுதியாகத் தோன்றும்.

7. அந்நாட்டில் எங்கும் தென்னை , செருந்தி, நறுமணமுடைய நரந்தம் போன்றவை உள்ளன. அரச மரம், கடம்ப மாம், பச்சிலை மரம், குளிர்ந்த மலரையுடைய குரா மரம் போன்றவை எங்கும் வளர்ந்துள்ளன. பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை, சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம், நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சி, மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளர்ந்துள்ளன.

இலக்கணக்குறிப்பு

கருங்குவளை, செந்நெல் - பண்புத் தொகைகள்.

விரிமலர் - வினைத்தொகை 

தடவரை - உரிச்சொல் தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

பாய்வன - பாய் + வ் + அன் + அ

பாய் - பகுதி வ் - எதிர்கால இடைநிலை, அன் - சாரியை 

அ - பலவின்பால் வினைமுற்று விகுதி


நூல் வெளி 

சுந்தரரின் திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையைக் கூறுகிறது. இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார்நம்பியால் எழுதப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்துமூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம். இதன் பெருமை காரணமாக இது பெரிய புராணம் என்று அழைக்கப்படுகிறது. 

கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார், சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார். 'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று இவரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.


Tags : by Chakilaar | Chapter 2 | 9th Tamil சேக்கிழார் | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 2 : Uyirukku wer : Poem: Periyapuranam by Chakilaar | Chapter 2 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர் : கவிதைப்பேழை: பெரியபுராணம் - சேக்கிழார் | இயல் 2 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிருக்கு வேர்