Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: புதுமை விளக்கு

பொய்கை ஆழ்வார் | பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: புதுமை விளக்கு | 7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு

கவிதைப்பேழை: புதுமை விளக்கு

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : கவிதைப்பேழை: புதுமை விளக்கு - பொய்கை ஆழ்வார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கவிதைப்பேழை

புதுமை விளக்கு



நுழையும்முன் 

உள்ளத்தூய்மையோடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு. இறைவழிபாட்டில் சடங்குகளை விட உள்ளத் தூய்மையே முதன்மையானது. இயற்கையையும் தம் உள்ளத்து அன்பையும் விளக்காக ஏற்றி வழிபட்ட சான்றோர்களின் பாடல்களைக் கற்று மகிழ்வோம்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக 

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய 

சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை 

இடர்ஆழி நீங்குகவே என்று*

- பொய்கை ஆழ்வார்


சொல்லும் பொருளும் 

வையம் - உலகம் 

வெய்ய - வெப்பக்கதிர் வீசும் 

சுடர்ஆழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்

இடர்ஆழி - துன்பக்கடல் 

சொல் மாலை - பாமாலை

பாடலின் பொருள்

பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன்.

நூல் வெளி 

பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக 

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புஉருகி 

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு 

ஞானத்தமிழ் புரிந்த நான்

- பூதத்தாழ்வார்


சொல்லும் பொருளும்

தகளி  - அகல்விளக்கு 

ஞானம் - அறிவு

நாரணன் - திருமால்

பாடலின் பொருள்

ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.

நூல் வெளி 

பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல்பாடலாகும்.

தெரிந்து தெளிவோம்

ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (அந்தம் - முடிவு, ஆதி - முதல்).

இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

தெரிந்து தெளிவோம்

திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார். பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.


Tags : by Poikai Aalwar | Term 3 Chapter 2 | 7th Tamil பொய்கை ஆழ்வார் | பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku : Poem: Puthumai vilakku by Poikai Aalwar | Term 3 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : கவிதைப்பேழை: புதுமை விளக்கு - பொய்கை ஆழ்வார் | பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு