Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | உரைநடை: பல்துறைக் கல்வி

இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: பல்துறைக் கல்வி | 8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila

   Posted On :  12.07.2023 03:30 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில

உரைநடை: பல்துறைக் கல்வி

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : உரைநடை: பல்துறைக் கல்வி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் நான்கு

உரைநடை உலகம்

பல்துறைக் கல்வி

 

நுழையும்முன்

கேடில் விழுச்செல்வம் கல்வி. மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய் விளங்குவது கல்வி ஆகும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியிலும் அதைச் சீர்திருத்தி இட்டுச் செல்வதிலும் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது. மனித ஆற்றலை மேம்படுத்தவும் பண்பாட்டினைக் காக்கவும் அறிவியலை வளர்க்கவும் நாட்டுப்பற்றை ஊட்டிடவும் சான்றோர் பலர் பெரிதும் முயன்றனர். அவ்வகையில் திரு.வி.க.வின் கல்விச் சீர்திருத்தச் சிந்தனைகளை அறிவோம்.


அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கவ்வி எனப்படும். மனிதர்களது வாழ்வில் உடலோம்பலுடன் அறிவோம்பலும் நிகழ்ந்து வரல் வேண்டும். அறிவோம்பலுக்குக் தேவை. அக்கல்விப் பயிற்சிக்குரிய பருவம் இளமை என்பதை விளக்க வேண்டுவதில்லை. இது பற்றியே இளமையில் கல் என்னும் முதுமொழி பிறந்தது.

ஏட்டுக்கல்வி

இந்நாளில் ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது. ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது. இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது. குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. நானடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகிறது. இது கல்வியாகுமா?

ஏட்டுக் கல்வி மட்டுமன்றித் தொழிற்கல்வி முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே. கல்வித்துறைகள் பல திறத்தன. அவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் இயல்புக்குப் பொருந்தியதாகத் தோன்றும். அப்பொருந்திய ஒன்றில் சிறப்பு அறிவு பெறவும் பிறவற்றில் பொது அறிவு பெறவும் அவரவர் முயல்வது ஒழுங்காகும். தொழில் நோக்குடன் கல்வி பயிலுதல் வேண்டா என்றும் அறிவு விளக்கத்தின் பொருட்டுக் கல்வி பயிலுதல் வேண்டும் என்றும் இயற்கை அன்னை எச்சரிக்கை செய்தவண்ணமிருக்கிறாள். அவ்வெச்சரிக்கைக்கு மாணாக்கர் செவி சாய்த்து நடப்பாராக. அறிவு விளக்கத்துக்கெனக் கல்வி பயின்று, அவ்வறிவை நாட்டுத் தொழில்துறைகளைப் புதிய முறைகளில் வளர்க்கப் பயன்படுத்துவாராக.

தாய்மொழி வழிக்கல்வி

நாம் தமிழ் மக்கள்: நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு. அதுவே இயற்கை முறை. போதிய ஓய்வும் நேரமும் வாய்ப்பும் இருப்பின் வேறு பல மொழிகளையும் பயிலலாம். ஆனால் முதல் முதல் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும். தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறப்பது.

தெரிந்து தெளிவோம்

கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்.

- விஜயலட்சுமி பண்டிட்

ஐ. நா. அவையின் முதல் பெண் தலைவர்

தமிழ்வழிக் கல்வி

தமிழிலேயே கல்வி போதிக்கத் தமிழில் போதிய கலைகளில்லையே; சிறப்பான அறிவியல் கலைகளில்லையே என்று சிலர் கூக்குரவிடுகிறார். அவரவர் தாம் கண்ட புதுமைகளை முதல் முதல் தம் தாய்மொழியில் வரைந்துவிடுகிறார். அவை பின்னே பல மொழிகளில் பெயர்த்து எழுதப்படுகின்றன. அம்மொழிபெயர்ப்பு முறையைத் தமிழர் கொண்டு ஏன் தாய்மொழியை வளர்த்தல் கூடாது? குறியீடுகளுக்குப் பல மொழிகளினின்றும் கடன் வாங்குவது தமிழுக்கு இழுக்காகாது. கலப்பில் வளர்ச்சியுஸ்டென்பது இயற்கை நுட்பம். தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு. ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கத் தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன். கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தப் பெறுங் காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும்.

காப்பியக் கல்வி

வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று. அதைத் தலையாயது என்றும் கூறலாம். நாம் தமிழர்கள். நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமேல் நாம் எங்குச் செல்லல் வேண்டும்? தமிழ் இலக்கியங்களுக்கிடையே அன்றோ? தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கவித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரியபுராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள். இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்வால் சொல்ல இயலாது. இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ? தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்.

இயற்கைக் கல்வி

நீங்கள் ஏடுகளைப் பயில்வதுடன் நில்லாது, ஓய்ந்த நேரங்களில் இயற்கை நிலையங்களில் புகுந்து, இயற்கைக் கழகத்தில் நின்று, இயற்கைக் கல்வி பயில்வீர்களானால், இயற்கையோடியைந்த வாழ்வு நடத்த வல்லவர்களாவீர்கள், காடு செறிந்த ஒரு மலை மீது ஏறி, ஒரு மரத்தடியில் நின்று, மண்ணையும் விண்ணையும் நோக்குங்கள்; இயற்கை ஒவியத்தைக் கண்டு கண்டு மகிழுங்கள்;


மண் வழங்கும் பரந்த பசுமையிலும் வெண்மையிலும் விண் வழங்கும் நீலத்திலும் தோய்ந்து திளையுங்கள்; காலையில் இளஞாயிறு, கடலிலும் வானிலும் செக்கர் உமிழ்ந்து எழுங்காட்சியை நெஞ்சில் எழுதுங்கள்.

அருவி முழவும் குயில் குரலும் வண்டிசையும் மயில் அகவலும் மலர் மணமும் தேனினிமையும் தென்றல் வீசலும் புலன்களுக்கு விருந்தாகும் இயற்கை அன்னையைப் பாருங்கள். ஆங்கே சூழ்ந்துள்ள செடி, கொடி மரங்களையும் பறவைகளையும் விலங்குகளையும் உற்றுநோக்கி, சில செடிகள் பூமியில் பரந்தும் சில செடிகள் எழுந்து நின்றும் சில கொடிகள் சுருண்டு சுருண்டு படர்ந்தும் இருப்பதற்கும், சில மரங்கட்கு நீள் கினையும் கிளிக்கு வளைந்த மூக்கும் யானைக்குத் துதிக்கையும் மானிற்குக் கொம்பும் அமைந்திருப்பதற்கும் என்ன காரணம் என்று சிந்தியுங்கள்.

அந்தியில் ஞாயிறு அமருங் கோலத்தையும் பறவைகள் பறந்து செல்வதையும் கால்நடைகளின் மணியோசையையும் காணுங்கள்; கேளுங்கள். இவ்வாறு, இயற்கைக் கழகத்தில் பயின்றுபயின்று சங்கப்புலவர் இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி முதலியோர் இயற்கைக் கோலத்தை எவ்வாறு எழுத்தோவியத்தில் இறக்கியிருக்கின்றனர் என்று ஆராயுங்கள். நந்தமிழ்க் காவியங்களும், ஓவியங்களும் இயற்கை அமிழ்தாய் உயிரையும் உடலையும் பேணுவதை உணர்வீர்கள்.

இசைக்கல்வி

இன்றைய சூழலில் இசைப்பயிற்சியும் இன்றியமையாதது. இசை பாட இயற்கை சிலருக்குத் துணை செய்யும்; சிலர்க்குத் துணை செய்வதில்லை.

தெரிந்து தெளிவோம்

ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும்

இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும்

வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த

விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்

- குலோத்துங்கன்

அத்துணை பெறாதார் இசை இன்பத்தையாதல் நுகரப் பயில்வாராக. பழைய தமிழர் இசைத்துறையின் நிலை கண்டவர் என்று ஈண்டு இறுமாத்து கூறுகிறேன். தமிழ் யாழையும் குழலையும் என்னென்று சொல்வது? அந்த முகரங்களை நினைக்கும் போதே அமிழ்தூறுகிறது. கொடிய காட்டு வேழங்களையும் பாணர் தம் யாழ் மயக்குறச் செய்யுமாம். அந்த யாழ் எங்கே? இனி இசைப் புலவர்தொகை நாட்டிற் பெருகப் பெருக நாடு பல வழியிலும் ஒழுங்கு பெறுதல் ஒருதலை. ஆகவே அத்துறை மீதும் மாணவர் கருத்துச் செலுத்துவாராக.

நாடகக்கல்வி

நாடகக்கல்வி வாழ்விற்கு வேண்டா என்று யான் கூறேன். இடைக்காலத்தில் நாடகக் கலையால் தீமை விளைந்தபோது அதைச் சிலர் அழிக்க முயன்றதுண்டு. இப்போதைய நாடகம் நன்னிலையில்லை என்பதை ஈண்டு விளக்க வேண்டுவதில்லை. நாடகத்துக்கு நல்வழியில் புத்துயிர் வழங்க வேண்டும். நாடகத்தை நல்வழிப்படுத்தி மாணாக்கரை அதன்கண் தலைப்படுமாறு செய்யத் தமிழ்ப் பெரியோர் முயல்வாராக,

அறிவியல் கல்வி


உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது 'அறிவியல்' என்னும் அறிவுக்கலை. உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றினியல், கோளியக்கம், கணிதம், அகத்திணை முதலியன வேண்டும். இந்நாணில் இவைகளைப் பற்றிய பொது அறிவாதல் பெற்றே தீரல் வேண்டும். புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்தானில் உறுதிபெறல் அரிது. இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை. ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும்.

 

நூல் வெளி


திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்; சிறந்த மேடைப் பேச்சாளர்: தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர். இவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

இவரது இளமை விருந்து என்னும் நூலிலிருந்து சிலபகுதிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

Tags : Chapter 4 | 8th Tamil இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila : Prose: Palturai kalvi Chapter 4 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : உரைநடை: பல்துறைக் கல்வி - இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில