Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | துணைப்பாடம்: ஆன்ற குடிப்பிறத்தல்

இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: ஆன்ற குடிப்பிறத்தல் | 8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila

   Posted On :  12.07.2023 03:36 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில

துணைப்பாடம்: ஆன்ற குடிப்பிறத்தல்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : துணைப்பாடம்: ஆன்ற குடிப்பிறத்தல் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் நான்கு

விரிவானம்

ஆன்ற குடிப்பிறத்தல்


நுழையும்முன்

ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் உயர்த்துவதில் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது. புதிய செய்திகளைக் கற்பது மட்டும் கல்வியன்று. மனிதனின் உள்ளத்தில் புதைந்துகிடக்கும் நற்பண்புகளை வெளிக்கொண்டு வருவதும் அவளது வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதும் கல்வியின் நோக்கங்களாகும். ஒரு மாணவனின் உள்ளத்தில் ஆசிரியர் விதைத்த விதை எவ்வாறு பயன் தந்தது என்பதை ஒரு நிகழ்வின் மூலம் அறிவோம்.


செய்யுள் வகுப்புகள் எனக்குச் சுவையானவை; பிள்ளைகளுக்கும் சுவையானவை.

சில நேரங்களில் சில வரிகளை நெடுநேரம் விவரிக்க நேரும்! வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி - என்பதையெல்லாம் சுலபமாக விளக்கிவிடலாம். "உண்மையுமாய் இன்மையுமாய்" என்பதையும் யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை" என்பதையும் விளக்குவதற்குக் கொஞ்சம் நேரம் ஆகும்.

நான்காம் ஐந்தாம் வகுப்புகளில், அதிகாரத்துக்கு இரண்டாகச் சில திருக்குறள் பாக்கள் வரும். அவ்வாறு வந்த ஒரு திருக்குறளுக்குப் பொருள் கூற நான் சற்றுத் திண்டாடியதும், கடைசியில் அது சிறப்பாக நிறைவேறியதும் ஒரு சுவையான நிகழ்ச்சியாகும்.

அப்போது நான் ஒரு சிற்றூர்ப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தேன். அதே ஊரில் ஓர் எளிய குடிசை வீட்டில் நானும் என் மனைவியும் வசித்து வந்தோம். நாங்கள் குடியிருந்த குடிசை வீட்டுக்கு உள் தாழ்ப்பாள் கூடக் கிடையாது. ஜாதிக்காய்ப் பலகையினாலான ஓர் எனிய கதவை வெறுமனே சாத்தி, அது திறந்து கொள்ளாமல் இருக்க ஓர் இரும்பு நாற்காலியையும் நீர் நிறைந்த ஒரு இரும்பு வாளியையும் முட்டுக் கொடுத்து வைத்துவிட்டு, இரவில் உறங்கப்போவோம். சம்பள நேரமாயிருந்தால், பணப்பையைத் தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்கிவிடுவோம்.

ஒரு நாள் காலை, பள்ளி புறப்படும் முன்பு, எனது எட்டு முழ வேட்டியைத் தும்பைப்பூப் போல் துவைத்து, மெலிதாக நீலம் போட்டு, மூங்கில் கம்புகளுக்கு இடையே கட்டிய கொடிக்கயிற்றில் காயப் போட்டுவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டேன்.

பிறகு வந்து பார்த்தபோது வாசலில் காயப் போட்டிருந்த வேட்டியைக் காணோம். என்னவாயிற்று என்று தெரியவில்லை.

அன்று மாலைக்குள், என்னோடு பழகும் ஊர் மக்கள் சிலரிடையே, ஆசிரியரின் வேட்டியைக் காணவில்லை என்கிற செய்தி பரவி, பலவாறான கற்பனைகளை உற்பத்தி செய்துவிட்டது. அதிலே பெரும்பாலோர் சேர்ந்து சொன்ன கருத்து இதுதான்.

" சிகாமணிதான் எடுத்திருப்பான்!"

நான் குடியிருந்த வீட்டிற்கு அருகே இருந்த சேந்து கிணற்றில் இருந்து அப்பகுதி மக்கள் அடிக்கடி குடிநீர் முகந்து கொண்டு போவார்கள். அந்தக் கிணற்றின் எளிய அழகையும் அதன் தீஞ்சுவைத் தண்ணீரையும் விவரிப்பதற்கு, நான் பல வரிகள் எழுதவேண்டும்.

அன்றைக்குச் சிகாமணி, ஆறேழு குடங்கள் தண்ணீர் எடுப்பதற்காகப் பலமுறை எங்கள் வாசல் வழியே போய்வந்திருக்கிறான்.

பொதுவாகப் பத்து பத்தரை மணிக்கு மேல் கிராமத்தில் ஆள் அரவம் அதிகம் இருக்காது. பெரும்பாலும் கூலி வேலைக்குப் போய்விட்டிருப்பார்கள்.

சிகாமணியைப் பற்றி அறிந்த பலரும், அவன்தான் வேட்டியை எடுத்திருப்பான் என்று உறுதிபடக் கூறினார்கள்.

சிகாமணியின் தந்தை "பண்டுக்கிழவர்". அவரை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். வேலை இல்லாத நேரங்களில் அவரும் ஒரு மாதிரிதான். அவரது பழக்கம்தான் சிகாமணியைத் தொற்றிக்கொண்டது என்பது அவ்வூராரின் கணிப்புகளுள் ஒன்று. எல்லாவற்றையும் வாங்கிக் காதில் போட்டுக் கொண்டேன். கிராமிய வாழ்வை, ஒரு காவியம் பயில்வது போல் கற்றுக்கொண்டிருந்த காலம் அது!

ஒன்றை மட்டும் நான் குறித்து வைத்துக்கொண்டேன். சிகாமணியின் மகன் சகாதேவன், என்னிடத்தில் நான்காம் வகுப்பு பயில்கிற மாணவன். ஒவ்லியாக, சிவப்பாகக் கொஞ்சம் உயரமாக இருப்பான்.

மறுநாள் காலை விடிகிற வரையில், வேட்டியின் மர்மம் விளங்கவில்லை. ஆனால், பள்ளிக்கூடம் வழக்கம் போல் இருக்கிறதே! போனேன்; வகுப்பெடுத்தேன்.

அன்று செய்யுள் பகுதியில் திருக்குறள் வந்திருந்தது. பண்புடைமை என்கிற அதிகாரத்திலிருந்து இரண்டு குறள்கள்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்.

பண்புடைமை என்னும் வழக்கு.

என்னும் குறளை நான் நடத்த வேண்டியதாய் இருந்தது.

அந்தக் குறளை நிதானமாகப் படித்துக் காட்டி, அதற்குப் பொருள் சொல்லப் போனபோதுதான் எனக்கு அந்தப் பொறி தட்டியது.

"அன்புடையவர்களாயிருப்பதும் சிறந்த குடியில் பிறந்திருப்பதும் பண்புடைமை என்று சொல்லப்படும்.

இஃது அதன் பொருள்.

இதிவே, 'அன்புடைமை' யை என் மனம் ஒப்பியது. 'ஆன்ற குடிப்பிறத்தலில்' என்னமோ அழமாக நெருடியது.

சிறந்த குடியில் பிறப்பது என் கையிலா இருக்கிறது? நற்பண்பு இல்லாத பெற்றோருக்கு நான் மகனாகப் பிறந்திருக்கக்கூடும். அதனால், பிற நல்ல இலக்கணங்கள் பூண்டு, நான் பண்புடையவன் ஆக மாட்டேனா?

திருவள்ளுவர் எவ்வளவு பெரிய ஞானி! அவர் இப்படிப்பட்ட பொருளிலா அந்தக் குறளை வடித்திருப்பார்? இருக்காது.

அப்படியானால், இந்தக் குறளுக்கு நான் என்ன பொருள் கூற முடியும்?

ஆன்ற குடிப்பிறத்தல் என்றால், சிறந்த குடி உன்னிடமிருந்து பிறக்க வேண்டும் என்பதாக நான் பொருள் சொல்லத் துணிந்தேன். அதற்காக அத்தொடரை ஆன்றகுடிபிறத்தல் எனக்கொண்டு பொருள் கூறினேன்.

சிகாமணியின் மகன் சகாதேவன் தான் பாடம் நடத்தும்போது, அடிக்கடி என் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தான். அவன் என்னைக் கூர்ந்து நோக்குவதாகவே எனக்குத் தோன்றியது. அதில் நான் உற்சாகம் கொண்டேன். தொடர்ந்து திருக்குறளுக்கு விளக்கம் சொன்னேன். "அப்பன் திருடனாயிருக்கலாம், மகன் நல்லவனாக இருப்பான். அவங்க அப்பனைச் சொல், திருடன்தான்! அவன் பையனைச் சொல்லாதே அவன் மிக நல்லவன்!" என்று உலகோர் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா?"

மாணவர்கள் 'ஆம்' என்பதைப் போலத் தலையாட்டினார்கள்.

நான் தொடர்ந்து விளக்கமளித்தேன். இதற்கு எதிராகவும் இருப்பது உண்டு. 'அவனுடைய அப்பன் எவ்வளவு நல்லவன், இந்தப் பிள்ளை அவனுக்குப்போய் பிறந்திருக்கிறதே!' என்றும் மக்கள் கூறுவர். "உங்க அப்பன் திருடனா, அவனுடைய அப்பனாகிய உன் பாட்டனும் திருடனா? அந்தப் பழக்கம் அத்தோடு முடியட்டும். உன்னிலிருந்து திருடாதவன் என்னும் ஒரு புதியகுடி உதிக்கட்டும். ஒழுக்கம் இல்லாத பரம்பரையில் நீ வந்திருந்தாலும் ஒழுக்கத்தின் உறைவிடமாக நீ இருக்க வேண்டும். உன் குடியின் பழைய பெயரில் உள்ள இழிவுகள் எல்லாம் நீங்கி, உன்னிலிருந்து பெருமை கொண்ட புதியகுடி பிறக்கட்டும். இதையே வள்ளுவர் ஆன்ற குடிப்பிறத்தல் என்று கூறுகிறார்" என விளக்கம் கூறி முடித்தேன்.

முத்தாய்ப்பாக, “அன்புடையவனாக இருத்தலும், குடும்பத்தின் வசை நீங்குமாறு ஒரு புதுத்தலைமுறை உன்னிலிருந்து தொடங்குவதும் பண்புடைமை என்று சொல்லப்படும்" என்று அந்தத் திருக்குறளுக்குப் பொருள் கூறினேன். நான் கூறி முடிப்பதற்கும் மதிய உணவு வேளைக்காகப் பள்ளி முடிவதற்கும் சரியாக இருந்தது.

இவ்வளவையும் நான் கூறியபோது சகாதேவனை நானும் என்னைச் சகாதேவனும் அடிக்கடி பார்த்துக்கொண்டோம். என் வேட்டி தொடர்பாக ஒருசொல் கூட நான் சொல்லவில்லை.

மதிய உணவிற்கு எங்கள் வீட்டிற்குச் சென்றேன். மனைவியார் தட்டெடுத்து வைத்து உணவு பரிமாறினார். நான் கைவைத்து இன்னும் பிசைய ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அவ்வூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்னும் இளைஞன் எங்கள் வீட்டிற்குள் வந்தான். கைகளிரண்டையும் பின்னால் கட்டியிருந்தான்.

"என்னப்பா?" என்று கேட்டேன் நான்.

கிருஷ்ணமூர்த்தி பின்னால் கட்டியிருந்த கைகளை முன்னால் கொண்டு வந்தான். அவற்றில் என் வேட்டி இருந்தது.

"அடடே... என்னப்பா!" என்று என் வியப்பின் அளவு அதிகரிக்கக் கேட்டேன்.

"சகாதேவன் கொடுத்தான் சாரி! அவங்க அப்பன் சிகாமணிதான் எடுத்துக்கொண்டு போய் அவங்க வீட்ல இருவாய்ச்சாலில் வைத்திருக்கிறான்! சகாதேவனுக்கு அது தெரிஞ்சிருக்குது! இன்னைக்குக் காத்தாலே நீங்க ஏதோ பாடம் நடத்தினீங்களாமே? அதக் கேட்டு, பள்ளிக்கூடம் விட்டு வந்தவன், என்னைக்கூப்பிட்டு, இந்தா வாத்தியார் வேட்டி! எங்கப்பாதான் கொணாந்து இருவாய்ச்சாவில் வச்சிருந்தாரு! நான் கொண்டு போய்க் கொடுக்க வெக்கமாயிருக்குது... நீ கொண்டு போய்க் கொடுத்துடண்ணான்னு சொல்லிச் சகாதேவன்தான் கொடுத்தான்!" என்று கூறிச் சிரித்தவாறு நின்றான் கிருஷ்ணமூர்த்தி.

எனக்கு ஒரே பூரிப்பு. வேட்டி கிடைத்த மகிழ்ச்சி மட்டும்தானா அது! உண்மையின் நாற்றொன்று ஊன்றி நடப்பட்டதோர் உற்சாகம் அது. "சொல்" எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்த தூய மகிழ்ச்சி அது. காலந்தோறும் சிஷ்யனுக்கும் குருவுக்கும் மத்தியில் நிகழும் ஒரு சுகானுபவத்தின் தொடர்ச்சி அது. 'அப்பாடா! எல்லாம் நல்லபடி முடிந்தது" என்கிற வேளையில், வேறொரு பிரச்சினை முனைத்தது.

இவனை இப்படியே விடக்கூடாது. வாத்தியார் வேட்டியையே திருடியிருக்கான் பாரேன்! வசமாகச் சிக்கினான். அவன் புள்ளையே அவனைக் காட்டிக் கொடுத்திட்டான்!" என்று ஆர்வத்தோடு பலர் அணிவகுத்தனர்.

நடக்கப் போகிற காரியம், காரியத்தின் பலன் எல்லாம் எனக்கு நன்கு புரிந்தது.

ஊரில் நியாயம் போட்டு, சிகாமணிக்கு ஐந்நூறோ ஆயிரமோ அபராதம் போடுவார்கள். கையில் பைசா இல்லை என்று சொன்னாலும் சிகாமணி கட்டித்தான் தீர வேண்டும். கொஞ்சம் வாய்தா தருவார்கள்.

ஆனால்,நியாயத்திலிருந்து வீடு திரும்பும் சிகாமணி என்ன செய்வான்? போனவுடனே சகாதேவனைத்தான் முதுகில் நாலு சாத்து சாத்துவான்! 'ஆனால், சகாதேவன் என்ன ஆவான்?" என்பதுதான் என் முதல் பிரச்சினையாக அன்று என்முன் நின்றது.

"நம்ம வாத்தியார் சொன்ன பாடம், நல்ல பாடம்னு நெனச்சோமே, இப்படி ஆயிடுச்சே!" என்று நினைப்பான். அப்போது அவன் முதுகு எரியும். குருவின் சொற்படி நடந்து, கண்ட பலன் இதுதான் என்று அவன் மனம் நம்பிக்கை இழக்கும். சேச்சே! இதற்கெல்லாம் இடம் கொடுக்கலாமா? நான் ஊராரைப் பார்த்துச் சொன்னேன்.

"அவங்க அப்பன் செய்தது தப்புன்னு தெரிஞ்சு, ஒரு நல்ல மகன் அதைச் சரியாக்கிட்டான். விஷயம் நல்லபடி முடிந்தது. இதுக்கும் மேலே இதை நீட்டிக்க வேண்டாம்! நீங்க சிகாமணிக்குப் போடற அபராதமெல்லாம் அவன் மகன் சகாதேவன் முதுகிலே அடியாத்தான் விழும். நாம செஞ்ச நல்ல காரியத்துக்கு இதுதானா பலன் என்று அவன் மனசு சோர்ந்து போகும்! இது வேண்டாம்!"

"இல்ல சார், அவனை விடக்கூடாது சார்!" என்று யாரோ கடைசிவரையில் சொன்னார்கள். அப்போது தான் ஒரே முடிவாகக் கூறினேன்."இதோ பாருங்க. நீங்க ஊர் நியாயத்திலே சிகாமணி என் வேட்டியைத் திருடிட்டான்னு புகார் செஞ்சா, நான் என் வேட்டியே திருடு போகலைன்னு சாட்சியம் சொல்லுவேன்!" அந்த மக்களுக்கு இது புரிந்து, இறுதியில் என்னோடு உடன்பட்டார்கன். அதோடு, எல்லாம் முடிந்தது. சிகாமணியும் சகாதேவனும் நானும் தப்பித்தோம்.

 

நூல் வெளி

பி.ச. குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர். இவர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி இங்குத் தரப்பட்டுள்ளது.

Tags : Chapter 4 | 8th Tamil இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila : Supplementary: Aantra kudipiratal Chapter 4 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : துணைப்பாடம்: ஆன்ற குடிப்பிறத்தல் - இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில