ஒலியின்
எதிரொலிப்பு
நீங்கள் வெற்று அறை ஒன்றில்
அமர்ந்து கொண்டு பேசும் போது,
நீங்கள் பேசிய ஒலி மீண்டும் மீண்டும் உங்களை வந்தடைவதை
கவனித்திருப்பீர்கள். இது நீங்கள் பேசிய ஒலியின் எதிரொலிப்பே ஆகும். கீழ்க்காணும்
செயல்பாட்டின் மூலம் ஒலி எதிரொலிப்பை விவாதிக்கலாம்.
ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து
மற்றொரு ஊடகத்திற்கு பரவும் போது இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்கப்பட்டு முதலாம்
ஊடகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இந்த எதிரொலிப்பானது ஒளி அலைகளில்
நடைபெறும் எதிரொளிப்பைப் போன்றதே ஆகும். இரண்டாம் ஊடகத்தை நோக்கிச் செல்லும் கதிர்
படுகதிர் எனவும் இரண்டாம் ஊடகத்தில் பட்டு திரும்பி வரும் கதிர் எதிரொலித்தக்
கதிர் எனவும் அழைக்கப்படுகிறது. இது படம் 5.3ல் காண்பிக்கப்பட்டுள்ளது.
ஒளி அலைகளைப் போலவே, ஒலி அலைகளும்
அடிப்படை எதிரொலிப்பு விதிகளைப் பூர்த்தி செய்யும். கீழ்க்காணும் இரு எதிரொலிப்பு
விதிகளும் ஒலி அலைகளுக்கும் பொருந்தும்.
· படுகதிர், எதிரொலிக்கும்
தளத்தில் வரையப்படும் செங்குத்துக்கோடு மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை ஒரே
தளத்தில் அமையும்.
· படுகோணம் ∠i மற்றும் எதிரொலிப்புக் கோணம் ∠r ஆகியவை சமமாக இருக்கும்.
படம் 5.4 ல் எதிரொலிப்புத்
தளத்தை நோக்கிச் செல்லும் கதிர்கள் படுகதிர்கள் எனப்படும். எதிரொலிப்புத் தளத்தில்
பட்டு மீண்டும் திரும்பி வரும் கதிர்கள் எதிராலித்தக் கதிர்கள் எனப்படும்.
அனைத்துப் பயன்பாடுகளுக்கும் படுகதிர் மற்றும் எதிரொலிப்புக் கதிர் ஆகியவை
எதிரொலிப்புத் தளத்தில் ஒரே புள்ளி வழியாகச் செல்லும்.
எதிரொலிப்பு தளத்துக்குச்
செங்குத்தாக வரையப்பட்டுள்ள கோடு செங்குத்துக் கோடு என அழைக்கப்படுகிறது.
செங்குத்துக் கோட்டுடன், படு கதிர் உருவாக்கும் கோணம் படுகோணம் (i) ஆகும்.
அதே போல செங்குத்துக் கோட்டுடன் எதிரொலித்த கதிர் உருவாக்கும் கோணம் எதிரொலிப்புக்
கோணம் (r) எனவும் அழைக்கப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
கோல்கொண்டா கோட்டை - (ஹைதராபாத், தெலங்கானா) -கோல்கொண்டா
கோட்டையிலுள்ள கைத்தட்டும் அறையின் மேற்புறம் பல தொடர்ச்சியான வளைவுகள் உள்ளன.
இதில் ஒவ்வொரு வளைவும், முந்தைய வளைவை விட சிறியதாக
காணப்படும்.எனவே இந்த அறையின் குறிப்பிட்டப் பகுதியில் எழுப்பப்படும் ஒலியானது,
அழுத்தப்பட்டு எதிரொலிக்கப்பட்டு, பின்
தேவையான அளவு பெருக்கமடைந்து ஒரு குறிப்பிட்டத் தொலைவிற்குக் கேட்கிறது.
2. அடர்மிகு
ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு
ஒரு நெட்டலையானது ஊடகத்தில் பரவும்
போது இறுக்கங்களாகவும், தளர்ச்சிகளாகவும் பரவும். ஒலி அலையின் இறுக்கங்கள் இடமிருந்து வலமாக பரவி
ஒரு சுவரில் மோதிக்கொள்வதாக கருதிக் கொள்வோம். அவ்வாறு மோதிக்கொள்ளும் போது
இறுக்கங்கள் சுவரினை நோக்கி F என்ற ஒரு விசையை
செயல்படுத்தும். அதே வேளையில் சுவரானது அதற்கு சமமான மற்றும் எதிர் திசையில் R
= -F என்ற விசையை திரும்பச் செலுத்தும். இதனால் சுவற்றின் அருகில்
மீண்டும் இறுக்கங்கள் ஏற்படும். இவ்வாறு இறுக்கங்கள் சுவரில் மோதி மீண்டும்
இறுக்கங்களாகவே எதிரொலிக்கிறது. அதன் திசை மட்டும் மாறியிருக்கும். இதனை
கீழ்காணும் படம் 5.5ல் காணலாம்.
3. அடர்குறை
ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு
திடப்பொருளில் பயணிக்கும் ஒலி
அலையின் இறுக்கங்கள் காற்று ஊடகத்தின் விளிம்பை அடைவதாகக் கொள்வோம். அப்போது
இறுக்கங்களானது, காற்று ஊடகத்தின் பரப்பில் F என்ற விசையைச் செலுத்தும்.
அடர்குறை ஊடகம் (காற்று) குறைந்த அளவு உருக்குலைக்கும் பண்பை பெற்றுள்ளதால்
இரண்டையும் பிரிக்கும் மேற்பரப்பு பின்னோக்கித் தள்ளப்படுகிறது. இதனால் அடர்குறை
ஊடகத்தில் துகள்கள் மிக எளிதாக இயங்குவதால் விளிம்புப்பகுதியில் தளர்ச்சிகள்
தோன்றுகின்றன. இடமிருந்து வலமாக பயணித்த இறுக்கங்கள் எதிரொலிக்கப்பட்ட பின்
தளர்ச்சிகளாக மாறி வலது புறத்திலிருந்து இடது புறமாகப் பரவுகிறது. இதை படம் 5.6 விளக்குகிறது.
மேலும் அறிந்துகொள்வோம்
அடர்குறை மற்றும் அடர்மிகு ஊடகம் என்றால் என்ன?
ஒலியானது
ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம்
அதிகரித்தால் அது அடர்குறை ஊடகம் ஆகும் (காற்றுடன் ஒப்பிடும் போது நீரானது ஒலிக்கு
அடர்குறை ஊடகம் ஆகும்)
ஒலியானது
ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம்
குறையுமானால் அது அடர்மிகு ஊடகம் ஆகும் (நீருடன் ஒப்பிடும் போது காற்றானது ஒலிக்கு
அடர்மிகு ஊடகம் ஆகும்)
4. சமதளம் மற்றும்
வளைவானப் பகுதிகளில் ஒலி எதிரொலிப்பு
ஒலி அலைகள் சமதளப் பரப்புகளில் மோதி
எதிரொலிக்கும் போது ஒலி எதிரொலிப்பு விதிகளுக்கு ஏற்பப் பரவுகிறது. அவ்வாறு ஒலி
அலைகள் எதிரொலிக்கும் போது ஒலி அலைகளின் செறிவு கூடுவதோ அல்லது குறைவதோ இல்லை.
ஆனால் வளைவானப் பரப்புகளில் பட்டு
மோதி எதிரொலிக்கும் போது அதன் செறிவு மாறுகிறது. குவிந்த பகுதிகளில் மோதி
எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் விரிவடைந்து செல்கிறது. அதன் செறிவும்
குறைகிறது. அதேபோல குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள்
ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது. எனவே எதிரொலித்தக் கதிர்களின் செறிவும் ஒரு
புள்ளியில் குவிக்கப்படுகிறது.
ஒலியை ஒரு குறிப்பிட்ட புள்ளியில்
குவிக்க வேண்டியத் தேவைகள் இருந்தால் மட்டுமே வளைவானப் எதிரொலிக்கும் பகுதிகள்
பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான் பேசும் கூடங்களின் மேற்பகுதி பரவளையத்தின்
வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். பரவளையத்தில் பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில்
எங்கு மோதினாலும் பரவளயத்தில் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில்
குவிக்கப்படுகிறது. இதனால் இதனுள் அமர்ந்து ஒருவர் மெல்லிய குரலில் பேசினாலும், மீண்டும் மீண்டும்
எதிரொலித்து வரும் ஒலியினால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவியையும்
அடையும்.
உங்களுக்குத் தெரியுமா?
மெதுவாகப் பேசும் கூடம்
மிகவும்
புகழ் பெற்ற மெதுவாகப் பேசும் கூடம் இலண்டனிலுள்ள புனித பால் கேதிட்ரல் ஆலயத்தில் அமைந்துள்ளது.
அந்த அறையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் ஒலியானது எதிர்புறம் உள்ளக்
குறிப்பிட்டப் பகுதியில் தெளிவாகக் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வளைவான
பகுதிகளில் நடைபெறும் பல்முனை எதிரொலிப்பே இதற்குக் காரணம் ஆகும்.