ஒலி அலைகள்
நாம் ஒலியைப் பற்றி நினைக்கும் போது, ஒலி எவ்வாறு
உருவாகிறது?, பல்வேறு ஒலி மூலங்களிலிருந்து வரும் ஒலி
எவ்வாறு நமது காதுகளை அடைகிறது?, ஒலி என்பது என்ன? அது விசையா அல்லது ஆற்றலா? என பல வினாக்கள் நமது
மனதில் எழும். இந்த பாடத்தில் இது போன்ற வினாக்களுக்கு விடை காண்போம்.
ஒலிக்கும் மணி அல்லது இசைக்கும்
இசைக்கருவியைத் தொட்டுப் பார்க்கும் போது ஒலியானது அதிர்வுகளால் உருவாகின்றது
என்பதை அறியலாம். அதிர்வடையும் பொருட்கள் அலை வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது.
அதுவே ஒலி அலைகளாகும் (படம் 5.1).
நீயும், உனது நண்பர்களும்
நிலவில் இருப்பதாகக் கருதிக்கொள்ளுங்கள். உனது நண்பன் எழுப்பும் ஒலியை உன்னால்
கேட்க இயலுமா?. நிலவில் வளி மண்டலம் இல்லாததால் உனது
நண்பனின் ஒலியைக் கேட்க இயலாது. எனவே அதிர்வுறும் பொருட்கள் உருவாக்கும் ஒலி பரவிட
திட, திரவ, வாயு போன்ற பருப்பொருள்
ஊடகங்கள் தேவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதிலிருந்து ஒலியானது திட, திரவ அல்லது வாயு ஊடகங்களில் பரவும்.
செயல்பாடு 1
ஒரு
இசைக்கும் பொம்மை அல்லது பழைய கைப்பேசியை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையினுள்
வைக்கவும். பிளாஸ்டிக் பையை மெழுகுவர்த்தி அல்லது நூலினைப் பயன்படுத்தி மூடவும்.
ஒரு வாளியில் நீரை நிரப்பி பிளாஸ்டிக் பையை அதனுள் வைக்கவும். தற்போது பொம்மை
அல்லது கைபேசியை ஒலிக்கச் செய்யவும். இப்போது உங்களால் மெதுவான ஒலியைக் கேட்க
இயலும். இப்போது வாளியின் அருகே காதுகளைவைத்துக் கொண்டு பொம்மை அல்லது கைப்பேசியை
ஒலிக்கச் செய்தால் உங்களால் உரத்த ஒலியைக் கேட்க இயலும். இது ஏன் என்று
வகுப்பறையில் விவாதியுங்கள்.
ஒலி அலைகள் நெட்டலைகளாகும். அவை
அனைத்து ஊடகங்களிலும் (திண்ம,
திரவ, வாயு) பரவும். அவற்றின் திசை வேகம்
பருப்பொருள் ஊடகங்களின் பண்பைப் பொறுத்து அமையும். ஒரு ஊடகத்தில் ஒலியலை பரவும்
திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அதனை நெட்டலை எனலாம். ஒவ்வொரு மூலக்கூறும் அதன்
மையப்பகுதியிலிருந்து நீளவாக்கில் இடப்பெயர்ச்சி அடைவதால் நெட்டலைகள் உருவாகிறது.
இதனால் ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது இறுக்கங்களும் தளர்ச்சிகளும்
உருவாகின்றன. ஊடகத்தின் வழியே பரவும் நெட்டலைகளில் இறுக்கங்கள் என்பது அதிக
அழுத்தம் உள்ள பகுதி மற்றும் தளர்ச்சிகள் என்பது குறைந்த அழுத்தம் உள்ள
பகுதியாகும். நெட்டலைகளின் இறுக்கங்களும் தளர்ச்சிகளும் படம் 5.2 ல் காட்டப்பட்டுள்ளது.
(i) செவியுணர் ஒலி
அலைகள்:
இவை 20 Hz முதல் 20,000
Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும். இவை அதிர்வடையும்
பொருட்களான குரல் நாண்கள் மற்றும் இழுத்துக் கட்டப்பட்ட கம்பி போன்றவைகளால் உருவாக்கப்படுகிறது.
(ii) குற்றொலி அலைகள்: இவை 20 Hz ஐ விடக் குறைவான
அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும். மனிதர்களால் கேட்க இயலாது. நிலநடுக்கத்தின் போது
உருவாகும் அதிர்வலைகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள்
ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும்.
(iii) மீயொலி அலைகள்: இவை 20,000 Hz க்கும் அதிகமான
அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளாகும். மனிதர்களால் கேட்க இயலாது. ஆனால் கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால்
கேட்க இயலும். வெளவால் ஏற்படுத்தும் ஒலியினை மீயொலிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
ஒரு அலையின் திசைவேகம் பற்றி
விவாதிக்கும் போது, இரு வகையான திசைவேகங்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவைகள்
அதிர்வடையும் துகளின் திசைவேகம் மற்றும் அலையின் திசைவேகம் ஆகும். திசைவேகத்தின்
அலகு மீட்டர் வினாடி-1 ஆகும்.
துகள் திசைவேகம்
ஒரு ஊடகத்தில் அலைகள் வடிவில்
ஆற்றலைக் கடத்துவதற்காக துகள்கள் அதிர்வடையும் திசைவேகம் துகள் திசைவேகம்
எனப்படும்.
அலைத் திசைவேகம்
ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும்
திசைவேகம் அலைத் திசைவேகம் எனப்படுகிறது. இதனை ஓரலகு காலத்தில் ஒலி அலை பரவும்
தூரம் எனவும் குறிப்பிடலாம்.
அலைத் திசைவேகம் = தொலைவு / பரவ எடுத்துக்கொண்ட
காலம்
ஒரு அலையானது λ என்ற தூரத்தை (அலைநீளம்) T காலத்தில் கடந்து
சென்றால் அதன் அலைத் திசைவேகத்தை
V = λ/T (5.1)
என குறிப்பிடலாம்.
ஆதலால் ஒரு விநாடி நேரத்தில், ஒலி அலை கடந்தத்
தொலைவு அலைத் திசைவேகம் ஆகும். (n) = 1/T என்பதை அலையின்
அதிர்வெண் என கருதினால் சமன்பாடு (5.1) ஐ
V = nλ (5.2)
என எழுதலாம்.
திடப்பொருட்களில் மீட்சிப்பண்பு
அதிகமாக இருப்பதால் அதன் வழியாக ஒலியலை செல்லும் போது ஒலியின் திசைவேகம் அதிகமாக
இருக்கும். வாயுக்களுக்கு மீட்சிப் பண்பு குறைவாக இருப்பதால் ஒலியலை வாயுக்கள்
வழியாக செல்லும் போது அதன் திசைவேகம் குறைவாக இருக்கும்.
எனவே
Vதிட > Vதிரவ >
Vவாயு
திடப்பொருட்களின் வழியாக ஒலி
செல்லும் போது அதன் மீட்சிப்பண்பு மற்றும் அடர்த்தி ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கிறது.
மீட்சிப் பண்பானது மீட்சிக் குணகத்தினால் குறிக்கப்படுகிறது. ஒலியின் திசைவேகமானது
மீட்சிக் குணகத்தின் இருமடி மூலத்திற்கு நேர்த்தகவிலும், அடர்த்தியின்
இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவிலும் அமையும்.
எனவே அடர்த்தி அதிகரிக்கும் போது, ஒலியின் வேகம்
குறைகிறது. மீட்சிப் பண்பு அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது.
வாயுக்களைப் பொறுத்தவரையில் கீழ்கண்ட காரணிகள் ஒலியின் திசைவேகத்தைப்
பாதிக்கின்றன.
அடர்த்தியின்
விளைவு :
வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் தகவில்
அமையும். எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
வெப்பநிலையின்
விளைவு :
வாயுக்களில் ஒலியின் திசைவேகம்,
அதன் வெப்பநிலையின் இருமடி மூலத்திற்கு நேர் தகவில் அமையும். எனவே
வெப்பநிலை அதிகரிக்கும் போது, திசைவேகமும் அதிகரிக்கிறது. v ∝ √T. வெப்பநிலை T°C ல் திசைவேகமானது.
VT = (vo + 0.61 T) m s–1
இங்கு vo
என்பது 0°C வெப்பநிலையில்
வாயுக்களில் ஒலியின் திசைவேகம் ஆகும். காற்றிற்கு vo = 331 மீவி-1 எனவே ஒவ்வொரு
டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பிற்கும் திசைவேகமானது 0.61 மீவி-1
அதிகரிக்கிறது.
ஒப்புமை
ஈரப்பதத்தின் விளைவு : காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும்
அதிகரிக்கிறது. எனவே தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத்
தெளிவாகக் கேட்க முடிகிறது.
பல்வேறு ஊடகங்களில் ஒலியின்
திசைவேகம் பற்றி அட்டவணை 5.1ல் கொடுக்கப்பட்டுள்ளது.
தீர்க்கப்பட்ட கணக்கு 5.1
எந்த வெப்பநிலையில் ஒலியின்
திசைவேகமானது 0°C ல் உள்ளதை விட
இரட்டிப்பாகும்?
தீர்வு
தேவையான வெப்பநிலையை T°C எனக்கொள்வோம். v1
மற்றும் v2 என்பவை முறையே T1K
மற்றும் T2K வெப்பநிலையில் ஒலியின்
திசைவேகம் ஆகும். T1 = 273K (0°C) மற்றும் T2
= (T°C + 273) K
இங்கு v2 / v1 = 2 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
T = (273 × 4) - 273 = 819°C