விலங்கியல் - இனப்பெருக்க நலன் : பாடச்சுருக்கம் | 12th Zoology : Chapter 3 : Reproductive Health
பாடச்சுருக்கம்
இனப்பெருக்க ஆரோக்கியம் என்பது இனப்பெருக்கம் தொடர்பான அனைத்து கூறுகளிலும் ஆரோக்கியமாக இருப்பதாகும். மாதவிடாய் பிறழ்ச்சி, கர்ப்பம் தொடர்பான பல்வேறு நிலைகள், மருத்துவ ரீதியான கருக்கலைப்பு, பால்வினை நோய்கள், பிறப்புக் கட்டுப்பாடு, மலட்டுத்தன்மை, பிறப்புக்குப் பிந்தைய தாய் சேய் நல மேலாண்மை போன்ற பிரச்சனைகளுக்கான மருத்துவ வசதிகளையும், பாதுகாப்பையும் அளிப்பதே இனப்பெருக்க மற்றும் குழந்தை நலப் பாதுகாப்புத்திட்டம் என்பதாகும்.
குறைந்த தாய், சேய் இறப்பு வீதம், குழந்தை பெற இயலாத தம்பதிகளுக்கு உதவி புரிதல் போன்றவற்றில் இருந்து நம் நாட்டின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த மேம்பாடு தெளிவாகின்றது. மருத்துவ வசதிகளின் மேம்பாடு, வாழ்க்கை தர மேம்பாடு ஆகியவற்றின் விளைவால் அபரிமிதமான மக்கள் தொகைப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் தொகை பெருகியதால், கருத்தடை முறைகளின் பயன்கள் பற்றிய தீவிர பரப்புரை தேவைப்பட்டது. இயற்கை முறை, பாரம்பரிய முறை, தடுப்பு முறை, கருப்பை அகக் கருவிகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள், பதிக்கும் சாதனங்கள், அறுவை முறைகள் போன்ற பல்வேறு கருத்தடை வாய்ப்புகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஆரோக்கியமான இனப்பெருக்கத்திற்கு வழக்கமான கருத்தடை முறைகள் தேவை இல்லை. எனினும், கருத்தரிப்பை தவிர்க்க அல்லது தள்ளிப்போட அல்லது அடுத்தடுத்த குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி தர கருத்தடை முறைகளைப் பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்படுகின்றது.
கலவியின் வழியாகப் பரவும் நோய்கள் அல்லது தொற்றுக்கள் பால்வினை நோய்கள் (STI's) எனப்படும். இடுப்புக் குழி வீக்க நோய் (PID'S), இறந்து பிறக்கும் குழந்தை , மலட்டுத்தன்மை போன்றவை பால்வினை நோய்களால் ஏற்படும் சிக்கல்களாகும். தொடக்க நிலையிலேயே இத்தகு நோய்களை கண்டறிதல் மிக நல்ல சிகிச்சைக்கு வழிவகை செய்கின்றது. முன் பின் அறியாதவருடன் அல்லது பலருடன் பாலுறவு கொள்வதைத் தவிர்த்தல் மற்றும் கருத்தடை உறைகளைப் பயன்படுத்துதல் போன்றன பால்வினைத் தொற்றை தவிர்க்கும் எளிய வழிகளாகும்.
மலட்டுத்தன்மை என்பது தடையற்ற பாலியல் இணைவாழ்விற்குப் பின்னும் கருவுற இயலாமை அல்லது குழந்தைகளை உருவாக்க இயலாமை என்பதாகும். தற்போது அத்தகு தம்பதிகளுக்கு உதவ பல்வேறு முறைகள் உள்ளன. உடல் வெளிக் கருவுறுதல் செய்த பிறகு வளர்க்கருவை பெண் கருப்பைக்குள் செலுத்துதல் அவற்றுள் ஒன்றாகும்.