விலங்கியல் - இனப்பெருக்க நலன் | 12th Zoology : Chapter 3 : Reproductive Health
இனப்பெருக்க நலன்
பாடம் 3
கருவுறுதலுக்கு முன்பாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முறையான உணவூட்டம் ஆகியவற்றுடன் பாதுகாப்பான தாய்மை தொடங்கி விடுகிறது
பாட உள்ளடக்கம்
3.1 இனப்பெருக்க நலனின் தேவை, பிரச்சனைகள் மற்றும் உத்திகள்
3.2 பனிக்குடத் துளைப்பு மற்றும் அதன் சட்டபூர்வமான தடை
3.3 பாலின விகிதம், பெண் கருக்கொலை மற்றும் சிசுக்கொலை ஆகியவை சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம்
3.4 மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு
3.5 மருத்துவ ரீதியான கருக்கலைப்பு (MTP)
3.6 பால்வினை நோய்கள் (STD)
3.7 மலட்டுத் தன்மை
3.8 இனப்பெருக்கத் துணைத் தொழில் நுட்பங்கள்
3.9 கருவின் குறைபாடுகளை கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறிதல்.
.
கற்றலின் நோக்கங்கள்
* பாலியல் கல்வி மற்றும் OF இனப்பெருக்க நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுதல்.
* மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனையான பனிக்குட துளைப்பு சோதனையின் முக்கியத்துவத்தை கற்றல்.
* தாய் மற்றும் சேய் இறப்பின் விளைவுகளை மதிப்பீடு செய்தல்.
* பல்வேறு வகை கருத்தடை சாதனங்களை கண்டறிந்து ஒப்புநோக்குதல் மற்றும் விவரித்தல்.
* மருத்துவ ரீதியான கருக்கலைப்பின் தேவை மற்றும் சமூக விளைவுகளை விவாதித்தல்.
* பால்வினைத் தொற்று பரவக் காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகளை விளக்குதல்.
* மலட்டுத்தன்மைக்கான காரணிகளை முன்னிலைப்படுத்துதல்.
* இனப்பெருக்கம் பற்றிய நேர்மறையான ஆரோக்கியமான மனப்பான்மையை வளர்த்தல்.
அமைப்பு மற்றும் செயல்ரீதியாக இயல்பாக செயல்படும் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ள மக்களைக் கொண்ட சமூகத்தைக் குறிப்பதே இனப்பெருக்க நலன் எனப்படும். ஆரோக்கியமான மக்கள் உடல் நலம் மிகுந்த குழந்தைகளைப் பெற்று குடும்பத்தை நன்முறையில் பாதுகாத்து சமுதாயத்திற்கும் சமூகத்திற்கும் தம் பங்களிப்பினை அதிகமாகத் தருகின்றனர். எனவே உடல் நலம் என்பது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையாகும். இனப்பெருக்க மண்டலம், நரம்பு வேதி ஒருங்கிணைப்பு மண்டலங்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு கூட்டமைப்பாகும். எனவே, தொற்றுநோய்கள் மற்றும் காயங்கள் ஏதுமின்றி இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாப்பது அவசியமானதாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
உலகளவில் தினமும் சுமார் 800 பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு தொடர்பான தடுக்கக் கூடிய காரணங்களால் பாதிப்புற்று இறக்கின்றனர். இதில் 20 சதவீதம் பெண்கள் இந்தியர்கள் ஆவர். அதேபோல, இந்தியாவில் பச்சிளங்குழந்தை இறப்பு வீதம் 1000 பேரில் 44 ஆகும். இந்தியா கடந்த இருபது ஆண்டுகளில் அபரிதமான வளர்ச்சியை அடைந்திருந்தாலும் தாய் இறப்பு வீதம் பிற வளரும் நாடுகளை ஒப்பிடும்போது இன்னும் அதிகமாகவே உள்ளது.
மூலம்: http://unicp.in