புவியியல் | சமூக அறிவியல் - இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | 10th Social Science : Geography : Chapter 4 : India - Resources and Industries
இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
• வளங்கள்
மற்றும் அதன் வகைகளைப் பற்றி அறிந்துகொள்ளல்
• புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலா
வளங்களைப் பற்றி புரிந்துகொள்ளல்
• இந்தியாவில் உள்ள தொழிலகங்களின் வகைகள் மற்றும்
பரவல்களை அடையாளம் காணுதல்
• இந்திய தொழிலகங்களின் பிரச்சனைகளைப்
பகுப்பாய்வு செய்தல்
அறிமுகம்
இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் ‘இயற்கை வளம்’ என்று அழைக்கப்படுகிறது. காற்று, நீர், மண், தாதுக்கள், புதைப்படிம எரிபொருள், தாவரங்கள், வன விலங்குகள் போன்றவை இயற்கை வளங்களில் அடங்கும். பல இயற்கை வளங்கள் மூலப்பொருள்களாக பயன்படுகின்றன. இயற்கை வளங்கள் எந்த ஒரு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயற்கை வளங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் வளங்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றன. சூரிய சக்தி, காற்று சக்தி, உயிரின கழிவு வாயு வளிமம், ஓதசக்தி, அலைசக்தி போன்றவை புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும். பயன்பாட்டிற்கு பிறகு மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய இயலா வளங்கள் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும். நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை.