Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பேஷ்வாக்களின் எழுச்சி

இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பேஷ்வாக்களின் எழுச்சி | 7th Social Science : History : Term 2 Unit 3 : Rise of Marathas and Peshwas

   Posted On :  14.05.2022 06:09 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -1 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

பேஷ்வாக்களின் எழுச்சி

ஒரு சாதாரண வருவாய்த்துறை அலுவலராகத் தமது பணியைத் தொடங்கிய பாலாஜி விஸ்வநாத் 1713 இல் பேஷ்வா ஆனார். தனக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனைகளுக்கு எதிராக ஷாகு, பாலாஜி விஸ்வநாத்தின் மூத்த மகனான இருபது வயதே நிரம்பிய பாஜிராவை அடுத்த பேஷ்வாகப் பணியமர்த்தினார்.

பேஷ்வாக்களின் எழுச்சி


பேஷ்வாக்கள்


பாலாஜி விஸ்வ நாத் (1713 - 1720)


ஒரு சாதாரண வருவாய்த்துறை அலுவலராகத் தமது பணியைத் தொடங்கிய பாலாஜி விஸ்வநாத் 1713 இல் பேஷ்வா ஆனார். தனக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனைகளுக்கு எதிராக ஷாகு, பாலாஜி விஸ்வநாத்தின் மூத்த மகனான இருபது வயதே நிரம்பிய பாஜிராவை அடுத்த பேஷ்வாகப் பணியமர்த்தினார். 


பாஜிராவ் (1720-1740)


முகலாயர்களுக்கு எதிராகவும் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராகவும் மிகப்பெரும் மராத்திய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள பாஜிராவ் விரும்பினார். இராணுவத் தலைமை தளபதிக்கான அதிகாரங்களையும் தமதாக்கிக் கொண்டார். பாரம்பரியமாகச் செல்வாக்கு பெற்றிருந்த குழுக்களான தேஷ்முக்குகளைச் சார்ந்திருக்க அவர் விரும்பவில்லை . மாறாகப் பேரரசர் ஷாகுவிற்கும், தமதுதந்தையார் பாலாஜி விஸ்வநாத்திற்கும், தமக்கு விசுவாசமாக இருந்த கெய்க்வாட், ஹோல்கார், சிந்தியா ஆகிய குடும்பங்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். 


முக்கிய மராத்தியக் குடும்பங்கள்

• கெய்க்வாட் - பரோடா 

• பான்ஸ்லே - நாக்பூர் 

• ஹோல்கார் - இந்தூர் 

• சிந்தி அல்லது சிந்தியா - குவாலியர் 

• பேஷ்வா - புனே

மாளவத்திற்கும், குஜராத்திற்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்த பாஜிராவ் அவற்றை முகலாயரின் மேலாதிக்கத்திலிருந்து விடுவித்தார். முகலாயர் சார்பாக இதில் தலையிட்ட முகலாயப்படைகளும்ஹைதராபாத் நிஜாமின் படைகளும் தோற்கடிக்கப்பட்டன. தம்மை மகாராஷ்டிரத்தின் அரசன் எனவும் ஏனைய தக்காணப் பகுதிகளுக்குத் தலைவன் எனவும் பேரரசர் ஷாகுவை அங்கீகரிக்க வைப்பதில் பாஜிராவ் வெற்றி பெற்றார். அதன் மூலம் அப்பகுதிகளிலிருந்து சௌத், சர்தேஷ்முகி ஆகிய கப்பத்தொகைகளை மராத்திய அதிகாரிகள் சட்டபூர்வமாக வசூலிக்க முடிந்தது. நிதி நிர்வாகச் செயல்பாடுகளைப் பாஜிராவ் பூனேவில் மையப்படுத்தினார். இதனால் தக்காணப் பகுதிகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் கப்பங்களை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ள முடிந்தது.

மராத்தியர்களின் படை 5000 க்கும் குறைவான குதிரை வீரர்களைக் கொண்டிருந்தது. பீரங்கிப் படைப்பிரிவைக் கொண்டிருக்கவில்லை. இவ்வெண்ணிக்கை 1720இல் இருமடங்கானது. இருந்தபோதிலும் இப்படைகள் முகலாய, நிஜாம் படைகளுக்கு நிகரானதல்ல. முகலாயருக்கு எதிரான மராத்தியரின் வெற்றிக்கு முகலாயப் படைகளின் திறமையின்மையே காரணமாகும். தக்காணத்தின் மீதான மராத்தியரின் மேலாதிக்கத்திற்கு ஷாகு, பேஷ்வாக்கள் ஆகியோரின் கீழ்வளர்ந்த மராத்திய அதிகாரிகள், படைத்தளபதிகள் ஆகியோரின் குண இயல்புகளும் காரணமெனக் கூறலாம்.


பாலாஜி பாஜிராவ் (1740 -1761)


பாலாஜி பாஜிராவ் பேஷ்வா பொறுப்பில் இருந்தபோது, பேரரசு ஷாகு 1749இல் இயற்கை எய்தினார். அரச குடும்பத்தில் ஏற்பட இருந்த வாரிசுரிமைப் போட்டி சரியான நேரத்தில் பாலாஜி பாஜிராவின் தலையீட்டால் தவிர்க்கப்பட்டது. பதவிக்குப் போட்டியிட்ட அனைத்துப் பிரிவினரையும் அழைத்துப் பேசி, தமது நிபந்தனைகளை ஒத்துக்கொள்ளச் செய்தார். இனிமேற்கொண்டு, பூனே நகரமே தலைநகர் என்றும் சத்தாரா அன்று என்றும் முடிவு செய்தார். அனைத்து அதிகாரங்களும் பேஷ்வாவின் கரங்களில் குவிக்கப்பட்டன. 

மராத்திய விவசாயப் போர்வீரர்களின் காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஊதியம் வழங்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படைக்குத் தற்போது பாலாஜி பாஜிராவ் தலைமையேற்றார். மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், போர்க்களத்திற்கு எளிதில் சென்று வருவதற்கு தங்கள் வசிப்பிடத்திற்குச் சென்றுவர கோட்டைகளிலோ நகரங்களிலோ வாழ வழிவகை செய்தார். காலாட்படை, குதிரைப்படை வீரர்களுக்கான பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரிய பீரங்கிகள் மராத்திய அதிகாரிகளின் கீழிருந்தன. ஆனாலும், அவற்றை இயக்குவது பராமரிப்பது ஆகிய பணிகளில் பெரும்பாலும் போர்த்துகீசியர், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் அமர்த்தப்பட்டிருந்தனர்.

பேஷ்வா பாலாஜி பாஜிராவின் காலத்தில் மராத்திய அரசின் வடஎல்லை மிக விரைவாக ராஜஸ்தான். டெல்லி, பஞ்சாப் ஆகியவற்றின் எல்லைகளை நெருங்கியது. ஒரு கட்டத்தில் மராத்தியரின் கப்பம் வசூலிக்கும் ஆட்சிப்பரப்பு டெல்லிக்கு ஐம்பது மைல்களுக்கு அருகேவரை விரிவடைந்தது. நாக்பூரிலிருந்து மராத்தியப் படைகள் பீகார், வங்காளம், ஒடிசா ஆகிய பகுதிகளில் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட படையெடுப்புகளை நடத்தின. கர்நாடகப் பகுதிகள் குறித்து மராத்தியர்களுக்கும் ஹைதராபாத் நிஜாமுக்குமிடையே முரண்பாடுகளும் மோதல்களும் நிலவியபோதும், கன்னட, தமிழ் தெலுங்குப் பகுதிகள் மராத்தியரின் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவரப்பட்டன. 1745க்கும் 1751க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் மராத்தியத் தளபதி ரகுஜி பான்ஸ்லேயின் தலைமையில் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.


பேஷ்வாக்களின் கீழ் மராத்தியர் நிர்வாகம்

பேஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தார் என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது. அவர் பேஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார். கப்பமோ வரியோ வசூலிக்கப்பட வேண்டிய பகுதியில் பாதுகாப்பிற்காக சில வீரர்கள் அடங்கிய படைப்பிரிவை வைத்துக்கொள்ள இவர் அதிகாரம் பெற்றிருந்தார். வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்த ஆவணங்களைப் பேஷ்வா அலுவலகம் அங்கொன்று இங்கொன்றாகச் சரி பார்த்தது. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொருமுறை ஏலம் விடப்பட்டன. குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பேஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தில் வெற்றிபெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும் நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும். எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதிவரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப்பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்குக் கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும். செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும் கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது. முகலாயர்களோடு ஒப்பிடுகையில் பேஷ்வாக்களின் ஆட்சி நவீனமாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. முகலாயரின் வீழ்ச்சிக்கு ராணுவ ரீதியாகப் பங்களிப்புச் செய்தவர்கள் பேஷ்வாக்களாவர்.


மராத்தியர்களின் வீழ்ச்சி


மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761இல் டெல்லிக்கு அருகேயுள்ள பானிப்பட்டில் முடிந்தது. பஞ்சாபைக் கடந்து தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவடையச் செய்ய மராத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி ஆப்கானியர்களின் அரசர் அகமதுஷா அப்தாலியால் தடுக்கப் பெற்றது. அப்தாலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன்னர், எட்டுமுறை படையெடுத்துள்ளார். தளபதிகள் பலரின் கீழ் பிரிந்திருந்த மராத்தியப் படையினர் பலவகையான தந்திரங்களுடன் போரை அணுகினர். 1761இல் நடைபெற்ற மூன்றாம் பானிப்பட்போரைப் பீரங்கிப் படைகள் தீர்மானித்தன. ஆப்கானியர்களின் இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லக் கூடிய பீரங்கிப் படைகள் மராத்திய காலாட்படையினரையும் குதிரைப்படையினரையும் கொன்று குவித்தன. தகர்த்தெறியப்பட்டன. தப்பிப்பிழைத்த மராத்திய வீரர்கள் பானிப்பட்டிலிருந்து மகாராஷ்டிரா திரும்பி நடந்ததைக்கூற ஆறுமாத காலமானது. இந்நேரத்தில் துணைக் கண்டத்தின் மீதான மராத்தியர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.


Tags : Term 2 Unit 3 | History | 7th Social Science இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 2 Unit 3 : Rise of Marathas and Peshwas : Rise of Peshwas Term 2 Unit 3 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -1 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி : பேஷ்வாக்களின் எழுச்சி - இரண்டாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -1 : மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி