மௌரியருக்குப் பிந்தைய காலம் - வரலாறு - சாகர், பார்த்தியர், குஷாணர் | 11th History : Chapter 6 : Polity and Society in Post-Mauryan Period
சாகர், பார்த்தியர், குஷாணர்
வடமேற்கு இந்தியாவிலிருந்த இந்தோ-கிரேக்க அரசுகள், சாகர் (சித்தியன்கள்), பார்த்தியர் (பஹ்லவிகள்), குஷாணர் (சீனத்தில் யுயி -சி அல்லது யுயசி (yuehchi or yuezhi) இனக்குழுக்கள்) என்றறியப்பட்ட பல்வேறு மத்திய ஆசிய நாடோடி இனக்குழுக்களால் அகற்றப்பட்டன. அவர்கள், கிரேக்கர்களின் பழக்கத்தைப் பின்பற்றி தங்களின் பெயர்களையும் பட்டங்களையும் (பெரும்பாலும் “அரசர்களின் அரசன்") கொண்ட நாணயங்களைப் பெருமளவில் வெளியிட்டனர். இருந்தபோதிலும் நமது வரலாற்றில் இது ஒரு குழப்பம் மிகுந்த காலமாகும். இந்தியாவுக்கு வந்து ஆட்சி அமைத்த பல்வேறு இனக்குழுக்களின் அரச பரம்பரையின் வம்சாவளிகளை கண்டறிவது ஒரு சவாலான பணியாகும்.
முதலில் எழுகின்ற கேள்வி யாதெனில், நாடோடிப் பழங்குடியினராக இருந்தவர்கள் ஏன் எப்படி போர் செய்பவர்களாக, கைப்பற்றுபவர்களாக மாறினார்கள். மத்திய ஆசியாவில் நடைபெற்ற சிக்கலான, அடுத்தடுத்து நடந்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் குடிபெயர்வுகளின் விளைவாக இப்பழங்குடியினரின் இந்திய வருகை நிகழ்ந்தது. மத்திய ஆசியாவின் கிழக்குப் பகுதியில், நாடோடி இனத்தவரின் சூறையாடல்களைத் தடுக்கவும், சூறையாடல்களிலிருந்து தங்கள் கிராமங்களையும் வேளாண்மையையும் காத்துக்கொள்ளவும் சீனர்கள் பெருஞ் சுவரைக் கட்டினர். இதனால் யுயி - சி எனும் பழங்குடி மக்கள் மேற்கு நோக்கித் தள்ளப்பட்டனர். அப்பகுதியில் வசித்த சாகர்களைக் கிழக்கு ஈரானுக்குத் தள்ளினர். அங்கு செலுசியப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தியர் ஆட்சி அமைத்திருந்தனர்.
சாகர்கள்
கிழக்கு ஈரானிலிருந்து பார்த்திய ஆட்சியாளர் மித்ரடேட்ஸால் வெளியே தள்ளப்பட்ட சாகர்கள், பிறகு வடமேற்கு இந்தியாவை நோக்கித் திரும்பி, இறுதியில் சிந்துவெளிக்கும் சௌராஷ்டிரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் குடியமர்ந்தனர். இந்தியாவின் முதல் சாக ஆட்சியாளர் மௌஸ் அல்லது மொ/மொகா (தோராயமாக, பொ.ஆ.மு.80) ஆவார். காந்தாரத்தைக் கைப்பற்றிய அவர், இந்தோ - கிரேக்க அரசுகளுக்கிடையே ஒரு பிளவை ஏற்படுத்தினார் என்றாலும் அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அஸிதான் இந்தோ - கிரேக்க அரசாட்சிகளின் கடைசி மிச்சங்களை இறுதியாக அழித்து, கிழக்கே மதுரா வரையிலும் சாகர்களின் ஆட்சியை விரிவுபடுத்தினார்.
இந்தியாவில் சாகர்கள், இந்து சமூகத்துக்குள் இரண்டறக் கலந்துவிட்டனர். இந்துப் பெயர்களையும் மத நம்பிக்கைகளையும் கைக்கொள்ளத் தொடங்கினர். அவர்களது நாணயங்களின் ஒரு பக்கத்தில் இந்துக் கடவுளர்களின் உருவம் பொறிக்கப்பட்டது. சாகர்கள் தங்களின் ஆட்சிப் பகுதிகளை நிர்வகிக்க சத்ரப்களை மாகாண ஆளுநர்களாக நியமித்தனர். சத்ரபாக்கள் பலரும் தங்களுக்கு மஹாசத்ரபாக்கள் எனப் பட்டம் சூடிக்கொண்டதோடு, நடைமுறையில் சுதந்திர ஆட்சியாளர்களாயினர்.
புகழ்பெற்ற சாக சத்ரப்களில் ஒருவர்தான் ருத்ரதாமன் (பொ.ஆ. 130 முதல் 150). புகழ்பெற்ற ஜுனாகத் பாறைக் கல்வெட்டில் (குஜராத்) அவரது வெற்றிகள் போற்றப்பட்டுள்ளன. இக்கல்வெட்டின்படி, சாதவாகனர்களையும் கூட அவர் போரில் தோற்கடித்துள்ளார். இவர் காலத்தில் சாகர்கள் இந்திய சமூகத்தோடு இணைந்து கலந்துவிடும் செயல்முறையானது முழுமையடைந்து விட்டதை இவரது பெயரே சுட்டிக் காட்டுகிறது.
குஷாணர்
காபூலை முதலில் கைப்பற்றிய (சுமார் பொ.ஆ. 43) பார்த்திய கோண்டோபெர்னெஸ் என்பவரால் சாகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். காபூல் பள்ளத்தாக்கைக் குஷாணரிடம் அவர் இழந்தார் என்றாலும் இந்தியாவில் சாகர்களை எதிர்த்து அதிக வெற்றி பெற்றது அவர்தான். அவரது ஆட்சி குறித்த பதிவுகள் பெஷாவர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பார்த்தியருக்கு எதிராக தங்களுக்கு உதவுமாறு சாகர்கள், குஷாணர்களை (யுயி - சி) அணுகினர். ஆப்கானிஸ்தானை வென்றடக்கிய முதல் குஷாண அரசர், குஜிலா காட்பிசெஸ் ஆவார். அவரைத் தொடர்ந்து வந்தவர் விமா காட்பிசெஸ். இவ்விரு அரசர்களும் குஷான ஆட்சிப் பகுதியைக் காந்தாரத்துக்கும் பஞ்சாபுக்கும் கிழக்கே மதுரா வரையில் கங்கை யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் விரிவுபடுத்தினர்
கனிஷ்கர்
குஷாண அரசர்களில் நன்கு அறியப்பட்டவர் கனிஷ்கர் ஆவார். பொ.ஆ. 78 தொடங்கி பொ.ஆ. 101 அல்லது 102 வரையிலும் ஆட்சி புரிந்ததாகக் கருதப்படுகிறது. இந்திய நாள்காட்டியில் சக சகாப்தத்தின் தொடக்கமாக பொ.ஆ. 78 கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கனிஷ்கரின் காலம் பற்றி வரலாற்றாளர்கள் மாறுபடுவதோடு அவரது ஆட்சி, பொ.ஆ. 78க்கும் பொ.ஆ. 144க்கும் இடையில் எப்போதோ தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆர்வமிக்க ஒரு பௌத்த ஆதரவாளரான கனிஷ்கர், நான்காம் பௌத்த மகாசங்கத்தை கூட்டிய புரவலர் ஆவார். (மூன்றாம் மகாசங்கம் அசோகரின் ஆட்சி காலத்தில் பாடலிபுத்திரத்தில் நடந்தது.) இக்காலத்தில் மஹாயான பெளத்தம் மேலாதிக்கம் செலுத்தும் பிரிவாகியிருந்தது. பெளத்தத்தைப் போதிப்பதற்காகச் சீனாவுக்கு அனுப்பப்பட்ட மதப் பரப்புநர்களைக் கனிஷ்கர் ஆதரித்தார்.
குஷாணரின் நாணயங்கள் உயர்ந்த தரமுள்ளவை என்பதோடு ரோமானிய நாணயங்களின் எடைத் தரங்களுக்கு ஒத்திருந்தன. அவை குஷாண ஆட்சியாளர்களை “அரசர்களின் அரசர்', “ஸீசர்', “அகிலத்தை ஆள்பவன்” என்பன போன்ற பிற பட்டப் பெயர்களால் குறிப்பிடுகின்றன. அதே நேரம், இந்த நாணயங்களில் அரசர்களின் உண்மையான பெயர்கள் அதிகமாக இடம் பெறவில்லை. எனவே குஷாண அரசர்கள் குறித்து நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் மிகவும் உறுதியற்றவனவாக உள்ளன. கனிஷ்கரின் நாணயங்களும் கூடவே மதுரா அருகே காணப்படும் அவரது சிலையும் அவர் மத்திய ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதற்குச் சான்று கூறும் விதத்தில், வார் பூட்டிய அங்கி, நீண்டமேலங்கி, காலணிகளும் அணிந்தவராகக் காணப்படுகிறார்.
சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து மேற்கொண்ட, 1979ஆம் ஆண்டு நிறைவு பெற்ற, காரகோரம் நெடுஞ்சாலைத் திட்டம், தொல்லியலாளர்களுக்கும் வரலாற்றாளர்களுக்கும் பெரும் பலன்களை அளித்துள்ளது. ஹுஸ்னா பாறைக் கல்வெட்டு முதல் இரண்டு காட்பிசெசுகள் குறித்து குறிப்பிடுவதுடன், குஷாண தேவபுத்ர (கடவுள் மகன்), மஹாராஜா என்று கனிஷ்கர் குறித்தும் சுட்டப்படுகிறது. கனிஷ்கரின் பேரரசு மத்திய ஆசியா முதல் கிழக்கு இந்தியா வரை பரவி,
விரிந்திருந்ததை இந்தக் கல்வெட்டு உறுதிசெய்கிறது. அவர், மகதத்தையும் காஷ்மீரையும் கூடவே சின்கியாங்கிலுள்ள கோடனையும் கைப்பற்றியதாக பௌத்த சான்றுகள் பதிவுசெய்துள்ளன.
காரகோரம் நெடுஞ்சாலை நெடுகிலும் கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருள்கள், பௌத்தத்தைப் பரப்புகிற தங்களின் பணிக்காகப் பௌத்தத் துறவிகள் சீனாவுக்குச் சென்றது இச்சாலையில்தான் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. பௌத்த மதத் துறவிகளைப் பின்பற்றி வணிகர்களும் இச்சாலை வழியாகச் சென்றுள்ளனர். இதனால், சீனாவிலிருந்து பட்டு, மேற்காசிய நாடுகளிலிருந்து குதிரைகள் ஆகியனவற்றை இந்தியா இறக்குமதி செய்ய இச்சாலை ஒரு முக்கிய வணிக வழியாக மாறியது. மேற்கு நாடுகளின் வணிகர்கள் மத்திய ஆசியாவுக்கு அப்பால் மேலும் கிழக்கே செல்ல விரும்பவில்லை. இந்திய வணிகர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய ஆசியாவின் பல்வேறு நகரங்களில் தங்களை நிறுவிக்கொண்டு, சீனாவுக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையேயான ஆடம்பரப் பொருள் வணிகத்தில் இடைத்தரகர் ஆவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்.
பெரும்பாலும் ‘ஷ்க’ என்று முடிகிற பெயர்களைக் கொண்ட (இவர்களுள் ஹுவிஷ்கா, வசிஷ்கா, கூடவே பிந்தைய கனிஷ்கர்களும் ஒரு வாசுதேவர் உள்ளிட்ட) குஷாண அரசர்கள் குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சி செய்தனர் என்றாலும் அவர்கள் குறித்து அதிகம் தெரியவில்லை. பேரரசு, சிதையத் தொடங்கியது என்பது தெளிவு என்பதோடு சத்ரப்கள் (மாகாணங்களை ஆள்வதற்கு சத்ரப்களை நியமிக்கும் வழக்கத்தைக் குஷாணரும் தொடர்ந்தனர்), பல்வேறு மாகாணத் தலைநகரங்களில் தங்களைச் சுதந்திரமான ஆட்சியாளர்களாக அமைத்துக்கொள்ள முடிந்தது.
கலையும் இலக்கியமும்
குஷாணர் காலத்தில் நிலவிய பெருமளவிலான படைப்பாற்றலின் காரணமாகக் கலையும் இலக்கியமும் செழித்திருந்தன. அரசர்கள் நல்கிய ஆதரவும் இதற்கு ஓரளவிற்குக் காரணமாகும். மஹாயான பௌத்த மத வளர்ச்சி போன்றவை பிற காரணங்களாகும். மஹாயான பௌத்த மதம் புத்தரை மனித வடிவில் சித்தரிப்பதை அனுமதித்தது. சிலை வடிப்புக் கலையில் கிரேக்க தாக்கத்தின் காரணமாக இந்திய - கிரேக்கக் கூறுகள் ஒன்றிணைந்து புதிய முறை உருவானது. அது பொதுவாகக் காந்தாரக் கலை என்றழைக்கப்படுகிறது. இது இந்தோகிரேக்க பாணியிலான சிற்பங்களும் கலையும் தோன்றுவதற்கு வழிவகுத்தது. குறிப்பாக, தட்சசீலத்திலும் வட-மேற்குப் பகுதிகளிலும் செதுக்கப்பட்ட புத்தரின் சிலைகள், கிரேக்க மரபால் ஊக்கம் பெற்று, கண்ணியமான ஆடைகளில், தேவ தூதர்களாலும் இலைகளாலும் சூழப்பட்டுள்ளதாக அவரைக் காட்டுகின்றன. எனினும், மதுரா அருகே செம்மணற்கல்லில் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ள பல சிற்பங்களையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
அஜந்தா குகைகள் முதல் மும்பையில் கன்ஹேரி குகைகள் வரை பௌத்தர்கள் மேற்கிந்தியாவிலுள்ள குன்றுகளில் பாறைகளைக் குடைந்து குகைகளை அமைத்தனர். விகாரங்களையும் சைத்தியங்களையும் கொண்டிருந்த அவை பௌத்த மத மையங்களாக செயல்பட்டன. இவ்வாறான குகைகள் மஹாயான மரபின் ஒரு பகுதியாக இந்தக் குகைகளில் புத்தரின் பெரிய அளவு சிலைகள் செதுக்கப்பட்டன. மேலும் பிந்தைய நூற்றாண்டுகளில் அவை, அஜந்தா குகைகளில் காணப்படுவதைப் போல அசாதாரண அழகுள்ள சுவர்ச் சித்திரங்களால் மேலும் ஒப்பனை செய்யப்பட்டன.
காந்தாரக் கலை: பண்பாட்டுத் தாக்கங்கள் சங்கமிக்குமிடத்தில் அமைந்துள்ள காந்தாரம் கிரேக்க மற்றும் ரோமானியப் பண்பாடுகளின் செல்வாக்குக்கும் உட்பட்டது. பொ.ஆ. முதல் நூற்றாண்டில் காந்தாரக் கலை வடிவங்கள் வளர்ச்சியடைந்தன. குஷாணப் பேரரசுக் காலத்தில், ரோமுடனான அதன் தொடர்புகளினால் ரோமானியக் கலை நுட்பங்கள் இந்தியக் கலை நுட்பங்களோடு கலந்து, வட மேற்கு இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டன. ஆன்ம நிலையில் - கண்கள் பாதி மூடிய நிலையில் - தியானத்திலிருக்கிற புத்தரைச் சித்தரித்ததற்காகக் காந்தாரக் கலை புகழ்பெற்றது.
பௌத்த ஆசான் நாகார்ஜுனர், பௌத்தத் தத்துவஞானிகள் அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், போன்றோரின் புரவலராகப் பேரரசர் கனிஷ்கர் திகழ்ந்தார். அஸ்வகோஷர், அவரது புத்த சரிதம் நூலுக்காகப் புகழ்பெற்றவர் என்பதோடு ஒன்பது காட்சிகளில் அமைந்த சரிபுத்ரப்ரகரண என்ற முதல் சமஸ்கிருத நாடகத்தின் ஆசிரியர் என்பதற்காகவும் போற்றப்படுகிறார். மாபெரும் நாடகாசிரியர் பாசன், பெரும்பாலும் இந்தக்காலத்தைச் சேர்ந்தவராவார். பாசன் எழுதிய நாடகங்கள் சென்ற நூற்றாண்டில்தான் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்து மத நூல்களில் மனுஸ்மிருதி, வாத்சயாயனரின் காமசூத்ரம், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்கள் இதே பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டில்தான் இறுதி வடிவம் பெற்றன என்பதையும் அறிகிறோம்.