வரலாறு - மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் | 11th History : Chapter 6 : Polity and Society in Post-Mauryan Period
மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்
கற்றல் நோக்கங்கள்
•
இந்தியாவில் கிரேக்கர்களின் பண்பாட்டுத் தாக்கத்தை அறிதல்
• இந்தோ -கிரேக்க ஆட்சியாளர்கள், அவர்களின் பங்களிப்பு ஆகியன குறித்து அறிதல்
• மத்திய ஆசியாவிலிருந்து சாகர், பார்த்தியப் பஹ்லவர், குஷாணர் ஆகியோர் மேற்கொண்ட படையெடுப்புகள் குறித்து அறிதல்
• இந்தியா, மத்திய ஆசியா இடையிலான தொடர்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுதல்
• கலை, இலக்கியத்தின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளுதல்
• ரோம் நாட்டினுடனான வணிகத்தின் வீச்சு பொருளாதாரத்தின் மீதான அதன் தாக்கம் ஆகியனவற்றை அறிதல்.
அறிமுகம்
பேரரசர் அசோகர் இறந்ததையும், அதன் விளைவாக மெளரியப் பேரரசின் வீழ்ச்சியையும் தொடர்ந்து வந்த நான்கு நூற்றாண்டுகளில் இந்தியாவின் சில பகுதிகள் மேற்காசியா, மத்திய ஆசியாவைச் சேர்ந்த இந்தோ - கிரேக்கர், சாகர், குஷாணர் ஆகியோரின் படையெடுப்புகளுக்கு உள்ளாயின. இவர்கள் அனைவருமே இந்தியாவின் பெரும் பகுதிகளில் தங்களின் ஆட்சிகளை நிறுவினர். இது, இந்தியச் சமூகத்திற்குள், பண்பாட்டுமயமாக்கம், அந்நிய நாடுகளின் பண்பாடுகள், கலை வடிவங்கள் ஆகியவற்றைத் தன்வயப்படுத்துதல் ஆகிய செயல்முறைகளை வலுப்படுத்தியது. மேலும், இது விரிவான வணிகத் தொடர்புகள் மூலம் மத்தியத் தரைக்கடல் பகுதிகள், மத்திய ஆசியா, சீனா ஆகியவற்றோடு இந்தியாவை ஒருங்கிணைத்தது.