மௌரியருக்குப் பிந்தைய காலம் - வரலாறு - தமிழக அரசாட்சிகள் | 11th History : Chapter 6 : Polity and Society in Post-Mauryan Period
தமிழக அரசாட்சிகள்
நாட்டின் வட பகுதியில் நிகழ்ந்துவந்த அரசியல் மாறுதல்களால் தென்னிந்தியா பாதிக்கப்படாமல் இருந்தது. பொ . ஆ. முதல் நூற்றாண்டு வாக்கில், நவீன ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தக்காணப் பகுதியில் சாதவாகன ஆட்சி நிறுவப்பட்டது. எனினும் இது, மௌரியர்களின் மையப்படுத்தப்பட்ட பேரரசைப் போல இருக்கவில்லை. அதோடு சாதவாகனர்களின் மாகாண ஆட்சியாளர்கள் கணிசமான அளவுக்குத் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தினர்.
வடக்கே பேரரசுகள் விரிந்து பரந்த பேரரசுகள் தழைத்தோங்கியதற்கு மாறாக, தமிழ்ப் பகுதியின் அரசியல் நிலப்பரப்பு சிறு சிற்றரசுகளாகத் துண்டுபட்டிருந்தது. தமிழ்ப் பகுதி, மதுரையைத் தங்களின் தலைநகராகக் கொண்டு பாண்டியர், உறையூரைத் (தற்போதைய திருச்சியின் ஒருபுற நகர்) தங்களின் தலைநகராகக் கொண்டு சோழர், வஞ்சியிலிருந்து (நவீன கால கரூர் நகரம்) சேரர் என மூவேந்தர்களால் ஆளப்பட்டது. பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே மௌரிய அரசர்கள் தமிழ் மூவேந்தர்களை அறிந்திருந்தனர் என்பது நாமறிந்ததே. மேலும் அசோகரின் இரண்டாவது பாறைக் கல்வெட்டாணை அவர்களைத் தனது பேரரசின் எல்லையிலிருந்த அரசுகள் என்று குறிப்பிடுகிறது. மேலும், அவற்றுடன் சிறிய பகுதிகளை ஆட்சி செய்த பல போர்ப் பிரபுக்களும் சிற்றரசர்களும் (இவர்கள் வேளிர் எனக் குறிப்பிடப்படுவோர்) இருந்தனர்.
பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியைச் சேர்ந்த, சங்க இலக்கியம் என்று அறியப்படுகிற தமிழ் இலக்கியங்களின் தொகுப்பிலிருந்து தமிழ்ப் பகுதி குறித்த விரிவான தகவல்களை பெறமுடிகிறது. இவற்றுடன் ஓரளவு பிற்காலத்தில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். தமிழ்ப் பகுதியுடன் மேற்கொள்ளப்பட்ட மிக பெருமளவிலான வணிகம் ரோமானிய, கிரேக்க வரலாற்றாளர்களிடத்திலும் புவியியலாளர்களிடத்திலும் ஒரு பெரும் ஆர்வத்தைத் தூண்டியது; மேலும் அவர்களின் விவரங்கள், தமிழ் சான்றுகளில் விடுபட்டுள்ள, குறிப்பாக வணிகம் தொடர்பான தகவல்களை நிறைவு செய்வதாக அமைகிறது. பொ.ஆ. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கிரேக்க வரலாற்று ஆவணமாக ”எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ்” (Periplus of the Erythrean Sea) (Periplus Maris Erythreai) இந்தியக் கடற்கரையிலிருந்த துறைமுகங்கள், அங்கு நிகழ்ந்த வணிகம் ஆகிய தகவல்களை வழங்கும் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட சான்றாகும். தொல்லியல் கண்டுபிடிப்புகள் இந்தச் சான்றுகள அனைத்திலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை உறுதிசெய்கின்றன.
பன்னாட்டு வணிகத்தின் வரையறைகள்
பொது ஆண்டின் தொடக்க வாக்கில் இரண்டு முக்கியமான வளர்ச்சிகள், ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்குமான வணிகத்தின் வரையறைகளை மாற்றியமைத்தது. பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில், கிரேக்க அரசுகளை அகற்றிவிட்டு மத்திய தரைக் கடல் உலகின் வல்லரசாக ரோம் மேலெழுந்தது. மேலும் ரோமானியக் குடியரசு, பொ.ஆ.மு. 27இல் பேரரசர் அகஸ்டஸின் கீழ் ஒரு பேரரசு ஆயிற்று. அநேகமாக, ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் பெற்ற வெற்றிகள் மூலம் குவித்திருந்த மிகப் பெரும் செல்வங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரோம்தான் உலகிலேயே ஆகப் பெரியதும் செல்வச் செழிப்பு மிக்கதுமான நகரமாகும். ரோமின் செல்வச் செழிப்பு, இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பொருள்களின், குறிப்பாக தமிழ் நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் துணி வகைகளின், தேவையை அங்கு பெருமளவிற்கு அதிகரித்து ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
பொ.ஆ. முதல் நூற்றாண்டில், எகிப்தியக் கடலோடி ஹிப்பாலஸ் என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலமுறை இயல்புகளைக் கண்டறிந்தார். இது இரண்டாவது வளர்ச்சியாகும். அது வரை, இந்தியாவுக்கும் மத்திய தரைக் கடலுக்கும் இடையிலான கடல் வணிகம், அரபியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும், ரோமாபுரிக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட இலவங்கப்பட்டை போன்ற பொருள்களின் உற்பத்தி மையங்கள் தென்னிந்தியாவில் எங்கிருந்தன என்பதைப் பற்றிய அறிவை அரபியர்களே ஏகபோகமாக கொண்டிருந்தனர். ஆனால் நேரடி கடல் வழி குறித்த தகவல் அனைவருக்கும் தெரிந்த செய்தியாக ஆன போது, ரோமானியக் கப்பல்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு நேரடியாகப் பயணிக்கத் தொடங்கின. இதனால் அவர்கள், கடற்கொள்ளையர்களின் பயம் நிறைந்த, பயண வழிகளைத் தவிர்க்க முடிந்தது. மேலும் தரை வழித் தடமும் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது. ஏனெனில், தரை வழித் தடத்தில் வணிகர்கள், இரானில் பார்த்தியரின் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு இருந்தது. அதிகரித்த வண்ணமிருந்த ரோமானியரின் தேவைகளும், இந்தியாவிற்கான நேரடி கடல் வழி திறப்பும் இணைந்ததின் இறுதி விளைவாக இந்தியாவிற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்ந்தது. ஆண்டொன்றுக்கு இருபது கப்பல்கள் என்பதிலிருந்து ஏறக்குறைய அன்றாடம் ஒரு கப்பல் என்பதாக அதிகரித்தது.