மூன்றாம் பருவம் அலகு -1 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - தென் அமெரிக்கா - கண்டங்களை ஆராய்தல் | 7th Social Science : Geography : Term 3 Unit 1 : Exploring Continents -North America and South America
தென் அமெரிக்கா
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவிற்கு அடுத்து உலகின் நான்காவது பெரிய கண்டங்களுள் ஒன்று தென் அமெரிக்கா, அமெரிக்க கண்டத்தின் பெரும் பகுதி தெற்கு அரைக்கோளத்தில் இருப்பதால் இது "தென் கண்டம்" என்று அழைக்கப்படுகிறது. வடமேற்கில் உள்ள பனாமா நிலச்சந்தி தென் அமெரிக்காவை வடஅமெரிக்காவுடன் இணைக்கிறது.
மத்திய அமெரிக்காவுடன் இணைந்து தென் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது ஐரோப்பியர்கள் குறிப்பாக ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துகீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் காலனியாக ஆட்சி செய்யப்பட்டதால் இப்பெயரை பெறுகிறது.
அமைவிடம்
தென் அமெரிக்கா 12° வடக்கு முதல் 55° தெற்கு அட்சங்கள் வரையிலும் 35° மேற்கு முதல் 81° மேற்கு தீர்க்க ரேகைகள் வரையிலும் பரவியுள்ளது. அமேசான் ஆற்றின் முகத்துவாரத்தின் வழியாக பூமத்திய ரேகை (0°) கடக்கின்றது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரம் வழியாக மகர ரேகை (231/2° தெற்கு அட்சரேகை) கடக்கின்றது. தென் அமெரிக்கா தலைகீழ் முக்கோண வடிவத்திலான ஓர் நிலப்பகுதி ஆகும். தென் அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்பு 17,840,000 சதுர கிலோ மீட்டர்கள். இது உலகின் மொத்த நிலப்பரப்பில் 15 சதவீதத்தை பிடித்துள்ளது.
இயற்கை அமைப்பு
தென் அமெரிக்கா, வட அமெரிக்காவைப் போலவே நிலத்தோற்றங்கள் மற்றும் இயற்கை அமைப்புகளைக் கொண்டுள்ளது. தென் அமெரிக்கா உலகின் பழமையான மற்றும் இளைய பாறைகளால் ஆனது. இயற்கை பிரிவுகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட நிலத்தோற்றங்களாக பிரிக்கப்படுகின்றன.
* ஆன்டஸ் மலைத்தொடர்
* ஆற்றுப்படுகை அல்லது மத்திய சமவெளிகள்
* கிழக்கு உயர் நிலங்கள்.
ஆன்டஸ் மலைத்தொடர்
இமயமலை போன்றே ஆன்டஸ் மலைத்தொடர் மடிப்பு மலைகளால் ஆனது. இது உலகின் மிக நீண்ட மலைத்தொடர் ஆகும். பசிபிக் கடற்கரை ஓரமாக 6,440 கி.மீ நீளத்திற்கு இம்மலைத்தொடர் நீண்டுள்ளது. அர்ஜென்டினா எல்லையில் 6,961 மீ. உயர்ந்துள்ள தணிந்த எரிமலையான அகான்காகுவா சிகரம் ஆன்டஸ் தொடரின் உயர்ந்த சிகரமாகும். சிலி நாட்டில் இம்மலைத்தொடர் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. வட அமெரிக்காவின் ராக்கி மலைகளைப் போன்று இம்மலைகளின் மேற்குப் பகுதி வன்சரிவாகவும் கிழக்குப்பகுதி மென் சரியாகவும் அமைந்துள்ளது. பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதால் நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்படுகின்றன. கடோபாக்ஸி (5,991 மீ.) போன்ற பல சீரும் எரிமலைகள் ஆன்டிஸ் மலைத்தொடரில் காணப்படுகின்றன. ஆன்டிஸ் மலைத்தொடரில் தாமிரம், தகரம் போன்ற உலோகங்களும் மற்றும் மரகதம் போன்ற விலை மதிப்பற்ற கற்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.
ஆற்றுப் படுகைகள் அல்லது மத்திய சமவெளிகள்
தென் அமெரிக்க கண்டத்தில் பாதிக்குமேலுள்ள நிலப்பரப்பு சமவெளிகளாக உள்ளன. மூன்று பெரிய ஆறுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. அவற்றில் மிகப்பெரிய ஆறு அமேசான் ஆறு ஆகும். கரிசல் மண் பரப்பைக் கொண்ட அமேசான் ஆற்றுப்படுகை உலகின் அடர்த்தியான காடுகளைக் கொண்ட பகுதியாகும். இப்படுகை ஆன்டிஸ் மலைத்தொடர் அருகில் அகலமாகவும் முகத்துவாரத்திற்கு அருகில் குறுகியும் காணப்படுகிறது. அமேசான் படுகையில் இருந்து ஒரினாகோ ஆற்றுப்படுகையில் சிறிய அளவிலான நீர் பிரிமேடு (interfluves) பிரிக்கின்றன. இது அமெரிக்க கண்டத்தின் உற்பத்தி பகுதியாகவும் விளங்குகிறது. பரானா மற்றும் பராகுவே ஆறுகளின் சமவெளிகள் வண்டல் படிவுகளால் மூடப்பட்ட ஒரு பாறை பிரதேசமாகும். இங்கு அதிக அளவிலான பெட்ரோலிய படிவுகள் காணப்படுகின்றன.
கிழக்கு உயர் நிலங்கள்
கிழக்கு உயர் நிலங்கள் ஆன்டஸ் மலைத்தொடரை விட புதுமையானவை மற்றும் பல ஆறுகளால் வெட்டப்பட்டுள்ள பீடபூமி ஆகும். இது அமேசான் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பரவியுள்ளது. தென் அமெரிக்க கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கயானா உயர்நிலங்கள் உலகின் உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உட்பட பல நீர்வீழ்ச்சிகளை கொண்டுள்ளன. அமேசான் வடிநிலத்திற்கு தெற்கில் அமைந்துள்ளன ப்ரேசிலியன் உயர் நிலங்கள். இவை மேடு, பள்ளங்களை கொண்ட பீடபூமிகளையும் கிழக்குக் கடற்கரையிலுள்ள செங்குத்து பாறைகளையும் கொண்டுள்ளது.
காலநிலை
தென் அமெரிக்காவின் காலநிலையை அட்சக்கோடுகள், கடல் மட்டத்தின் உயரம் மற்றும் பசிபிக் அட்லாண்டிக் பெருங்கடல்களின் அருகாமை ஆகிய இம்மூன்றும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அமேசான் வடிநிலப் பகுதியில் பூமத்தியரேகை செல்வதால் இங்கு வெப்ப காலநிலை காணப்படுகிறது. அதே சமயத்தில் அதே அட்சரேகையில் ஆன்டஸ் மலைகளின் மேல் அமைந்திருக்கும் குவிடோ என்னும் நகரம் நிரந்தரமாக வசந்த காலத்தை அனுபவிக்கிறது. ஏனெனில் இது 9350 அடி அல்லது 2749.88 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் உயரத்தில் அமைந்து மிதமான காலநிலையை கொண்டுள்ளது. தென் அமெரிக்காவில் கோடைக்காலம் நவம்பர் முதல் ஜனவரி வரை காணப்படுகிறது. பிரேசிலில் வெப்பமான காலநிலை நிலவி வரும் அதே நேரத்தில் அர்ஜென்டினாவில் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. இதற்கு, கீழ் தென் அட்சரேகைகளில் அமைந்திருக்கும் அதன் அமைவிடம் காரணமாகும்.
தென் அமெரிக்க கண்டத்தின் இயற்கை பிரிவுகளும், கடலிலிருந்து தூரமும் மழைப் பொழிவின் பரவலை தீர்மானிக்கின்றன. கிழக்கத்திய காற்றுகள் அல்லது வியாபார காற்றுகள் கிழக்கு கடற்கரை பகுதிக்கும், மேற்கத்திய காற்றுகள் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கும் அதிகமான மழைப்பொழிவை தருகின்றன. பூமத்திய ரேகை பகுதியில் அமேசான் வடிநிலப் பகுதி அமைந்திருப்பதால் ஆண்டு முழுவதும் மழை பெறுகிறது. பூமத்திய ரேகையை சுற்றியுள்ள பகுதிகள் தினந்தோறும் 4 மணி 'கடிகார மழையை' பெறுகின்றன. இவை வெப்பச்சலன மழை ஆகும். கண்டத்தின் உட்பகுதிக்கு செல்லச்செல்ல மழையின் அளவு குறையும்.
பூமத்திய ரேகை பகுதிகளில் வெப்பச்சலன மழை கிட்டத்தட்ட தினமும் பிற்பகலில் நிகழ்கிறது. இது பொதுவாக மாலை 4 மணிக்கு நிகழ்கிறது, அதனால்தான் இது 4 மணி கடிகார மழை என்று அழைக்கப்படுகிறது.
வடிகால்
ஆன்டஸ் மலைத்தொடரின் அமைவு காரணமாக இக்கண்டத்தின் முக்கிய ஆறுகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. குறுகிய மற்றும் விரைவான ஆறுகள் பசிபிக் பெருங்கடலில் கலக்கின்றன. பெரு நாட்டின் கடற்கரையோரத்திலுள்ள சில ஆறுகள் நீர் பாசனத்திற்கும். நீர் மின்சாரம் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தென் அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு அமேசான் ஆறு (6,450 கிலோ மீட்டர்) ஆகும். இது உலகின் மிகப்பெரிய நதியமைப்பு ஆகும். அமேசான் ஆறு ஆயிரக்கணக்கான கிளை நதிகளை கொண்டது. ரியோ, நீக்ரோ, மதீரா மற்றும் தாபாஜோஸ் ஆகியவை மிக முக்கிய கிளை நதிகள் ஆகும். இக்கிளை நதிகள் கடலில் கலக்கும் இடத்தில் விரிவாகவும் வேகமாகவும் கலப்பதால் கடலுக்குள் 80 கிலோமீட்டர் வரை நன்னீர் கிடைக்கிறது. ஒரினாகோ ஆறு கயானா உயர் நிலங்களில் ஆரம்பித்து மேற்கு நோக்கி பாய்ந்து கரீபியன் கடலில் கலக்கிறது. பரானா மற்றும் உருகுவே ஆறுகள் வரலாற்றின் முக்கிய கிளை நதிகள் ஆகும். இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஆற்றுப் படுகை என அழைக்கப்படுகிறது. கடலில் சேரும் இடத்தில் இருந்து உள்நோக்கி குறிப்பிட்ட தூரம் வரை அனைத்து ஆறுகளும் போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளன.
அமேசான் தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நதியாகும். அதில் பாயும் நீரின் அளவு மற்றும் அதன் வடிநில பரப்பு ஆகியவற்றைக் கொண்டு உலகின் மிகப்பெரிய வடிகால் அமைப்பாக விளங்குகிறது.
இயற்கை தாவரங்கள்
தென் அமெரிக்காவில் நான்கு முக்கிய இயற்கை தாவர பகுதிகள் உள்ளன. அவை செல்வாஸ் என அழைக்கப்படும் அமேசான் காடுகள், கிழக்கு உயர்நிலங்கள், கிராண்சாக்கோ மற்றும் ஆன்டிஸ் மலைச்சரிவுகள். பூமத்திய ரேகை பகுதியில் உள்ள அமேசான் காடுகள் 'உலகின் நுரையீரல்' என அழைக்கப்படுகிறது. அமேசான் மழைக்காடுகள் உலகிலேயே மிகப்பெரிய காடுகளாகும். விலை உயர்ந்த சீமைத் தேக்கு, கருங்காலி போன்ற கடினமான மரங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. இக்காடுகளில் காணப்படும் இன்னும் பிற பொதுவான மரங்கள் ஈட்டி மரம், கொய்னா மரம் மற்றும் பனைமரம் ஆகும். ஈட்டி மரப்பட்டை கியூனைன் என்னும் மலேரியாவிற்கான மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அமேசான் காடுகள் தற்போது மெல்ல அழிந்து வருகின்றன. மனிதகுல வளர்ச்சிக்காக போக்குவரத்துப் பாதைகள், குடியிருப்புகள் மற்றும் விவசாய செயல்பாடுகள் போன்றவை இக்காடுகளை மெல்ல அழிவை நோக்கி தள்ளுகின்றன. இது எதிர்காலத்தில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கிழக்கு உயர் நிலங்களில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பலவகை மரங்கள் உள்ளன. எர்பா மேட் எனும் மரத்தின் இலைகளை கொண்டு டீ போன்ற ஒரு பானத்தை தயாரிக்கலாம். கிரான்சாக்கோ பகுதி அடர்ந்த இலையுதிர் காடுகளை கொண்டுள்ளது. இப்பகுதியில் காணப்படும் ஓர் முக்கியமான கடினமான மரம் கியுபிராகோ (Quebracho) ஆகும். இதற்கு கோடாலி உடைப்பான் என்ற பெயரும் உண்டு. கியுபிராகோ மரத்திலிருந்து டானின் தயாரிக்கப்படுகிறது. டானின் தோல் பதனிட பயன்படுகிறது. ஆன்டஸ் மலைச்சரிவுகளில் உள்ள காடுகளில் பைன், தேவதாரு, ஸ்பூரூஸ் போன்ற ஊசியிலை மரங்கள் காணப்படுகின்றன. இக்காடுகள் மோண்டானா எனவும் அழைக்கப்படுகின்றன. இவை காகிதம் மற்றும் காகித கூழ் தொழிற்சாலைகளுக்கான மென் மரங்கள் வளரும் காடுகளாகும்.
வனவிலங்கு
தென் அமெரிக்கா பலவிதமான வன உயிரினங்களால் ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளது. அமேசான் நதி படுகையில் உள்ள அடர்ந்த காடுகளிலும், சதுப்பு நிலங்களிலும், ஆற்றிலும் பலவிதமான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன வாழ்கின்றன. இக்கண்டத்தில் 1500க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன. கான்டோர் மிகப்பெரிய பறவையாகும். ஆப்பிரிக்காவின் தீக்கோழி (Ostrich) போன்று பறக்க இயலாத பறவை ரியா மற்றும் ப்ரே. டுகான், மக்காவ் (macaw) தேன் சிட்டுக் குருவி (Humming bird), பிளமிங்கோ மற்றும் பலவகையான கிளிகள் காணப்படுகின்றன. பலவகையான குரங்கினங்கள் வாழ்விடமாக காடுகள் உள்ளன. சிலந்திக் குரங்கு, ஆந்தை குரங்கு மற்றும் அணில் குரங்கு ஆகியவை மென்மையான பிராணிகளாகும். உலகின் மிகப் பெரிய பாம்பாக கருதப்படும் அனகோண்டாவும் இங்கு காணப்படுகிறது. எரும்பு தின்னிகளும், ஆர்மாடில்லோஸ் ஆகியவைதென்அமெரிக்காவில் காணப்படுகின்றன. தென் அமெரிக்காவிற்கு சிறப்பு பெற்ற விலங்கு லாமாஸ். தென் அமெரிக்க நதிகளில் பல வகையான மீன் இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் அமேசான் நதியில் காணப்படும் பிரன்ஹா எனும் வகை மீன் கடுமையான மாமிச உண்ணி ஆகும்.
தென் அமெரிக்காவின் காடுகளின் வகைகளும் அதன் தாவரங்கள் மற்றும் விலங்குகள்
வேளாண்மை
தென் அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வேளாண்மை தொழில் செய்து வாழ்கிறார்கள். இக்கண்டத்தில் தன்னிறைவு வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இக்கண்டத்தில் பெரும்பான்மையான பகுதி அமேசான் காடுகளை போன்ற காடுகளால் மூடப்பட்டுள்ளது அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே முன்னேறிய வேளாண்மை முறைகளை கொண்டுள்ளன. தென் அமெரிக்கக் கண்டத்தில் அர்ஜென்டினா, வேளாண்மை தொழிலில் முன்னேறிய நாடு ஆகும். அர்ஜென்டினாவின் ஈரப்பதம் நிறைந்த பாம்பாஸ் பகுதியில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றன. பாம்பாஸ் பகுதியின் இயற்கை மற்றும் காலநிலை அமைப்பு வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆன்டிஸ் மலைத்தொடரின் ஆறுகள் பாயும் பியட் மான் பள்ளத்தாக்குகளில் சாதகமான காலநிலைச் சூழலில் விவசாயிகள் திராட்சைத் தோட்டங்களையும் சிட்ரஸ் பழங்களையும் விளைவிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். காபி, கொக்கோ, கரும்பு, வாழை, பருத்தி போன்ற பணப்பயிர்களும் விளைவிக்கப் படுகின்றன.
கோதுமை
அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே மற்றும் சிலி ஆகிய நாடுகள் அதிக அளவில் கோதுமையை உற்பத்தி செய்கின்றன. கோதுமை அர்ஜென்டினாவின் பாம்பாஸ் பகுதிகளில் மிக அதிக அளவில் விளைவிக்கப் படுகின்றன. உலகின் முக்கிய கோதுமை உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் அர்ஜென்டினா விளங்குகிறது.
கரும்பு
தென் அமெரிக்காவின் ஈரப்பதம் மிகுந்த வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு உற்பத்தி செய்கின்றன. ஸ்பானியர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்கள் கரும்புப் பயிரை மேற்கிந்திய தீவுகளுக்கும், பிரேசில் நாட்டிற்கும் அறிமுகப்படுத்தினர். தென் அமெரிக்காவிலுள்ள பிரேசில் அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்கிறது.
சோளம்
சோளம் என்பது மக்கா சோளம் எனவும் அழைக்கப்படுகின்றது. பாம்பாஸின் வெப்பமான பகுதிகளிலும், பிரேசிலின் கடற்கரை பகுதிகளிலும், அமேசான் வடிநிலத்தின் சில பகுதிகளிலும் சோளம் விளைவிக்கப்படுகின்றன. அவ்வபோது மழை பெய்யும் கோடை காலமும் வெப்ப காலநிலையும் சோள உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது. உலகில் சோள உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் அர்ஜென்டினா முதன்மை நாடாக விளங்குகின்றது.
காபி மற்றும் கொக்கோ
காபியும் கொக்கோவும் தென் அமெரிக்காவின் மிக முக்கியமான தோட்டப்பயிர்களாகும். அதிக வெப்ப நிலையும் அடிக்கடி ஏற்படும் மழை பொழிவும், மழைநீர் தேங்கி நிற்காத மண் வளமும், இப்பயிர்கள் விளைய ஏற்றதாக உள்ளது. பிரேசிலின் உயர் நிலங்களின் செம்மண் பகுதிகளில் இவை நன்கு விளைகின்றன. பிரேசில் அடிப்படையில் ஒரு விவசாய நாடு. இது காபி உற்பத்தியில் உலகின் முதல் இடத்தையும், கொக்கோ உற்பத்தியில் உலகின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மனாஸ் கிராயஸ் மற்றும் சாவோ பாலோ முக்கிய காபி விளையும் பகுதிகளாகும். பிரேசில் உலகின் 'காபி பானை ' (Coffee Pot) என அழைக்கப்படுகின்றது. கொலம்பியாவும் வெனிசுலாவும் அதிக அளவில் காபி உற்பத்தி செய்கின்றன. ஈக்வடார் மற்றும் கொலம்பியாவில் அதிக அளவில் கொக்கோ உற்பத்தி செய்யப்படுகிறது.
பருத்தி
தென் அமெரிக்காவின் மற்றொரு முக்கிய பணப்பயிர் பருத்தி ஆகும். வெப்ப காலநிலையும் அதிக மழை பொழிவும் பருத்தி உற்பத்தி செய்வதற்கேற்ற சூழல்களாக அமைகின்றன. பருத்தி பிரேசிலின் இரண்டாவது முக்கிய பயிராகும். சாவோ பாலோ பகுதியில் பாதியளவு பருத்தியினை உற்பத்தி செய்கிறது. வெனிசுலா மற்றும் பெரு தென் அமெரிக்காவின் பருத்தி உற்பத்தி செய்யும் பிற நாடுகள் ஆகும்.
பார்லி, கம்பு மற்றும் ஓட்ஸ்
பாம்பாஸ் பகுதியில் பார்லி, கம்பு மற்றும் ஓட்ஸ் பெருமளவில் உற்பத்தி செய்யப் படுகின்றன. பார்லி புல் வகையை சேர்ந்த ஓர் முக்கிய தானியப் பயிராகும். இது மிதவெப்ப மண்டல கால நிலையில் நன்கு விளைகிறது. அர்ஜென்டினா, உருகுவே, சிலி, ஆன்டஸ் பகுதி, பொலிவியா உயர் நிலங்கள், ஈக்வடார் மற்றும் பெரு போன்ற பகுதிகளில் ஓட்ஸ் அதிக அளவில் உற்பத்தி செய்கின்றது. பல்வேறு நாடுகளில் கால்நடைகளின் முக்கிய உணவு ஓட்ஸ் ஆகும்.
கால்நடை பராமரிப்பு
கால்நடை பராமரிப்புத் தொழில் தென் அமெரிக்காவில் ஒரு முக்கிய பொருளாதார செயல்பாடாகும். லானோஸ் மற்றும் காம்போஸ் ஆகியவை தென் அமெரிக்காவின் வெப்பமண்டல புல்வெளிகள் ஆகும். அர்ஜென்டினாவின் பாம்பாஸ்ஸில் இறைச்சிக்கான கால்நடைகள் வளர்க்கப் படுகின்றன. மேலும் வண்டி இழுக்கவும் வளர்க்கப்படுகின்றன. வெனிசுலாவின் ஒரினாகோ வடிநிலம், பிரேசில், கொலம்பியா போன்ற பகுதிகளில் லானோ புல்வெளி நிலங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் இங்கு நிலவும் காலநிலைக்கு ஏற்ற இனமாக க்ரயல்லோ (Criollo) வளர்ப்பு கால்நடைகள் உள்ளன. இவ்வகை கால்நடைகள் ஆல்ஃபலாஃபா என்னும் புல்வகையை உண்டு வாழ்கின்றன. பெரும் மேய்ச்சல் நிலங்கள் 'எஸ்டான்சியா' என அழைக்கப்படுகின்றன.
தென் அமெரிக்காவின் வறண்ட பகுதிகளில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. டைரா டெல் பியுகோ மற்றும் ஃபாக்லாந்து தீவுகளின் மித வெப்ப மண்டல புல்வெளிகள் ஆடுகளின் வளர்ப்பிற்கு ஏற்றவையாகும். ஆடு வளர்ப்பில் அர்ஜென்டினா மற்றும் உருகுவே முக்கிய நாடுகள் ஆகும். அர்ஜென்டினா உலகின் முக்கிய இறைச்சி ஏற்றுமதியாளராகத் திகழ்கிறது.
எஸ்டான்சியாஸ்
கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் எஸ்ட்டென்ஷன் என அழைக்கப்படுகின்றன. இவை சிறிய புல்வெளி தளங்களாக பிரிக்கப்படுகின்றன. இவை மேலும் பராமரிப்பு தளங்களாக பிரிக்கப்பட்டு இங்கு கால்நடைகள் தரம் பிரித்து முத்திரை இடப்படுகின்றன. 'எஸ்டான்சியாரே' எனப்படும் எஸ்டான்சியா பராமரிப்பாளரின் கீழ் 'கவ்சோ ' எனப்படும் வேலையாட்கள் வேலை செய்கின்றனர்.
மீன்பிடித் தொழில்
வெப்பமண்டல மீன் வகைகளின் மிகப்பெரிய உற்பத்தியாளராக பெரு விளங்குகிறது. ஹம்போல்ட் (பெரு) குளிர் நீரோட்டமானது மீன்களின் முக்கிய உணவான பிளாங்டன்களை (Plankton) பெரு நாட்டிற்கு அருகில் கொண்டு சேர்ப்பதால் மீன் உற்பத்தி அதிகமாக செய்யப்படுகின்றன. வியாபார ரீதியிலான ஆழ்கடல் மீன்பிடித்தொழில் பெருவின் கடற்கரையில் இருந்து 3000 கிலோ மீட்டர் வரை கடலுக்குள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வால்மீன், கானாங்கெளுத்தி (Mackerel), யல்லோ ஃபின் (Yellow Fin), பாம்பானா (Pompana) மற்றும் சுறா ஆகிய மீன் இனங்கள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன. தொழில் ரீதியாக ஐம்பதிற்கும் மேற்பட்ட மீன் இனங்கள் பிடிக்கப்படுகின்றன. பெருவின் கடற்கரையில் நாற்பதிற்கும் மேற்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. பைட்டா கலாலோஆகியவைமுக்கிய துறைமுகங்களாகும். கடலோர மீன்பிடித்தலோடு உள்நாட்டு மீன் பிடித்தலும் தென் அமெரிக்காவில் மேற்கொள்ளப் படுகின்றன. அமேசான் நதி பல வகையான மீன்களின் மிகப்பெரிய அருங்காட்சியமாகும். ஏறக்குறைய 750 வகையான மீன்கள் இங்கு உயிர் வாழ்கின்றன.
கனிம வளங்கள்
தென் அமெரிக்கா பல வகையான கனிம வளங்களை கொண்டுள்ளது. இக்கனிம வளங்கள் சீரற்ற தன்மையில் பரவியுள்ளன. இரும்புத்தாது, மாங்கனீசு, பெட்ரோலியம், தாமிரம் மற்றும் பாக்சைட் போன்ற முக்கியமான கனிமங்களை தன்னுள் கொண்டுள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கங்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. தொழில்துறை பொருளாதாரத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் நிலக்கரி சிறிய அளவில் இக்கண்டத்தில் கிடைக்கிறது. இயற்கையாக தோன்றும் உலகில் சோடியம் நைட்ரேட் படிவுகள் கிடைக்கும் ஒரே இடமாக தென் அமெரிக்கா உள்ளது. இது வேளாண் தொழிலில் உரம் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளாகும்.
இரும்புத்தாது
உலகின் மொத்த இரும்புத்தாது படிவுகளில் ஐந்தில் ஒரு பங்கு தென் அமெரிக்காவில் உள்ளது. பிரேசில் மற்றும் சிலி உலகின் பெருமளவிலான இரும்புத் தாது இருப்புள்ள நாடுகளாகும். ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக பிரேசில் அதிகப்படியான இரும்புத்தாது இருப்பை கொண்டுள்ளது. உலகின் மொத்த இரும்பு ஏற்றுமதியில் 15 சதவீதத்தை பிரேசில் மேற்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உயர்தரமான இரும்புத் தாது இட்டாபிரா, மினாஸ், கிராய்ஸ், கராஜாஸ் ஆகிய இடங்களில் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன.
மாங்கனீசு
அதிக அளவிலான மாங்கனீசு இருப்பு பிரேசிலில் உள்ளது. லஃபாய்டி, மினார், கிராய்ஸ் அமாபாவின் வடக்கு மாநிலத்தில் மாங்கனீசு கிடைக்கிறது.
பெட்ரோலியம்
வெனிசுலாவில் பெருமளவிலான பெட்ரோலிய படிவுகள் காணப்படுகின்றன. அர்ஜென்டினா, கொலம்பியா, ஈக்வடார், பெரு,சிலி மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளில் எண்ணை வயல்கள் உள்ளன. பெட்ரோலியம் மட்டுமே இங்கு கணிசமான அளவிற்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அர்ஜென்டினா பெரும்பாலும் பெட்ரோலிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், மத்திய கிழக்கிற்கு வெளியே மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்குகிறது.
தாமிரம்
தாமிர உற்பத்தியில் சிலி இரண்டாவது மிகப்பெரிய நாடாக விளங்குகிறது. மொத்த ஏற்றுமதியில் 40 சதவீத மதிப்பை தாமிரம் அளிக்கிறது. உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கங்கள் பெரு நாட்டில் அமைந்துள்ளன. இவை அட்டகாமா பாலைவனத்தில் உள்ளன.
பாக்சைட்
உலக பாக்சைட் உற்பத்தியில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகின் முக்கியமான பாக்சைட் சுரங்கம் அமேசான் நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. அலுமினியம் உற்பத்திக்கு மூலப்பொருளாக பாக்சைட் பயன்படுத்தப்படுகிறது.
தொழிற்சாலைகள்
தென் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி அடைந்தன. இக்கண்டத்தில் அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் சிலி ஆகிய நாடுகள் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளாகும். முதலாம் உலகப்போர் வரை பெட்ரோலியம், தாமிரம் மற்றும் இரும்பு போன்ற சுரங்கத் தொழிலில் கிடைக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தது.. தொழில்மயமாதலுக்கு முக்கியமான காரணியான உள்கட்டமைப்பு (குறிப்பாக போக்குவரத்து) போதிய அளவு வளர்ச்சி அடையவில்லை. தென் அமெரிக்காவின் கரடுமுரடான நிலப்பரப்பின் காரணமாக அங்கு ரயில் போக்குவரத்தும் சாலை போக்குவரத்தும் போதிய அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை . அமேசான் மற்றும் லா பிளாட்டா ஆறுகள் குறைந்த செலவிலான நீர்வழி போக்குவரத்தை வழங்குகின்றன. வளங்கள் நிறைந்த பூமியாக இருந்தபோதும் தென் அமெரிக்காவில் தொழில்மயமாதல் மிகவும் தாமதமாகவே துவங்கியது. உள்நாட்டில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களைக் கொண்டு தற்போது புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. தென் அமெரிக்காவில் தொழில் மயமாக்கப்பட்ட நாடாக பிரேசில் விளங்குகிறது. அதனத் தொடர்ந்து அர்ஜென்டினா இரண்டாம் இடத்தில் உள்ளது.
வரிசை எண் / நாடு / தொழிற்சாலைகள்
1. பிரேசில் - இரும்பு எஃகு, பருத்தி ஆடை, சர்க்கரை, உணவு பதப்படுத்துதல், எண்ணெய் சுத்திகரிப்பு, இரசாயனங்கள் மற்றும் ஆட்டோமொபைல்.
2. அர்ஜென்டினா - இறைச்சி பதப்படுத்துதல், பால் பொருட்கள், உணவு பதப்படுத்துதல், தோல் பதப்படுத்துதல், கம்பளி ஆடைகள், சர்க்கரை மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு
3. சிலி - எண்ணெய் சுத்திகரிப்பு, இரசாயன உரங்கள் மற்றும் தாமிரம் உருக்குதல்.
4. பெரு - சுரங்கம் மற்றும் கனிம தொழில், இரசாயனங்கள், உரங்கள், சர்க்கரை, காபி மற்றும் கம்பளி ஆடைகள்.
5. உருகுவே - பால் பொருட்கள், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் கம்பளி ஆடைகள்.
6. வெனிசுலா - எண்ணெய் சுத்திகரிப்பு, ரசாயன உரங்கள் மற்றும் தாமிரம் உருக்குதல்.
வணிகம்
தென் அமெரிக்கா உலக வர்த்தகத்தில் ஒரு முக்கிய பங்கு வருகிறது. தென் அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட வணிகத்தை பிரேசில், அர்ஜென்டினா, வெனிசுலா, பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. சர்க்கரை, காபி, கொக்கோ, புகையிலை, மாட்டிறைச்சி, சோளம், கோதுமை, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ஆளி விதை (Linseed), பருத்தி, இரும்புத்தாது மற்றும் தாமிரம் ஆகியவை தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும். இப்பொருட்கள் அதிகமாக வட அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இயந்திரங்கள், வாகனங்கள், இரசாயனங்கள், மருந்து பொருட்கள், காகிதம் மற்றும் ஆடைகள் ஆகியவை தென் அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களாகும். இவை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
போக்குவரத்து
வட அமெரிக்காவை போன்று தென் அமெரிக்காவில் போதிய அளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து வலைப்பின்னல் இல்லை. தென் அமெரிக்க கண்டத்தின் நாடுகளுக்கு இடையேயும் நாட்டிற்கு உள்ளாகவும் இருக்கும் இணைப்புகளை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலை வழி போக்குவரத்து
தென் அமெரிக்கா மிகப்பெரிய அளவிலான, மிக வேகமாக விரிவடைந்து வரும் சாலை போக்குவரத்து இணைப்புகளைக் கொண்டுள்ளது. பல நாடுகளில் குறைந்த சதவீத சாலைகள் மட்டுமே முறையாக அமைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் இரண்டு வாகனங்கள் கூட ஒரே நேரத்தில் செல்ல இயலாத அகலத்தோடு தான் சாலைகள் உள்ளன. வெனிசுலாவையும் பிரேசிலையும் இணைக்கும் சாலை, வடக்கு தெற்காக அமேசான் வடிநிலப்பகுதி வழியாக போக்குவரத்திற்கு உதவி செய்கிறது. பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை அமைப்போடு இணைந்து சாலைகளின் மிகப்பெரிய வலைப்பின்னலை பிரேசில் கொண்டுள்ளது.
இரயில் வழி போக்குவரத்து
பல தென் அமெரிக்க நாடுகளில் போக்குவரத்தின் பிரதான இடத்தை இரயில் போக்குவரத்து இழந்தது. அதற்கு பதிலாக 1960 களுக்குப் பின் வேகமாக வளர்ச்சியடைந்த சாலை போக்குவரத்து அவ்விடத்தை பிடித்தது. மேலும் தென் அமெரிக்க இரயில் போக்குவரத்து நடைமுறை பிரச்சினைகளாலும் காலாவதியான உபகரணங்களாலும் பாதிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலும் அனைத்து இருப்புப் பாதைகளும் ஒருவழி பாதையாக இருப்பதால் வேகம் குறைந்து பயணிகளின் போக்குவரத்திற்கு ஏற்றதாக அமையவில்லை. சில நாடுகளில் இரண்டிற்கும் மேற்பட்ட இருப்புப் பாதைகள் இருப்பதனால் மேம்படுத்தப்பட்ட இரயில் போக்குவரத்து ஒருங்கிணைப்பிற்கு தடையாக உள்ளன.
நீர்வழி போக்குவரத்து
தென் அமெரிக்க நாடுகளின் போக்குவரத்து அமைப்பில் கடல் வழி மிக நீண்ட காலமாக முக்கிய பங்காற்றி வருகிறது. தென் அமெரிக்காவின் பெரும்பான்மையான ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள் கண்டத்திற்கு உள்ளேயும், கண்டத்திற்கு வெளியிலும் கப்பல்கள் மூலமே கொண்டு செல்லப்படுகின்றன. தென் அமெரிக்கா பல அற்புதமான இயற்கை துறைமுகங்களை கொண்டுள்ளன.அவை ரியோ-டி-ஜெனிரோ, சால்வடார், மொண்டேவிடியோ மற்றும் வால்பரை சோ ஆகும். சிலி மற்றும் பிரேசில் போன்ற பல நாடுகள் கடல் வழியை மேம்படுத்தி பலப்படுத்த உறுதியான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகள் உள்ளன. அவை (i) நான்கு நாடுகளை உள்ளடக்கிய பராகுவே - உருகுவே வடிநிலப் பகுதி (i) ஆறு நாடுகளை உள்ளடக்கிய அமேசான் வடிநில பகுதி. இவை பல ஆயிரம் மைல்கள் பயணிக்கும் நீர் வழியை கொண்டுள்ளன.
வான்வழி போக்குவரத்து
இரண்டாம் உலகப்போருக்கு பின் வான்வழி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து உள்ளது. பயணிகள் போக்குவரத்து மற்றும் மொத்த சரக்குப் போக்குவரத்திலும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளின் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் அனைத்தும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களுக்கு நேரடி வான்வழி போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகை
உலகின் பலதரப்பட்ட கலவையான மக்கள் தொகையை கொண்டது தென் அமெரிக்கா. தென் அமெரிக்காவின் பெரும்பாலான மக்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் வருகை புரிந்த ஐரோப்பியர்களான ஸ்பானியர் மற்றும் போர்ச்சுக்கீசியரின் வம்சாவளியினர் ஆவர். ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக கொண்டு வந்ததன் விளைவாக ஆப்பிரிக்க வம்சாவளியினரும் இங்கு இருக்கின்றனர். பூர்வகுடி மக்கள் இன்றும் மலைகளிலும் மழைக்காடுகளிலும் அவர்களது சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர் என மூன்று முக்கிய இனங்கள் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன. பூர்வ குடிமக்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கலப்பினம் "மெஸ்டிஜோ" என அழைக்கப்படுகின்றது. ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் முலாடோ என அழைக்கப்படுகிறது. பூர்வ குடிமக்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் ஸாம்போ என அழைக்கப்படுகின்றது. தென் அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 42,91,15,060 அதாவது 42.91 கோடி ஆகும். சதுர கிலோ மீட்டருக்கு 21 நபர்கள் என்பது தென் அமெரிக்காவின் மக்களடர்த்தி ஆகும். உலகில் மக்கள் தொகையில் ஐந்தாம் இடத்தில் தென் அமெரிக்கா இருக்கிறது.
மக்கள் தொகை பரவல்
(அ) அதிக மக்கள் தொகை : அதிகமான மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளாக கயானா, வெனிசுலா, சுரினாம், கொலம்பியா, பிரேசில் மற்றும் பெரு உள்ளன.
(ஆ) மிதமான மக்கள் தொகை : பராகுவே சிலி உருகுவே ஆகிய பகுதிகளில் மிதமான மக்களடர்த்தி காணப்படுகிறது
(இ) மிகக் குறைந்த மக்கள் தொகை : அர்ஜென்டினா பொலிவியா மற்றும் அமேசான் வடிநிலப் பகுதி.
மொழி மற்றும் சமயம்
போர்ச்சுகீஸ் மற்றும் ஸ்பானிஷ் ஆகியவை தென் அமெரிக்காவின் பிரதான மொழிகளாகும். டச்சு, பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் ஹிந்தி ஆகியவை தென் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் பிற மொழிகள் ஆகும். தென் அமெரிக்காவின் பிரதான சமயம் கிறிஸ்துவம் ஆகும். இஸ்லாம் மற்றும் இந்து சமயமும் கிறிஸ்துவ சமயத்திற்கு அடுத்தபடியாக இங்கு பின்பற்றப்படுகின்றன.
தென் அமெரிக்க நாடுகளில் 'பல்வேறு வகையான இசைகள் உள்ளன. பிரேசிலிலிருந்து சம்பா, அர்ஜென்டினாவைச் சேர்ந்த டேங்கோ மற்றும் உருகுவே மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த கும்பியா ஆகியவை மிகவும் பிரபலமான வகைகளில் அடங்கும்.