Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | பாடச்சுருக்கம்

ஒளியியல் | இயற்பியல் - பாடச்சுருக்கம் | 12th Physics : UNIT 6 : Ray Optics

   Posted On :  22.11.2022 01:43 am

12 வது இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல்

பாடச்சுருக்கம்

கதிர் ஒளியியலில், ஒளி செல்லும் திசையில் பயணிக்கும் ஒரு கதிராக, ஒளி கருதப்படுகிறது.

பாடச்சுருக்கம்

* கதிர் ஒளியியலில், ஒளி செல்லும் திசையில் பயணிக்கும் ஒரு கதிராக, ஒளி கருதப்படுகிறது.

* ஒளி பளபளப்பாக மெருகூட்டப்பட்ட பக்கங்களினால் எதிரொளிக்கப்படுகிறது. இந்த ஒளியின் எதிரொளிப்பை, எதிரொளிப்பு விதிகளைக் கொண்டு விளக்கலாம்.

* பொதுவாகச் சமதளக் கண்ணாடிகள், இடவல மாற்றத்துடன் கூடிய மாயபிம்பங்களைப், பொருள் உள்ள தூரத்திற்குச் சமமான தொலைவில் கண்ணாடியின் உட்புறம் தோற்றுவிக்கின்றன.

* ஒருவரின் முழு உருவத்தைக் கண்ணாடியில் காண்பதற்கு, அவரின் உயரத்தில் பாதி அளவாவது கண்ணாடியின் உயரம் இருக்க வேண்டும்.

* கோளக ஆடிகள், கண்ணாடிக் கோளத்தின் ஒரு பகுதியாகும்.

* முதன்மை அச்சுக்கு நெருக்கமாகச் செல்லும் கதிர்களுக்கு (Paraxial rays) அண்மை அச்சுக் கதிர்கள் என்று பெயர்.

* அண்மை அச்சுக் கதிர்கள் உள்ள கோளக ஆடியின் f மற்றும் R க்கு இடையே ஒரு தொடர்பு உள்ளது

* ஆடிச் சமன்பாட்டின் அடிப்படையில் கோளக ஆடிகளில் பிம்பங்கள் தோன்றுகின்றன

* கார்ட்டீசியன் குறியீட்டு மரபுகளின் அடிப்படையில் கோளக அடிகளில் தோன்றும் பிம்பங்களை வரையலாம்.

* ஒளியியல் அடர்மிகு ஊடகங்களில், ஒளி குறைந்த திசைவேகத்தில் பயணிக்கிறது

* ஒளியியல் அடர்மிகு ஊடகம் ஒன்றின் வழியே ஒளி பயணிக்கும் குறிப்பிட்ட நேரத்தில், வெற்றிடத்தின் வழியே ஒளி பயணிக்கும் தொலைவே ஒளியியல் பாதை (Optical path) ஆகும்.

* ஒளிவிலகல் விதிகளுக்கு (ஸ்னெல் விதி) உட்பட்டு ஒளிவிலகல் நிகழ்வு ஏற்படுகிறது.

* தோற்ற ஆழம், உண்மை ஆழத்தைவிட எப்போதும் குறைவாக இருக்கும்.

* மாறுபடும் ஒளிவிலகல் எண்களைக் கொண்ட காற்று அடுக்குகளினால், வளிமண்டலத்தில் ஒளிவிலகல் நடைபெறுகிறது

* படுகோணம், மாறுநிலைக் கோணத்தைவிட அதிகமாக உள்ள நிலையில், அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது,

* முழு அக எதிரொளிப்பு நடைபெறுகிறது. முழு அக எதிரொளிப்பு நடைமுறையில் பல்வேறு இடங்களில் பயன்படுகிறது. கண்ணாடிப் பட்டகத்தின் வழியே ஒளி செல்லும்போது,

* கண்ணாடிப் பட்டகம் ஒளியைப் பக்க இடப்பெயர்ச்சி அடையச் செய்கிறது.

* இரண்டு கோளக ஒளிவிலகு பரப்புகளைக் கொண்டு, மெல்லிய லென்சுகள் உருவாக்கப்படுகின்றன.

* மெல்லிய லென்ஸ்களினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களை, கார்டீசியன் குறியீட்டு மரபுகள் மற்றும் லென்ஸ் சமன்பாட்டைக் கொண்டு வரையலாம்

* லென்ஸ் ஒன்றின் குவியத் தூரத்தின் தலைகீழியே அதன் திறனாகும்.

* லென்ஸ்களை, ஒன்றை ஒன்று தொடாமல் வைக்கும் போதும், ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டுள்ள போதும் வெவ்வேறு நிகர குவியத்தூரங்களைப் பெற்றுள்ளன.

* முப்பட்டகம் தன்மீது விழும் ஒளியில் ஒரு திசை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முப்பட்டகம் ஒன்றின் திசைமாற்றக் கோணம்; முப்பட்டகக்கோணம், ஒளியின் படுகோணம் மற்றும் முப்பட்டகப் பொருளின் ஒளிவிலகல் எண் போன்றவற்றைச் சார்ந்துள்ளது.

* நிறப்பிரிகை ஊடகம் ஒன்றின் வழியாகச் செல்லும் வெள்ளை ஒளியின் வெவ்வேறு வண்ணங்கள், வெவ்வேறு வேகங்களில் செல்வதால் நிறப்பிரிகை ஏற்படுகிறது.

* வெள்ளை ஒளியின் வண்ணங்களைப் பிரிக்கும் நிறப்பிரிகை ஊடகம் ஒன்றின் திறமையே, பிரிதிறன் எனப்படும்.

* தண்ணீர்த் துளிகள் ஒளியை நிறப்பிரிகை அடையச் செய்வதால் வானவில் தோன்றுகிறது.

* வளிமண்டலத்தில் உள்ள துகள்களினால் ஒளிசிதறல் அடைகிறது.

* ஒளியின் அலைநீளத்தைவிடக் குறைவான அளவுடைய துகள்களினால் ஏற்படும் ஒளிச்சிதறலுக்கு இராலே ஒளிச்சிதறல் என்று பெயர். மேலும், இவ்வொளிச்சிதறல் அளவானது, அலை நீளத்தின் நான்கு மடி மதிப்புக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்.

* வளிமண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும், ஒளியின் அலைநீளத்தைவிட அதிக அளவுகொண்ட (size) தூசுத் துகள்களினால் ஏற்படும் ஒளிச்சிதறல், அலை நீளத்தைச் சார்ந்ததல்ல.

* ஒளியைப்பற்றி நான்கு கொள்கைகள் உள்ளன. ஒவ்வொரு கொள்கையும் ஒளியில் சில இயல்புகளை விளக்குகின்றன.

* ஒளி, அலைப்பண்பு மற்றும் துகள் பண்பு இரண்டையும் பெற்றுள்ளது.

* அலை ஒளியியலில், ஒளி அலை முகப்பு வடிவில் பரவுகிறது எனக் கருதப்படுகிறது.

* ஒளி எவ்வாறு அலைமுகப்பாகப் பரவுகிறது என்பதை ஹைகென்ஸ் (Huygens) தத்துவம் விளக்குகிறது.

* ஹைகென்ஸ் தத்துவம், ஒளி எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் விதிகளை நிரூபிக்கிறது.

* குறுக்கீட்டு விளைவில் இரண்டு ஒளி அலைகள் ஒன்று சேர்ந்து வெவ்வேறு புள்ளிகளில் மாறுபடும் ஒளிச்செறிவுகளை ஏற்படுத்துகின்றன.

* ஒரே கட்டத்தில் உள்ள அல்லது மாறாத கட்டவேறுபாட்டைக் கொண்ட ஒற்றைநிற ஒளி அலைகளை ஓரியல் மூலங்கள் தோற்றுவிக்கின்றன.

* ஒளிச்செறிவு பகுப்பு , அலைமுகப்புப்பகுப்பு மற்றும் ஒளிமூலத்தின் மெய் மற்றும் மாய பிம்பங்களினால் ஓரியல் ஒளிமூலங்கள் பெறப்படுகின்றன.

* யங் இரட்டைப்பிளவு ஆய்வில், அலை முகப்புப் பகுப்பு முறையில் ஓரியல் மூலங்கள் பெறப்படுகின்றன.

* பல்வேறு வண்ணங்களின் கூட்டு ஒளியைப் பயன்படுத்தி (வெள்ளை ஒளி) நிகழ்த்தப்படும் குறுக்கீட்டு விளைவில், வண்ண குறுக்கீட்டுப்பட்டைகள் கிடைக்கும்.

* வெள்ளை ஒளியில் ஏற்படும் குறுக்கீட்டு விளைவினால் மெல்லேடுகளில் வண்ணங்கள் தோன்றுகின்றன.

* தடையின் கூர்மையான விளிம்புகளில் வளைந்து செல்லும் ஒளியின் பண்பிற்கு விளிம்புவிளைவு என்று பெயர்.

* விளிம்பு விளைவு இரண்டு வகைப்படும் அவை முறையே ப்ரனெல் விளிம்பு விளைவு மற்றும் ப்ரானோஃபர் விளிம்பு விளைவு ஆகும்.

* ஒற்றைப் பிளவில் விளிம்பு விளைவு ஏற்படுவதற்கு பிளவின் அகலம், ஒளியின் அலைநீளத்துடன் ஒப்பிடத்தக்க அளவில் இருக்க வேண்டும்.

* ஒளி, கதிர் ஒளியியல் விதிகளுக்கு உட்படும் தொலைவிற்குப் ப்ரனெல் தொலைவு என்று பெயர்.

* ஒளியின் அலைநீளத்துடன் ஒப்பிடத்தக்க அளவில், அகலமுடைய பிளவுகளைக் கொண்ட கீற்றணியிலும் விளிம்புவிளைவு ஏற்படும்.

* விளிம்பு விளைவுக் கீற்றணி மற்றும் நிறமாலைமானியைக் கொண்டு ஒற்றை நிற ஒளியின் அலைநீளத்தையும், பலவண்ணக் கூட்டு ஒளியின் அலை நீளங்களையும் கணக்கிடலாம்.

* பிம்பம் ஒன்றின் தரத்தினைத் தீர்மாணிப்பது பிரித்தறிதல் ஆகும். இந்தப் பிரித்தறிதல் விளிம்புவிளைவையும், இராலேயின் (Rayliegh) நிபந்தனையும் சார்ந்துள்ளது.

* விளிம்பு விளைவின் காரணமாக மங்கலாகத் தெரியாமல் தெளிவாகத் தெரியக் கூடிய மிகச்சிறிய தொலைவாகப் பகுத்தறிதல் அளவிடப்படுகிறது

* மின்புல அல்லது காந்தப்புல அதிர்வுகளை ஒரே ஒரு தளத்தில் மட்டும் அனுமதிக்கும் நிகழ்வுக்குத் தளவிளைவு என்று பெயர்.

* தேர்ந்தெடுக்கப்பட்ட உட்கவர்தல், ஒளி எதிரொளிப்பு, இரட்டை ஒளிவிலகல் மற்றும் ஒளிச்சிதறல் போன்ற நிகழ்வுகளின் மூலம் ஒளியின் தளவிளைவைத் தோற்றுவிக்கலாம்.

* இரண்டு போலராய்டுகள் குறிப்பிட்ட கோணத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது அமைப்பிலிருந்து வெளியேறும் ஒளியின் செறிவை அறிய மாலசின் விதி பயன்படுகிறது.

* புரூஸ்டர் விதி தளவிளைவுக் கோணத்தையும், ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணையும் தொடர்புபடுத்துகிறது.

* ஒளியியல் வினைபுரியும் படிகங்கள், ஓரச்சுப்படிகம் மற்றும் ஈரச்சுப்படிகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* ஒளியியல் வினைபுரியும் படிகத்தில் நுழையும் ஒளி இரட்டை ஒளிவிலகல் அடைகிறது.

* இரட்டை ஒளிவிலகலில் தோன்றும் சாதாரண கதிர்கள் ஒளி விலகல் விதிகளுக்கு உட்படுகின்றன. ஆனால், அசாதாரண கதிர்கள் ஒளிவிலகல் விதிகளுக்கு உட்படாது.

* நிகோல் பட்டகம், கனடா பால்சம் என்ற ஒளிபுகும் சிமெண்ட் உதவியால், சாதாரணக் கதிரையும் அசாதாரணக் கதிரையும் தனித்தனியே பிரிக்கிறது.

* படும் ஒளியின் திசைக்கு செங்குத்தாக, மூலக்கூறுகளினால் சிதறல் அடையும் ஒளி முழு தளவிளைவு அடையும்.

* குவிலென்சின் குவியத்தூரத்திற்கு உள்ளே பொருள் உள்ளபோது, குவிலென்ஸ் எளிய நுண்ணோக்கி போன்று செயல்படும்.

* குவியப்படுத்தும் நிகழ்வு இரண்டு நிலைகளில் ஏற்படும் அவை முறையே

* அண்மைப்புள்ளி குவியப்படுத்துதல் மற்றும் இயல்புநிலைக் குவியப்படுத்துதல் ஆகும்.

* அண்மைப்புள்ளி குவியப்படுத்தும் நிகழ்வில், பொருளின் பிம்பம் 25 cm தொலைவில் ஏற்படும். இத்தொலைவு சாதாரண விழியின் தெளிவுக் காட்சியின் மீச்சிறு தொலைவாகும். இயல்புநிலை குவியப்படுத்தும் நிகழ்வில் பிம்பம் ஈரில்லாத் தொலைவில் ஏற்படும்.

* அண்மைப்புள்ளி குவியப்படுத்தும் நிகழ்வில் ஏற்படும் உருப்பெருக்கத்தைக் காண, பக்கவாட்டு உருப்பெருக்கச் சமன்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். இதே போன்று இயல்புநிலை குவியப்படுத்தும் நிகழ்வில் ஏற்படும் உருப்பெருக்கத்தைக் காண, கோண உருப்பெருக்கச் சமன்பாட்டை பயன்படுத்த வேண்டும்.

* எண்ணெய்யில் மூழ்கியுள்ள கண்ணருகு லென்ஸைப் பயன்படுத்தி, நுண்ணோக்கியின் பகுத்தறியும் பண்பை மேம்படுத்தலாம். மேம்படுத்தப்பட்ட உருப்பெருக்கத்தைப் பெற, கூட்டு நுண்ணோக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

* அதிகக் குவியத்தூரம் கொண்ட மற்றும் குறைந்த குவியத்தூரம் கொண்ட இரண்டு கண்ணருகு லென்சுகள் வானியல் தொலைநோக்கியில் பயன்படுகின்றன.

* நிலப்பரப்பு தொலைநோக்கியில் (Terrestrial telescope) நேராக்கப்பட்ட பிம்பத்தைப் பெற கூடுதலாக ஒரு லென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. எதிரொளிப்பு தொலை நோக்கி, நிறைகள் மற்றும் குறைகள் இரண்டையும் ஒருங்கே பெற்றுள்ளது.

* பின்வரும் மூன்று குறைபாடுகள் விழிகளில் ஏற்படுகின்றன. அவை முறையே (i) கிட்டப்பார்வை (ii) தூரப்பார்வை மற்றும் (iii) ஒருதளப்பார்வை ஆகும்


Tags : Ray Optics | Physics ஒளியியல் | இயற்பியல்.
12th Physics : UNIT 6 : Ray Optics : Summary, Concept Map Ray Optics | Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல் : பாடச்சுருக்கம் - ஒளியியல் | இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 6 : கதிர் ஒளியியல்