வடிவியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 3 Unit 4 : Geometry
பாடச்சுருக்கம்
• உருமாற்றம் என்பது முன்உருவை நிழல்உருவாக மாற்றும் ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுப்பாகும்.
• ஒர் உருவத்தின் அனைத்துப் புள்ளிகளையும் ஒரே திசையில் ஒரே தொலைவிற்கு நகர்ந்தும் உருமாற்றம் இடப்பெயர்வு எனப்படும்.
• கிடைமட்டமாக வலப்புற நகர்வு'🡪' என்ற குறியீடு மூலமும், இடப்பக்க நகர்வு '🡨' என்ற குறியீடு மூலமும் குறிக்கப்படும்.
• செங்குத்தாக, மேற்புற நகர்வு '↑' என்ற குறியீடு மூலமும், கீழ்ப்புற நகர்வு '↓' என்ற குறியீடு மூலமும் குறிக்கப்படும்.
• ஒரு நேர்க்கோட்டைப் பொருத்து ஓர் உருவத்தைத் திருப்பும் அல்லது பிரதிபலிக்கும் உருமாற்றம் எதிரொளிப்பு எனப்படும்.
• ஒரு புள்ளியைப் பொருத்து, ஒரு முன் உருவிலுள்ள ஒவ்வொரு புள்ளியையும் ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு குறிப்பிட்ட கோண அளவிற்குச் சுழற்றும் உருமாற்றம் சுழற்சி எனப்படும். நிலையான புள்ளியானது, சுழற்சி மையம் எனவும், கோண அளவானது சுழற்சிக் கோணம் எனவும் கொள்ளப்படும்.
• சுழற்சியைத் திருப்பம் என்றும் கூறலாம்.
• ஒரு சுழற்சியின் இயல்பான திசைக் கடிகாரச் சுற்றிற்கு எதிரான (இடஞ்சுழி) திசையாகும்.
• 360° அளவுள்ள சுழற்சி முழுத்திருப்பம் எனப்படும். 180° அளவுள்ள சுழற்சியானது அரைத் திருப்பம் எனப்படும். 90° அளவுள்ள சுழற்சியானது கால் திருப்பம் எனப்படும்.
• ஒரு தளத்தில் ஒரு நிலையான புள்ளியிலிருந்து நிலையான தொலைவிலுள்ள அனைத்துப் புள்ளிகளின் தொகுப்பும் வட்டம் எனப்படும். நிலையான புள்ளி வட்டத்தின் மையம் எனப்படும். நிலையான தொலைவு வட்டத்தின் ஆரம் எனப்படும்.
• வட்டத்தின் உள்ளே அமைந்த புள்ளிகள் வட்டத்தின் உட்புறம் எனப்படும்.
• வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளிகள் வட்டத்தின் வெளிப்புறம் எனப்படும்.
• வட்டத்தின் மீதமைந்த ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டுத்துண்டு அவ்வட்டத்தின் நாண் எனப்படும்.
• வட்டத்தின் மையப்புள்ளி வழியாகச் செல்லும் நாண் அவ்வட்டத்தின் விட்டம் எனப்படும்.
• ஒரு பொதுவான மையத்தையும் மற்றும் வேறுபட்ட ஆரங்களையும் கொண்டு ஒரு தளத்தில் வரையப்பட்ட வட்டங்கள் பொதுமைய வட்டங்கள் எனப்படும்.
• இரண்டு பொது மைய வட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதி வட்டவளையம் எனப்படும்.
• வட்டவளையத்தின் அகலம் = r2 - r1
இணையச் செயல்பாடு
வடிவியல்
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி 1
இணையத்துள் உரலியை திறந்து கீழேக் கொடுக்கப்பட்டுள்ள உரலியை தட்டச்சு செய்யவும் அல்லது விரைவுக் குறியீட்டினை ஸ்கேன் செய்யவும். "சமச்சீர்த் தன்மை" எனப் பெயரிடப்பட்ட ஜீயோ ஜீப்ரா பணித்தாள் திறக்கும். கோட்டின் இடப்புறத்தில் உள்ள புள்ளிகளை நகர்த்தவும். சமச்சீர்த் தன்மையைக் காண "எதிரொளி" என்ற குறியீட்டுப் பெட்டியை சொடுக்கவும்.
படி 2
"சுழல் சமச்சீர்த் தன்மை" என்ற இன்னொரு பணித்தாளைக் காணக் கீழ்நோக்கிச் செல்லவும். வடிவத்தை சுழற்ற நழுவியை நகர்த்தவும். சுழற்ச்சியின் வரிசையைக் கண்டறிந்து கொடுக்கப்பட்டுள்ளப் பெட்டியில் எழுதவும். உள்நுழையை அழுத்தி உங்களை விடையைச் சரிபார்த்துக் கொள்ளலாம். "புதுவடிவம்" என்பதை சொடுக்கி செயல்பாட்டை தொடரவும்.
செயல்பாட்டின் உரலி
சமச்சீர்: https://www.geogebra.org/m/f4w7csup#material/udcrmzyr
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.