பருவம் 3 அலகு 1 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உலகெலாம் தமிழர்கள் | 4th Social Science : Term 3 Unit 1 : Tamils Around the World
அலகு 1
உலகெலாம் தமிழர்கள்
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்
❖ தமிழர்கள் வாழும் நாடுகளைப் பட்டியலிடுதல்
❖ பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் பண்பாட்டை அறிதல்
❖ நாணயங்களில் அல்லது அலுவலக மொழிகளுள் ஒன்றாகத் தமிழைக் கொண்டிருக்கும்
நாடுகளின் பெயர்களைக் கூறுதல்
அறிமுகம்
பண்டைய தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டிருந்தது.
எகிப்து, சீனா, மியான்மர், ஜப்பான், ரோம் மற்றும்
பல நாடுகளுடன் நாம் வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்தோம். கி.மு.(பொ.ஆ.மு.)
3 ஆம் நூற்றாண்டு முதலே மேற்கு நாடுகளுடன் நாம் வணிகத் தொடர்புகளை கொண்டுள்ளோம். சீனா
மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்குக் கடல் வழியாகப் பயணம் மேற்கொண்ட பல கப்பல்கள், நமது
துறைமுகங்களைப் பயன்படுத்தின. கிழக்கிலுள்ள நாடுகளுடன் வணிக மற்றும் பண்பாட்டு உறவுகளை
விரிவுபடுத்த ராஜேந்திர சோழரின் கடற்படையெடுப்பு
உதவியது.
இலங்கை
இலங்கையில் தமிழர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு தமிழர்கள்
இரண்டு குழுக்களாக வாழ்கின்றனர். முதல் குழுவில் இலங்கையில் வாழும் தமிழர்கள் உள்ளனர்.
இவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
மற்றொரு குழுவில், இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்த தமிழர்கள் உள்ளனர்.
இந்தியத் தமிழர்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள்,
19ஆம் நூற்றாண்டில் தேயிலைத் தோட்ட வேலைக்காகக் குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இலங்கையின்
அலுவலக மொழிகளுள் ஒன்று தமிழாகும்.
அங்குள்ள கோனேஸ்வரம் கோயில்,
ஆயிரம் தூண்களைக் கொண்டுள்ளது. அது ஆசியாவிலேயே புகழ்பெற்றதாகவும் மக்களால் அதிகம்
பார்வையிடப்பட்ட கோயில்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இந்தியா,
இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் அலுவலக மொழிகளுள் ஒன்றாகத் தமிழும்
உள்ளது.
மலேசியா
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மலேசியா ஒரு தீபகற்பம் ஆகும். தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும்
இடையிலான உறவுகள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பண்டைய காலங்களில் தமிழர்களின்
கப்பல்கள் தற்போதைய மலேசிய மாநிலமான கெடாவை (தமிழில் கடாரம்) அடைந்தன. பல்லவர்கள் மற்றும்
சோழர்களின் காலத்தில், மலேசியாவின் பண்பாடு மற்றும் அரசியலில் தமிழர்கள் தமிழர்கள்
மிகப்பெரிய மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். நாகப்பட்டினத்திலிருந்து கெடாவுக்கு
வழக்கமான போக்குவரத்து இருந்ததாக இட்-சிங் என்ற
சீனப் பயணியின் ஆவணம் தெரிவிக்கிறது.
மலேய தீபகற்பத்தின் லிகோர் என்னும் இடத்தில் கி.பி.(பொ.ஆ.)
779ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு மலேய
தீபகற்பத்துடன் தமிழ்நாடு கொண்டிருந்த வணிக உறவைக் குறிப்பிடுகிறது. இன்று மலேசியாவில்,
மலாயர்கள் மற்றும் சீனர்களுக்கு அடுத்தபடியாகத் தமிழர்கள், மக்கள்தொகையில் மக்கள்தொகையில்
மூன்றாவது இனத்தவராக உள்ளனர். மலேசியாவில் கொண்டாடப்படும் பெரிய இந்து பண்டிகைகளில்
ஒன்று தைப்பூசம் ஆகும். மலேசியாவின் பயிற்றுமொழிகளுள் தமிழும் ஒன்றாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
•
தமிழ்மொழியின்
வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் மூன்று முறை
நடத்தப்பட்டன,
பத்துமலை என்பது, மலேசியாவின் கோம்பாக்
மாவட்டத்தில் உள்ள ஒரு சுண்ணாம்புக் தொடர்ச்சியான குன்றாகும். அது குகைகள் மற்றும்
குகைகள் குகைக் கோயில்களைக் கொண்டு உள்ளது. பத்துமலையின் அடிவாரத்தில் உள்ள முருகன்
சிலை, உலகின் இரண்டாவது மிக உயரமான இந்து தெய்வ
சிலை ஆகும்.
சிங்கப்பூர்
புகழ்ப்பெற்ற ஆங்கிலேய அரசியல் அறிஞரும் துணைநிலை ஆளுநருமான
சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் என்பவரால் நவீன
சிங்கப்பூர் கி.பி.(பொ.ஆ.) 1819இல் நிறுவப்பட்டது. சிங்கப்பூரின் உண்மையான வரலாறு இங்கிருந்துதான்
தொடங்குகிறது. ஆனால் இந்த தீவுடன் அதற்கு முன்பே தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்தனர்.
ஆங்கிலேயர்கள் சிங்கப்பூரை ஆட்சி செய்தபோது, தமிழர்கள் தொழிலாளர்களாகவும் வணிகர்களாகவும்
அங்கு சென்றனர். சிங்கப்பூரின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு தமிழர்களின் கடின
உழைப்பும் ஒரு காரணம் ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா?
சிங்கப்பூரில்
1828ஆம் ஆண்டு மாரியம்மன் கோயில் ஒன்று கட்டப்பட்டது. அது தமிழர்களால் திராவிடக் கட்டட
முறையில் கட்டப்பட்டது. மேலும் அக்கோயில் சிங்கப்பூரின் தேசிய நினைவுச்சின்னமாக அரசிதழில்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
19ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூரின் தொடக்கக் காலங்களில், சிங்கப்பூர்
பிரிட்டிஷ் அரசு மற்றும் கிறித்துவ அமைப்புப் பள்ளிகள், தமிழர்களை மட்டுமே ஆசிரியர்களாகத்
தேர்ந்தெடுத்தன. தற்போது அங்கு வாழும் தமிழ்ச் சமூகத்தில் வழக்குரைஞர்கள், விரிவுரையாளர்கள்,
மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் உள்ளனர்.
ஜொகூர் பாலம், செம்பவாங் கப்பல் கட்டும் தளம்,
கல்லாங் விமான நிலையம் மற்றும் புனித ஆண்ட்ரூ
கதீட்ரல் ஆகியன தமிழர்களின் கடின உழைப்பின் அடையாளங்கள் ஆகும்.
பிஜி
பிஜி என்பது, தென் பசிபிக் பகுதியில் உள்ள எரிமலை தீவுக் கூட்டமாகும்.
1903ஆம் ஆண்டு முதல் 1916ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், தமிழர்கள் தொழிலாளர்களாக பிஜி
தீவுகளுக்கு ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்டனர்.
சம உரிமைகளுக்கான தேவைக்கு பிஜியில் வாழும் தமிழர்கள் எப்போதுமே
குரல் கொடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக 1938 ஆம் ஆண்டில் இந்திய சன்மார்க்க மகளிர் சங்கம் என்ற ஒரு பெண்கள் பிரிவு
உருவாக்கப்பட்டது. அதன் நோக்கம் ஏழை மற்றும் பசியுடன் உள்ள தமிழர்களுக்கு உணவளிக்க
ஒவ்வொரு நாளும் சமைப்பதற்கு முன்பு ஒரு கையளவு அரிசியை ஒதுக்குவதுதான்.
பிஜி நாட்டின் துணை ஜனாதிபதி ரத்து
ஜோனி என்பவர் திருக்குறளி என்ற புத்தகத்தை
அறிமுகப்படுத்தினார். அவர் பிஜியில் அமைதி மற்றும் பன்முக பண்பாட்டை வளர்க்க இப்புத்தகம்
உதவும் என்று கூறினார். இது நமது பண்டைய தமிழ் நூலான 'திருக்குறளைத்' தழுவிய பிஜி மொழியின்
பதிப்பாகும். இந்து கோயிலான சிவசுப்பிரமணியர் கோயில், பிஜி நாட்டின் நண்டி என்னும்
இடத்தில் அமைந்துள்ளது.
மியான்மர் (பர்மா)
மியான்மர் நமது அண்டை நாடு ஆகும். அங்குள்ள பெரும்பாலான மக்கள்
புத்தசமயத்தைப் பின்பற்றுகின்றனர். தமிழகத்திற்கும்
மியான்மருக்கும் இடையிலான பண்பாடு மற்றும் வணிக உறவுகள் பெரும்பாலும் கடல் வழியாகவே
இருந்தன.
அனவர்தா மின்சா என்ற
மன்னர் மியான்மரில் ஒரு பேரரசை நிறுவினார். அவர் மியான்மரின் தேசத் தந்தையாகவும், மிகவும்
புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரின் மகன் மன்னர் கியான்சித்தா, தமிழகத்தின் சோழப் பேரரசுடன் நல்லுறவைக்
கொண்டிருந்தார்.
உங்களுக்குத் தெரியுமா?
மியான்மரில்
உள்ள பாகாங் என்ற நகரத்தில், கி.பி.(பொ.ஆ.) 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில்
தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது. அக்கல்வெட்டில், சேர நாட்டைச் சேர்ந்த குலசேகர நம்பி என்ற
வணிகர் மியான்மரில் உள்ள திருமால் கோயிலுக்கு நன்கொடை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1850ஆம் ஆண்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குடிபெயர்ந்து
விவசாயத் துறைகளில் பணியாற்றினர். அந்நாட்டில் இந்தியர்களுக்கும் பர்மியர்களுக்கும்
இடையே நடைபெற்ற சண்டைகள் கலவரங்களுக்கு வழிவகுத்தன. இதனால் மியான்மரைவிட்டு ஏராளமான
தமிழர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மியான்மரில், இந்து கடவுள்களான மாரியம்மன், முருகன் மற்றும்
திருமால் போன்றவர்களின் கோயில்கள் இருக்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
ஆனந்தா
கோயில் மியான்மரிலுள்ள புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலின் கோபுரம் திராவிட கட்டட
முறையில் கட்டப்பட்டுள்ளது. வடஇந்தியக் கட்டடக்கலை முறையில் கோபுரத்தின் மேற்பகுதி
கட்டப்பட்டுள்ளது.
மொரீஷியஸ்
தொடக்கக் காலங்களில், மொரீஷியஸின் வளர்ச்சிக்குப் போராடிய முதல்
நாடு பிரான்ஸ் ஆகும். இந்தியர்கள் திறமையான தொழிலாளர்களாக இருந்ததால், அவர்களைப் பிரெஞ்சுக்காரர்கள்
கி.பி.(பொ.ஆ.) 1729ஆம் ஆண்டில் இந்தத் தீவுக்கு அழைத்து வந்தனர்.
புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தமிழர்கள்
பலர், கி.பி.(பொ.ஆ.) 1731 ஆம் ஆண்டு முதல் அழைத்து வரப்பட்டனர். பொதுவாக, இங்கு வாழ்ந்த
அடிமைகள் சாதாரண தொழிலாளர்களாகவே இருந்தனர். ஆனால், தமிழர்கள் திறமையான தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களாக அங்குச் சென்றனர். தமிழர்கள், இத்தீவை
வாழ்வதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும், பல கட்டடங்களைக் கட்டுவதற்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கு
உதவினர்.
உங்களுக்குத் தெரியுமா?
1810ஆம்
ஆண்டில் மொரீஷியஸ் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் அத்தீவுக்கு அதிகமான
இந்தியர்களை அழைத்து வந்தனர். இப்போது, தமிழர்கள் மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காடு
உள்ளனர்.
அஞ்சல் அருங்காட்சியகம் 19ஆம்
நூற்றாண்டின் அழகிய கற்கட்டடம் ஆகும். அது வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்டடம் போர்ட் லூயிஸில் தமிழர்களால் கட்டப்பட்டது.
ரீயூனியன்
மொரீஷியஸ் அருகிலுள்ள ரீயூனியன் என்பது இந்தியப் பெருங்கடலில்
அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இது பிரெஞ்சு வெளியுறவுத்
துறையின் ஓர் அங்கமாகும்.
பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலிருந்து,
தமிழர்களை இத்தீவுக்கு அழைத்து வந்தனர். தொடக்கக் காலங்களில், தமிழர்கள் தேயிலை மற்றும்
கரும்புத் தோட்டங்களில் வேலை செய்தனர். இத்தீவின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கிற்குமேல் தமிழர்கள் இருந்தனர்.
அங்கு, சாதி மற்றும் சமயம் சார்ந்த வேறுபாடுகள் தமிழர்களிடையே
இல்லை. இன்றும், பல தமிழர்கள் வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். படித்த தமிழர்கள், அரசு
மற்றும் தனியார் அலுவலகங்களில் உயர்பதவிகள் வகிக்கின்றனர்.
இத்தீவில் தமிழையும் அதன் பண்பாட்டையும் கற்க, தமிழர்கள் மிகவும்
ஆர்வமாக உள்ளனர்.
உங்களுக்குத்
தெரியுமா?
கற்பனைக்கெட்டாத
அங்கோர் வாட் மிகவும் புகழ்பெற்ற மலைக்கோயில்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மன்னன் இரண்டாம்
சூரியவர்மன் 12ஆம் நூற்றாண்டில், அதன் 30 ஆண்டுக் கால கட்டுமானத்தைத் தொடங்கினார்.
உங்களுக்குத் தெரியுமா?
இந்திய
நாணயங்களில் மட்டுமல்லாமல், மற்ற மூன்று நாடுகளின் நாணயங்களிலும் தமிழ் இடம் பெற்றுள்ளது.
அவை:
1.
இலங்கை
2.
மொரீஷியஸ்
3.
சிங்கப்பூர்
கனடாவில்
தமிழ் பாரம்பரிய மாதம் அக்டோபர் 5, 2016 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தைத் தமிழ் பாரம்பரிய
மாதமாக கனடா அரசு அறிவித்தது. இது தமிழ்-கனடியர்கள், கனடிய சங்கத்திற்குச் செய்த பங்களிப்புக்கான
அங்கீகாரமாக அமைந்தது.
முடிவுரை
பண்டைய காலங்களில் தமிழர்கள் வணிகர்களாகவும், போர்வீரர்களாகவும்
பல நாடுகளுக்கு கடல்வழியாகப் பயணம் மேற்கொண்டனர். தமிழர்களின் கடின உழைப்பே அவர்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. தாம் ஒரு தமிழர் என்பதில் வெளிநாடு வாழ் தமிழர்கள்
எப்போதுமே பெருமிதம் கொள்கின்றனர்.
சொற்களஞ்சியம்
1. கடற்படையெடுப்பு - போரின் காரணமாக, மேற்கொள்ளும் கடல் வழிப்பயணம்.
2. தீபகற்பம் - மூன்று பக்கங்களிலும் நீரால் சூழப்பட்ட நிலப்பரப்பு.
3. அடிமை - தன் உரிமையாளருக்குக் கீழ்ப்படிபவர்.
4. தீவு - அனைத்துப் பக்கங்களிலும் தண்ணீரினால் சூழப்பட்ட பகுதி.
5. பன்முக பண்பாடு - சமூகத்தில் உள்ள பல்வேறு பண்பாட்டுக் குழுக்கள்.
6. கலவரம் - அமைதியைக் குலைக்கும் மக்கள் கூட்டம்.
7.போராடு - கடுமையாக முயற்சி செய்.
8. வணிகர் - பொருளை வாங்கி விற்பனை செய்பவர்.
நினைவு கூர்க
❖ இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,
பிஜி, மொரீஷியஸ் மற்றும் ரீயூனியன் போன்ற பல நாடுகளுக்குத் தமிழர்கள் பயணம் மேற்கொண்டனர்.
❖ இலங்கை, மொரீஷியஸ் மற்றும்
சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நாணயங்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.
❖ இலங்கையில் தமிழர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்கள் என இரு பிரிவாகத் தமிழர்கள் உள்ளனர்.
❖ தமிழ் மொழியையும் அதன் பண்பாட்டையும் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள தமிழர்கள் பலரைக் கொண்டுள்ள ஒரு தீவு, ரீயூனியன் ஆகும்