அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இடர்களின் வகைகள் | 8th Social Science : Geography : Chapter 5 : Hazards

   Posted On :  12.06.2023 06:14 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இடர்கள்

இடர்களின் வகைகள்

சில இடர்கள் அடிக்கடி நிகழ்ந்து மக்களுக்கு அச்சுறுத்தலை அளிக்கின்றன. இடர்கள் பல வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை: I நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையிலான இடர்கள் II உருவாகும் அடிப்படையிலான இடர்கள்

இடர்களின் வகைகள்

சில இடர்கள் அடிக்கடி நிகழ்ந்து மக்களுக்கு அச்சுறுத்தலை அளிக்கின்றன. இடர்கள் பல வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை:

I நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையிலான இடர்கள்

II உருவாகும் அடிப்படையிலான இடர்கள்


1. நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையிலான இடர்கள்

இடர்களை மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

1. இயற்கையினால் ஏற்படும் இடர்கள்

2. மனித செயல்களால் உருவாக்கப்படும் இடர்கள்

3. சமூக-இயற்கை காரணிகளால் ஏற்படும் இடர்கள்

 

1. இயற்கையால் ஏற்படும் இடர்கள்

சில இடர்கள் இயற்கைக் காரணிகளால் உருவாகின்றன. இவ்வகையான இடர்களில் மனிதனின் பங்கு இருப்பதில்லை . நில அதிர்வு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி, புயல்கள், வறட்சி, நிலச்சரிவு, சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு ஆகியவை இயற்கை இடர்பாடுகளுக்கு முக்கிய உதாரணங்களாகும்.


2. மனிதனால் உருவாக்கப்படும் இடர்கள்

இவ்வகையான இடர்கள் மனிதர்கள் விரும்பத்தகாத நடவடிக்கைகளின் மூலம் ஏற்படுகின்றன. தொழிற்சாலைகளின் இரசாயனக் கழிவு அல்லது எண்ணெய் கசிவு அல்லது திட்டமிடப்பட்ட செயல்பாடுகளின் விளைவாக ஏற்படும் விபத்துகள் மூலம் இவ்விடர்கள் ஏற்படுகின்றன. இத்தகைய இடர்கள் பாதுகாப்பு, உடல் நலம், மக்களின் நலன் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குண்டுவெடிப்புகள், அபாயகரமான கழிவுகள், காற்று, நீர், நிலம் மாசடைதல், அணைக்கட்டு உடைதல், போர், உள்நாட்டுக் கலவரங்கள், தீவிரவாத செயல்கள் போன்றவை மனிதனால் உருவாக்கப்படும் இடர்களுக்கு சில உதாரணங்களாகும்.


3. சமூக - இயற்கை இடர்கள் (பகுதி இயற்கை இடர்கள்)

இவ்வகை இடர்கள் இயற்கைச் சக்திகள் மற்றும் மனிதனின் தவறான செயல்பாடுகள் இணைவதன் மூலம் ஏற்படுகின்றன. சில உதாரணங்கள்:

•ஆறுகளின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் உள்ள மரங்களைக் கண்மூடித்தனமாக அழிப்பதால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி ஏற்படுகின்றன.

•நிலச்சரிவுகள் இயற்கை காரணிகளால் ஏற்பட்டாலும் மலைப்பிரதேசங்களில் சாலைகள் அமைப்பது, வீடுகள் கட்டுவது, சுரங்கங்கள் தோண்டுவது, கனிமங்கள் மற்றும் கல்வெட்டியெடுத்தல் போன்றவை நிலச்சரிவின் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன.

•சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுவதால் சூறாவளி அலைகள் கடற்கரைப் பகுதிகளில் இடரை உருவாக்குகின்றன.

•பெரும்பாலான பெரு நகரங்களில் பனிப்புகை ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகைகள், மரங்கள் மற்றும் நிலக்கரிகள் எரிப்பதனால் உண்டாகும் புகையானது மூடு பனியை உருவாக்குகிறது. இவை அடர் மூடுபனியுடன் சேர்வதால் பனிப்புகை உண்டாகி உடல் நலத்தை பாதிக்கின்றன.

 

II. உருவாகும் அடிப்படையில் ஏற்படும் இடர்கள்

இவ்வகையான இடர்களை எட்டு வகையாகப் பிரிக்கலாம். அவை :

1. வளி மண்டலத்தால் ஏற்படும் இடர்கள்

வெப்ப மண்டல சூறாவளி இடியுடன் கூடிய புயல், மின்னல், சுழல் காற்று, பனிச்சரிவு, வெப்ப அலைகள், மூடுபனி மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.

2. நிலவியல் சார்ந்த இடர்கள்

நில அதிர்வு, சுனாமி, நிலச்சரிவு, நிலம் அமிழ்தல் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.

3. நீரியல் தொடர்பான இடர்கள்

வெள்ளப்பெருக்கு, வறட்சி, கடற்கரை அரிப்பு, சூறாவளி அலைகள் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.

4. எரிமலை சார்ந்த இடர்கள்

எரிமலை வெடிப்பு மற்றும் லாவா வழிதல் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.

5. சுற்றுச்சூழல் சார்ந்த இடர்கள்

மண், காற்று, நீர் மாசடைதல், பாலைவனமாதல், புவி வெப்பமடைதல் மற்றும் காடழிப்பு ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.

6. உயிரியல் சார்ந்த இடர்கள்

சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை, பால்வினைத் தொற்று நோய்கள், எய்ட்ஸ், விஷ தேனீக்கள் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.

7. தொழில்நுட்பம் சார்ந்த இடர்கள்

அபாயகரமான கழிவுப் பொருட்களால் ஏற்படும் இடர்கள், தீவிபத்து மற்றும் கட்டமைப்பு குறைபாடுகளால் ஏற்படும் இடர்கள் (பாலங்கள், சுரங்கங்கள், அணைகள், அணுக்கதிர்கள் மற்றும் கதிரியக்க விபத்துகள்)

8. மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்கள்

தீவிரவாதம், குண்டு வெடிப்பு, போக்குவரத்து விபத்துக்கள், போர் மற்றும் உள்நாட்டுக் கலவரம் ஆகியவற்றால் ஏற்படும் இடர்கள்.

Tags : Chapter 5 | Geography | 8th Social Science அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 5 : Hazards : Types of Hazards Chapter 5 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இடர்கள் : இடர்களின் வகைகள் - அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இடர்கள்