Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மக்களாட்சி என்றால் என்ன?
   Posted On :  10.09.2023 10:10 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

மக்களாட்சி என்றால் என்ன?

ஒரு நாட்டில் மக்களின் உயர்ந்த அதிகாரங்களை பெற்று அமைக்கும் ஆட்சி முறையே "மக்களாட்சி" எனப்படும். இதன் பொருள் நாட்டு மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் உள்ளது என்பதாகும்.

மக்களாட்சி என்றால் என்ன?

மக்களாட்சி என்பது மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதியளிக்கும் ஆட்சி முறையே 'மக்களாட்சி ஆகும்.

இம்முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும்.

மக்கள் சுதந்திரமாக தாங்கள் விரும்பிய கருத்துக்களைத் தெரிவிக்கவும், ஓர் அமைப்பை ஏற்படுத்தவும், போராட்டங்களை நடத்தவும் உரிமை பெற்றவர்கள் ஆவர்.

உங்களுக்குத் தெரியுமா?

 மக்களாட்சி (Democracy) எனும் சொல் 'DEMOS' மற்றும் ‘CRATIA’ எனும் இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். டெமாஸ் என்றால் மக்கள் கிரஸி என்றால் அதிகாரம்' (power of the people) என்று பொருள்படும்.

 

1. மக்களாட்சி என்பதன் பொருள்

ஒரு நாட்டில் மக்களின் உயர்ந்த அதிகாரங்களை பெற்று அமைக்கும் ஆட்சி முறையே  "மக்களாட்சி" எனப்படும். இதன் பொருள் நாட்டு மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் உள்ளது என்பதாகும். மேலும் மக்கள் தங்களது பிரதிநிதிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

 

2. வரையறை

"ஒரு உண்மையான மக்களட்சியை, 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது. இது கீழ்நிலையிலுள்ள ஒவ்வொரு கிராம மக்களாலும் செயல்படுத்தப்படுவதாகும்என தேசப்பிதா மகாத்மா காந்திகுறிப்பிடுகிறார்.


 

3. மக்களாட்சியின் சிறப்புக் கூறுகள்

 1. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இறுதி முடிவை மேற்கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

2. சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள்.

3. 18 வயது நிறைவு பெற்ற அனைவருக்கும் சம மதிப்புடைய வாக்குரிமை.

4. அடிப்படை உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்


"மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி" 'மக்களாட்சி என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேனள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறை கூறினார்.


 

4. மக்களாட்சியின் பரிணாம வளர்ச்சி

ஏதென்ஸ் உட்பட பண்டைய கிரேக்க நாட்டின் ஒரு சில நகர-அரசுகளில், 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது. வேத காலத்திற்கு முன்பாகவே இந்தியாவில் மக்களாட்சி முறை அமைப்புகள் இருந்தன என்பது பற்றி அறிவது மிக முக்கியமாக இருக்கிறது. உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகாக சுயாட்சி பெற்ற கிராம குழுக்கள், பண்டைக்காலத்தில் இருந்தது எனும் செய்திகளை சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் என்ற நூல் கூறுகிறது. பண்டைய தமிழகத்தில் பிற்கால சோழர்களின் காலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த குடவோலை முறை இருந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், பொறுப்புடைமை, வெளிப்படைத் தன்மை, நம்பிக்கை ஆகிய மதிப்பீடுகள் மக்களட்சியின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.


 

5. மக்களாட்சி அரசாங்க அமைப்புகள்


 

6. மக்களாட்சியின் வகைகள்

மக்களாட்சி இரு வகைப்படும். அவை,

1. நேரடி மக்களாட்சி

2. மறைமுக மக்களாட்சி (பிரதிநிதித்துவ மக்களாட்சி).

மக்களாட்சி வகைகள் என்பது மக்கள் சமமாகப் பங்கேற்க அனுமதியளிக்கும் சமூக அமைப்பு () அரசாங்க வகைகளை குறிக்கிறது.

நேரடி மக்களாட்சி

பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக்கூடிய அரசு முறையை நேரடி மக்களட்சி என்கிறோம். .கா. பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து

மறைமுக மக்களாட்சி (பிரதிநிதித்துவ மக்களாட்சி)

பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் முறையே மறைமுக மக்களாட்சி என்று அழைக்கப்படுகிறது.

 (.கா) இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து

 

7. மக்களாட்சியின் நிறை குறைகள்

நிறைகள்

1. பொறுப்பும், பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கம்

2. சமத்துவமும் சகோதரத்துவமும்

3. மக்களிடையே பொறுப்புணர்ச்சி

4. தல சுய ஆட்சி

5. அனைவருக்கும் வளர்ச்சியும் வளமும்

6. மக்கள் இறையாண்மை

7. சகோதர மனப்பான்மை மற்றும் கூட்டுறவு

குறைகள்

 1. மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி

2 வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை மற்றும் குறைந்த வாக்குப்பதிவு

3. சிலசமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுக்கிறது

4. முடிவெடுக்கும் முறையில் காலதாமதம்.

 

8. இந்தியாவில் மக்களாட்சி

 இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்டுள்ள நாடாகும். இந்தியாவின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கியது. இது நாட்டிற்கு தேவையான சட்டங்களை உருவாக்குகிறது. கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்கு பெறுவதும், ஒப்புதல் அளிப்பதும் இந்தியாவிலுள்ள நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கியக் கூறுகளாக விளங்குகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும். இந்தியாவில் மக்களாட்சி பின்வரும் ஐந்து முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது. அவை இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி மற்றும் குடியரசு.

பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்விதப் பாரபட்சமும் இன்றி சமமான வாக்குரிமையைப் பெற்றுள்ளனர்.


உங்களுக்குத் தெரியுமா?

1912-13 ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டிடத்தை எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் எனும் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்கள் வடிவமைத்தனர். இக்கட்டிடத்தை 1921 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1927-ல் முடித்தனர்.

 

9. இந்தியாவில் தேர்தல்கள்

இந்திய அரசு பகுதி கூட்டாட்சி அமைப்பு முறையைப் பெற்றுள்ள நாடு. இங்கே நடுவண் அரசு (நாடாளுமன்றம்), மாநில அரசு (சட்டமன்றம்), உள்ளாட்சி அமைப்புகள் (ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி) ஆகிய நிலைகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பொதுத் தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தேசிய அளவில், இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற பிரதம அமைச்சரை, இந்திய அரசின் தலைவரான குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல்கள் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் இரு ஆங்கிலோ- இந்தியர்களைக் குடியரசுத் தலைவர் மக்களவைக்கு நியமனம் செய்கிறார்.

உங்களுக்குத் தெரியுமா?

நாடாளுமன்றத்தின் இரு அவைகள்

ராஜ்ய சபா/மேல் அவை/ மாநிலங்களவை

லோக் சபா/கீழ் அவை/ மக்களவை

நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாகச் சேவை புரிந்த 12 பேரை மாநிலங்கள் அவைக்கு குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்.

 

10. மக்களாட்சி இந்தியாவின் முதல் தேர்தல்:

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், மக்களவையின் முதல் பொதுத் தேர்தல் 1951ம் ஆண்டு அக்டோபர் 25ம் நாள் முதல் 1952ம் ஆண்டு பிப்ரவரி 21ம் நாள் வரை பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்றது. மொத்தம் இருந்த 489 இடங்களில்364 இடங்களில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைத்தது. சுதந்திர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் ஜவவர்லால் நேரு ஆவார்.


உங்களுக்குத் தெரியுமா?

 பொது தேர்தல்கள் -1920

இம்பீரியல் கவுன்சில் எனும் மத்திய சட்டசபைக்கும் மாகாண சட்டசபைக்கும் தேவையான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1920ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதுவே இந்திய வரலாற்றின் முதல் பொதுத்தேர்தல் ஆகும்.

 

11. இந்திய மக்களாட்சி எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்

தற்கால உலகில் மக்களாட்சி அரசாங்கம் தழைத்தோங்கி, அரசாங்கத்தின் மேலாதிக்கம் செலுத்தும் வடிவமாக இருக்கிறது. மக்களாட்சியானது இதுவரை கடுமையான சவாலையோ அல்லது போட்டியையோ எதிர்கொள்ளவில்லை. கடந்த நூறு ஆண்டுகளில் உலகெங்கிலும் மக்களாட்சி விரிவடைந்து வளர்ந்து வருகிறது. இந்தியாவில் மக்களாட்சி எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பின்வருமாறு காணலாம்.

1. கல்வியறிவின்மை

2. வறுமை

3. பாலினப்பாகுபாடு

4. பிராந்தியவாதம்

5. சாதி, வகுப்பு சமய வாதங்கள்

6. ஊழல்

7. அரசியல் குற்றமயமாதல்

8. அரசியல் வன்முறை

 

12. மக்களாட்சி முறை வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான நிபந்தனைகள்

ஏழைகள் மற்றும் எழுத்தறிவற்றோருக்கு மக்களாட்சியின் பலன்களைக் கிடைக்கச் செய்ய அதிகாரம் அளித்தல்.

தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகள் தமது அதிகாரத்தையும், பொதுச்சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல்

மக்களாட்சி முறையைப் பீடித்திருக்கும் சமூக தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் ஒழித்தல்

மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கப் பரபட்சமற்ற, திறமைமிக்க ஊடகங்களின் தேவையை உணர்தல்

பொதுமக்களின் கருத்து வலுவாக இருத்தல்

மக்களிடையே சகிப்புத்தன்மையும், மத நல்லிணக்கமும் நிலவுதல்

அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்துதல்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்

வலுவான பொறுப்புமிக்க எதிர்க்கட்சி இருத்தல்.

சமத்துவம், சுதந்திரம், சமூக நீதி, பொறுப்புணர்வு மற்றும் அனைவருக்கும் மதிப்பளித்தல் போன்ற அடிப்படை மக்களாட்சிப் பண்புகளை, மக்கள் மனதில் கொண்டு செயல்படும் போது மக்களாட்சி மேலும் துடிப்பானதாகவும், வெற்றிகரமானதாகவும் இருக்கும். மக்களின் எண்ணங்கள் சிந்தனைகள் மற்றும் நடத்தைகள் ஆகியவை மக்களாட்சியின் தலையாய கொள்கைகளுடன் பொருத்திச் செயல்பட வேண்டும். எனவே மக்களாட்சியின் இலக்குகளை நடைமுறைப்படுத்த மக்களே தங்களை முன்மாதிரியாக பங்கெடுத்துக் கொள்ளவும், கடமையுணர்வோடு செயல்படவும், தங்களுக்குள் பொறுப்புணர்வை உருவாக்கவும், தமக்களிக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும்.


மீள்பார்வை

 அரசாங்கம் என்பது ஓர் சமூகத்தை நிர்வகிக்கும் அமைப்பாகும்.

 ஒரு அரசன் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சி முடியாட்சி.

மக்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சம அளவில் பங்கேற்க வகை செய்யும் சமூக அமைப்புகள் அல்லது அரசுகளை மக்களாட்சியின் வகைகள் எனலாம்.

பொது விவகாரங்களில் மக்கள் தமது விருப்பங்களை நேரடியாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய அரசு அமைப்பே நேரடி மக்களாட்சி எனப்படும்.

இந்தியாவில் பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை உண்டு.

9th Social Science : Civics : Forms of Government and Democracy : What Is Democracy? in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி : மக்களாட்சி என்றால் என்ன? - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி