Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | அமினோ அமிலங்கள்

வகைப்பாடு, பண்புகள், பெப்டைடு பிணைப்பு உருவாதல் | புரதங்கள் - அமினோ அமிலங்கள் | 12th Chemistry : UNIT 14 : Biomolecules

   Posted On :  11.11.2022 04:48 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்

அமினோ அமிலங்கள்

புரதங்கள் என்பவை அனைத்து உயிரினங்களிலும் மிக அதிகளவில் காணப்படும் உயிரியல் மூலக்கூறுகளாகும். புரதம் எனும் சொல்லானது 'Proteious' எனும் கிரேக்க சொல்லிலிருந்து வருவிக்கப்பட்டது. இதன் பொருள் ”முதன்மையான அல்லது முதல் இடத்திலுள்ள” என்பதாகும்.

புரதங்கள்

புரதங்கள் என்பவை அனைத்து உயிரினங்களிலும் மிக அதிகளவில் காணப்படும் உயிரியல் மூலக்கூறுகளாகும். புரதம் எனும் சொல்லானது 'Proteious' எனும் கிரேக்க சொல்லிலிருந்து வருவிக்கப்பட்டது. இதன் பொருள்முதன்மையான அல்லது முதல் இடத்திலுள்ளஎன்பதாகும். அவை உயிரினங்களின் முக்கியமான செயல்பாட்டு அலகுகளாகும். புரதங்கள், சுவாசித்தல் உள்ளிட்ட செல்லின் அனைத்து செயல்பாடுகளிலும் பங்குகொள்கின்றன. மேலும் இவை - அமினோ அமிலங்களின் பலபடிகளாகும்


அமினோ அமிலங்கள்

அமினோ அமிலங்கள் என்பவை ஒரு அமினோ தொகுதியையும் ஒரு கார்பாக்ஸிலிக் அமில தொகுதியையும் கொண்டுள்ள கரிமச் சேர்மங்களாகும். புரத மூலக்கூறுகளானவை a- அமினோ அமிலங்களால் ஆக்கப்பட்டுள்ளன. அவை பின்வரும் பொது வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன.


புரத மூலக்கூறுகளில், பொதுவாக 20 வெவ்வேறு α-அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அமினோ அமிலத்திற்கும் ஒரு பொதுப் பெயரும், ஒரு மூவெழுத்துக் குறியீடு மற்றும் ஓரெழுத்து குறியீடு ஆகியன வழங்கப்பட்டுள்ளன. ஒரு புரதத்திலுள்ள அமினோ அமில வரிசையை எழுதும்போது பொதுவாக ஓரெழுத்து அல்லது மூவெழுத்துக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.


α-அமினோ அமிலங்களின் வகைப்பாடு

அமினோ அமிலங்கள் அவற்றிலுள்ள பக்கச் சங்கிலிகள் என பொதுவாக அழைக்கப்படும் R தொகுதிகளின் இயல்பினைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன. அவைகள் அமில, கார மற்றும் நடுநிலை அமினோ அமிலங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றை முனைவுள்ள மற்றும் முனைவற்ற (நீர்வெறுக்கும்) அமினோ அமிலங்கள் எனவும் வகைப்படுத்த முடியும்.

படம் 14.14 அமினோ அமிலங்களின் அமைப்பு


மனிதர்களில், அமினோ அமில தொகுக்கும் திறனைப் பொருத்து, அமினோ அமிலங்களை இன்றியமையாத மற்றும் இன்றியமையும் அமினோ அமிலங்கள் எனவும் வகைப்படுத்த முடியும். மனிதர்களால் தொகுக்கப்படக்கூடியவை, இன்றியமையாத அமினோ அமிலங்கள் (Gly, Ala, Glu, Asp, Gin, Asn, Ser, Cys, Tyr & Pro) எனவும், உணவின் வழியாக மட்டுமே பெறப்பட வேண்டியவை, இன்றியமையும் அமினோ அமிலங்கள் (Phe, Val, Thr, Trp, ile, Met, His, Arg, Leu, & Lys). எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த 10 இன்றியமையும் அமினோ அமிலங்களை (PVT TIM HALL) எனும் நினைவுக் குறிப்பின் மூலம் நினைவிற்கொள்ள முடியும்.

பெரும்பாலான தாவர மற்றும் விலங்கு புரதங்கள் , மேற்கூறிய 20 α- அமினோ அமிலங்களால் ஆக்கப்பட்டுள்ள போதிலும், மேலும் பல அமினோ அமிலங்கள் செல்களில் காணப்படுகின்றன. இந்த அமினோ அமிலங்கள் புரதமில்லா அமினோ அமிலங்கள் என்றழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: ஆர்னிதைன் மற்றும் சிட்ருலின் (அம்மோனியாவானது யூரியாவாக மாற்றமடையும் யூரியா சுழற்சியின் பகுதிக்கூறுகள்


அமினோ அமிலங்களின் பண்புகள்

அமினோ அமிலங்கள் நிறமற்ற, நீரில் கரையும் படிக திண்மங்களாகும். அவைகள் கார்பாக்ஸில் மற்றும் அமினோ தொகுதி இரண்டையும் பெற்றிருப்பதால் சாதாரண அமீன்ன்கள் மற்றும் கார்பாக்ஸிலிக் அமிலங்களிலிருந்து வேறுபடுகின்றன. கரைசலின் pH மதிப்பைச் சார்ந்து கார்பாக்ஸில் தொகுதி ஒரு புரோட்டானை இழந்து எதிரயனியாகவோ அல்லது அமினோ தொகுதி ஒரு புரோட்டானை ஏற்று நேரயனியாகவோ மாற இயலும். எந்த ஒரு குறிப்பிட்ட pH மதிப்பில், ஒரு அமினோ அமிலத்தின் நிகர மின்சுமை நடுநிலையாக உள்ளதோ அது சமமின்புள்ளி என்றழைக்கப்படுகிறது. சமமின்புள்ளியை விட அதிகமான pH மதிப்புடைய கரைசலில் அமினோ அமிலமானது எதிர்மின்சுமையை கொண்டிருக்கும், சமமின்புள்ளியை விட குறைவான pH மதிப்புடைய கரைசலில் நேர்மின்சுமையை கொண்டிருக்கும்.

நீர்க்கரைசலில் ஒரு அமினோ அமிலத்தின் கார்பாக்ஸில் தொகுதியிலுள்ள புரோட்டானை அமினோ தொகுதிக்கு மாற்ற இயலும். இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் எதிரெதிர் மின்சுமைகளை பெறுகின்றன. நேர் மற்றும் எதிர் என இரண்டு மின்சுமைகளையும் கொண்டிருப்பதால் மூலக்கூறு நடுநிலைத் தன்மை கொண்டது மேலும் இது ஈரியல்பு தன்மை கொண்டுள்ளது. இந்த அயனிகள் சுவிட்டர் அயனிகள் என்றழைக்கப்படுகின்றன


கிளைசீனைத் தவிர மற்ற அனைத்து அமினோ அமிலங்களும் குறைந்தபட்சம் ஒரு சீர்மையற்ற கார்பன் அணுவைக் கொண்டுள்ளன. எனவே அவைகள் ஒளி சுழற்றும் தன்மையை பெற்றுள்ளன. அவைகள், D மற்றும் L அமினோ அமிலங்கள் எனும் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. எனினும், உயிரினங்களால் L- அமினோ அமிலங்கள் புரதத் தொகுப்பிற்காக முதன்மையாக பயன்படுத்தப்படுகின்றன. D-அமினோ அமிலங்கள் சில உயிரினங்களில் அரிதாக காணப்படுகின்றன.


பெப்டைடு பிணைப்பு உருவாதல்:

அமினோ அமிலங்கள் பெப்டைடு பிணைப்புகளால் சகப்பிணைக்கப்பட்டுள்ளன. முதல் அமினோ அமிலத்தின் கார்பாக்ஸில் தொகுதியானது இரண்டாம் அமினோ அமிலத்தின் அமினோ தொகுதியுடன் வினைப்பட்டு, அமினோ அமிலங்களுக்கிடையே அமைடு பிணைப்பு உருவாகிறது. இந்த அமைடு பிணைப்பானது பெப்டைடு பிணைப்பு என்றழைக்கப்படுகிறது. இதன் காரணமாக இறுதியில் கிடைக்கப்பெறும் சேர்மமானது டைபெப்டைடு என்றழக்கப்படுகிறது. இந்த டைபெப்டைடுடன் மற்றொரு அமினோ அமிலம் இரண்டாம் பெப்டைடு பிணைப்பின் மூலம் இணையும்போது ட்ரைபெப்டைடு உருவாகிறது. இதே போல டெட்ரா பெப்டைடு, பென்டா பெப்டைடு போன்றவற்றை நம்மால் உருவாக்க முடியும். அதிக எண்ணிக்கையிலான அமினோ அமிலங்கள் இதே முறையில் ஒன்றிணையும்போது பாலிபெப்டைடு பெறப்படுகிறது. இதில் இணைந்துள்ள அமினோ அமிலங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பாலிபெப்டைடுகள் எனவும், அமினோ அமிலங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் புரதம் ( செயல்திறன் கொண்ட மூலக்கூறுகள்) எனவும் அழைக்கப்படுகிறது.


ஒரு பெப்டைடின் அமினோ முனையானது N-முனை என அறியப்படுகிறது, அதே சமயம் கார்பாக்ஸி முனையானது C-முனை என்றழைக்கப்படுகிறது. பொதுவாக புரத தொடர் வரிசையானது N-முனையில் தொடங்கி -முனைக்கு எழுதப்படுகிறது. பக்கச் சங்கிலிகளை (R- தொகுதிகள்) தவிர்த்து மற்ற அணுக்கள் முதன்மைச் சங்கிலி அல்லது பாலி பெப்டைடின் முதுகெலும்பு என்றழைக்கப்படுகிறது.

Tags : Classification, Properties, Peptide bond formation | Proteins வகைப்பாடு, பண்புகள், பெப்டைடு பிணைப்பு உருவாதல் | புரதங்கள்.
12th Chemistry : UNIT 14 : Biomolecules : Amino acids Classification, Properties, Peptide bond formation | Proteins in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள் : அமினோ அமிலங்கள் - வகைப்பாடு, பண்புகள், பெப்டைடு பிணைப்பு உருவாதல் | புரதங்கள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்