தயாரிப்பு, வடிவமைப்பு, ஃபிரக்டோஸின் வளைய அமைப்பு - ஃபிரக்டோஸ் | 12th Chemistry : UNIT 14 : Biomolecules

   Posted On :  07.08.2022 04:04 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்

ஃபிரக்டோஸ்

ஃபிரக்டோஸ் என்பது பொதுவாக அறியப்பட்ட மற்றொரு மோனோ சாக்கரைடு ஆகும், இது குளுக்கோஸை போன்று அதே மூலக்கூறு வாய்ப்பாட்டை கொண்டுள்ளது.

 ஃபிரக்டோஸ்

ஃபிரக்டோஸ் என்பது பொதுவாக அறியப்பட்ட மற்றொரு மோனோ சாக்கரைடு ஆகும், இது குளுக்கோஸை போன்று அதே மூலக்கூறு வாய்ப்பாட்டை கொண்டுள்ளது. இது இடஞ்சுழி திருப்புத் திறனைக் கொண்ட கீட்டோஹெக்ஸோஸ் ஆகும். இது பழங்களில் மிக அதிகளவு காணப்படுவதால், பழச் சர்க்கரை எனவும் அழைக்கப்படுகிறது


தயாரித்தல் 

1. சுக்ரோஸிலிருந்து:

சுக்ரோஸை நீர்த்த H2SO4 உடன் சேர்த்து வெப்பப்படுத்தியோ அல்லது இன்வர்டேஸ் நொதியைக் கொண்டோ ஃபிரக்டோஸ் தயாரிக்கப்படுகிறது.


படிகமாக்கல் முறையில் ஃபிரக்டோஸ் தனியாக பிரிக்கப்படுகிறது. சம அளவு குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் ஆகியவற்றை கொண்டுள்ள கரைசல் எதிர்மாறு சர்க்கரை (invert sugar) என பெயரிடப்படுகிறது

2. இனுலின்னிலிருந்து

தொழிற்முறையில், அமில ஊடகத்தில் இனுலினை (ஒரு பாலிசாக்கரைடு) நீராற்பகுத்து ஃபிரக்டோஸ் தயாரிக்கப்படுகிறது.



ஃபிரக்டோஸ் வடிவமைப்பு:

அனைத்து வகை சர்க்கரைகளை ஒப்பிடும்போது ஃபிரக்டோஸ் அதிக இனிப்புச் சுவையுடையதாகும். இது நீரில் நன்கு கரையக்கூடியது. புதிதாக தயாரிக்கப்பட்ட ஃபிரக்டோஸ் கரைசலின் நியம சுழற்சி மதிப்பு -133°. இந்த மதிப்பானது சமநிலையில் மியுட்டா சுழற்சியின் காரணமாக - 92° ஆக மாறுகிறது. குளுக்கோஸ் போன்றே ஃபிரக்டோஸின் அமைப்பும் பின்வரும் உண்மைகளை அடிப்படையாக கொண்டு வருவிக்கப்படுகிறது.

1. தனிம பகுப்பாய்வு மற்றும் மூலக்கூறு நிறையறிதல் சோதனை ஆகியன ஃபிரக்டோஸின் மூலக்கூறு வாய்ப்பாடு C6H12O6 என காட்டுகின்றன.

2. அடர் HI மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் கொண்டு ஒடுக்கும்போது ஃபிரக்டோஸ் ஆனது n ஹெக்சேன் (மிகையளவு) மற்றும் 2-அயோடோ ஹெக்சேன் (குறைந்தளவு) கலந்த கலவையை உருவாக்குகிறது. இது, ஃபிரக்டோஸிலுள்ள ஆறு கார்பன் அணுக்களும் ஒரே நேர்கோட்டு சங்கிலியாக பிணைக்கப்பட்டுள்ளன என்பதை காட்டுகிறது.


3. ஃபிரக்டோஸ் NH2OH மற்றும் HCN உடன் வினைபுரிகிறது. ஃபிரக்டோஸ் மூலக்கூறில் கார்பனைல் தொகுதி இருப்பதை இவ்வினைகள் காட்டுகின்றன.

4. ஃபிரக்டோஸ் ஆனது பிரிடின் முன்னிலையில் அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைப்பட்டு பென்டா அசிட்டேட்டை உருவாக்குகிறது. ஃபிரக்டோஸ் மூலக்கூறில் ஐந்து ஆல்கஹால் தொகுதிகள் இருப்பதை இவ்வினை காட்டுகிறது.

5. ஃபிரக்டோஸ் மூலக்கூறு புரோமின் நீரால் ஆக்சிஜனேற்றமடைவதில்லை . இதிலிருந்து, ஃபிரக்டோஸ் மூலக்கூறில் ஆல்டிஹைடு தொகுதி (-CHO) இருப்பதற்கான சாத்தியமில்லை என அறியலாம்.

6. சோடியம்-பாதரசக் கலவை மற்றும் நீர் உடன் ஃபிரக்டோஸ் பகுதியளவு ஒடுக்கமடைந்து சார்பிடால் மற்றும் மேனிட்டால் கலவை உருவாகிறது. இவை இரண்டும் இரண்டாம் கார்பனில் மாறுபட்ட அமைப்பை கொண்ட எபிமர்கள் ஆகும். அதாவது ஒரு புதிய சீர்மையற்ற கார்பன் C-2 வில் உருவாகியுள்ளது. இது மூலக்கூறில் கீட்டோ தொகுதி உள்ளதை உறுதிபடுத்துகிறது.


7. நைட்ரிக் அமிலம் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்யும்போது, ஃபிரக்டோஸ் மூலக்கூறானது கிளைக்காலிக் அமிலம் மற்றும் டார்டாரிக் அமிலங்களை தருகிறது. இவை ஃபிரக்டோஸ் மூலக்கூறைவிட குறைவான கார்பன் அணுக்களை கொண்ட மூலக்கூறுகளாகும்.


கீட்டொ தொகுதியானது C-2 கார்பனில் அமைந்துள்ளதை இது காட்டுகிறது. மேலும், C- 1 மற்றும் C- 6 கார்பன்களில்ஆல்கஹால் தொகுதிகள் அமைந்துள்ளதையும் இது காட்டுகிறது. மேற்கண்ட வினையிலிருந்து ஃபிரக்டோஸ் அமைப்பானது பின்வருமாறு அமைகிறது.

படம் 14.7 D (+) ஃபிரக்டோஸின் அமைப்பு 



ஃபிரக்டோஸின் வளைய அமைப்பு

குளுக்கோஸைப் போலவே, ஃபிரக்டோஸும் வளைய அமைப்பை உருவாக்குகிறது. ஆனால் குளுக்கோஸை போலல்லாமல் இது ஃபியுரானை ஒத்த ஐந்தணு வளையத்தை உருவாக்குகிறது. எனவே, இது ஃபியுரனோஸ் வடிவம் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக சுக்ரோஸ் போன்ற டைசாக்கரைடுகளின் பகுதிக்கூறாக இருக்கும்போது ஃபிரக்டோஸ் அதன் ஃபியுரனோஸ் வடிவத்திலேயே காணப்படுகிறது.

படம் 14.8 ஃபிரக்டோஸின் வளைய அமைப்புகள்



Tags : Preparation, Structure, Cyclic structure of fructose தயாரிப்பு, வடிவமைப்பு, ஃபிரக்டோஸின் வளைய அமைப்பு.
12th Chemistry : UNIT 14 : Biomolecules : Fructose Preparation, Structure, Cyclic structure of fructose in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள் : ஃபிரக்டோஸ் - தயாரிப்பு, வடிவமைப்பு, ஃபிரக்டோஸின் வளைய அமைப்பு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்