Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு

பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் - தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு | 12th Economics : Chapter 8 : International Economic Organisations

   Posted On :  16.03.2022 08:07 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு

ஆசியான் ஜஹார்த்தாவில் ஆகஸ்ட் 8, 1967ல் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளால் தொடங்கப்பட்டது. புரூனை, வியட்நாம், லாவோஸ், மியான்மார் மற்றும் கம்போடியா ஆகிய ஐந்து நாடுகள் பிறகு உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டன.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு

ஆசியான் ஜஹார்த்தாவில் ஆகஸ்ட் 8, 1967ல் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளால் தொடங்கப்பட்டது. புரூனை, வியட்நாம், லாவோஸ், மியான்மார் மற்றும் கம்போடியா ஆகிய ஐந்து நாடுகள் பிறகு உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டன. இவற்றுடன் சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய ஆறு நாடுகள் விவாதத்தில் கலந்து கொள்ளும் நாடுகளாக சேர்ந்து கொண்டன. வாணிகத் தடையற்ற பகுதி அமைந்த நாடுகளுக்கு கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் ஆசியான் நாடுகளுக்கும் கிடைக்கும். ஏனென்றால் உறுப்புநாடுகள் இறக்குமதி வரி மற்றும் பங்களவு போன்ற தடைகளை ஒப்பந்தப்படி குறைக்க வேண்டும். இந்த உறுப்பு நாடுகளின் பொதுவான வரலாற்று மற்றும் பண்பாட்டு பின்புலம், பன்னாட்டு வாணிக ஒத்துழைப்பு கூட்டமைப்பை ஒற்றுமையுட்ன் நடத்துவதை உறுதி செய்கிறது. உலகமயமாக்கல் மற்றும் எச்சரிக்கையுடனான பேரினப் பொருளாதார கொள்கைகளை கடைபிடிக்கும் ஆசியான் நாடுகளுக்கு பன்னாட்டு வாணிபம் உயிர்மூச்சு போன்றதாகும். உறுப்பு நாட்டு அரசாங்கத்தின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆசியான் அமைப்பின் அதிகாரமிக்க அவையாகும். இது மூன்று ஆண்டுகளுக்கொருமுறை கூடி முடிவுகளை எடுக்கும். ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் முடிவுகளை எடுப்பதில் அடுத்தக்கட்ட அதிகாரமுள்ள துணை அமைப்பாகும்.

இந்தியா ஆசியானுடன் 1992லிருந்து கூட்டாளியாக செயல்பட தொடங்கியது. இந்த ஆண்டு இந்தியா துறைவாரியான விவாதங்களில் பங்கேற்கும் நாடாக செயல்பட தொடங்கியது. ஆசியான் நாடுகள் இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் போக்குவரத்து செலவு குறைவாக உள்ளது. எனவே ஏற்றுமதி எளிதாக நடைபெறுகிறது.




1. ஆசியான் அமைப்பின் நோக்கங்கள் 

ஆசியான் ஒப்பந்தக் கூட்டறிக்கையின்படி கீழே குறிப்பிடப்பட்டுள்ளவையே அதன் நோக்கங்களாகும்

(i) பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி மற்றும் பண்பாட்டு மாற்றத்தை துரிதப்படுத்துவது.

(ii) ஐநாசபையின் கொள்கைகளைக் கடைபிடித்து தென்கிழக்காசிய பகுதியில் அமைதி மற்றும் உறுதியான அரசியல் சூழ்நிலையை மேம்படுத்துவது.

 (iii) அரசுத் துறைத் தணிக்கையில் உள்ள அறிவையும் அனுபவத்தையும் பரிமாறிக்கொள்வதன் மூலம் உறுப்பினர்களை ஒன்றிணைந்து செயல்பட வைப்பது.

 (iv) கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கு பொருத்தமான சூழ்நிலையையும் வசதிகளையும் உறுப்பு நாடுகளில் அமைத்துக் கொடுப்பது. 

(v) தகவல் மையமாக செயல்படுதல் மற்றும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வசதிகளைச் செய்தல்.



2. ஆசியானின் பணிகள்

i) ஐரோப்பிய ஒன்றியம் போன்று ஒரே சந்தையாக செயல்பட ஆசியான் உறுப்பினர் நாடுகளுக்கிடையில் தடையற்ற பொருள், பணிகள் மற்றும் மூலதன போக்குவரத்துக்கான வழிமுறைகளை உருவாக்கும் பணியை ஆசியான் அமைப்பு செய்கிறது.

ii) ஒரு உறுப்பு நாட்டு விற்பனையாளர் மற்ற எல்லா உறுப்பு நாடுகளிலும் விற்க தடையற்ற அனுமதி அளிக்கும் பணியையும் செய்கிறது. 

iii) உறுப்பு நாடுகளின்வணிக நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்துவது மற்றும் பொருளாதார மேம்பாட்டு இடைவெளியை குறைப்பது.

iv) உறுப்பு நாடுகளுக்கு சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பெற்றுத் தருவது. 

v) தொழில் மற்றும் வணிகம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை வளர்த்தல்.


Tags : International Economic Organisations பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்.
12th Economics : Chapter 8 : International Economic Organisations : Association of South East Asian Nations (ASEAN) International Economic Organisations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் : தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்