பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் - உலக வர்த்தக அமைப்பு (WTO) | 12th Economics : Chapter 8 : International Economic Organisations
உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation)
1995ஆம் ஆண்டில் GATT ஆனது உலக வர்த்தக அமைப்பு என உருவானது. ஒரு புதிய சர்வதேச நிரந்தர அமைப்பாக அது நிறுவப்பட்டது. பொருட்கள் மற்றும் சேவைகளில் வர்த்தகம். அந்நிய முதலீடு மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் ஆகியவற்றில் வர்த்தகம் செய்வதற்கான கண்காணிப்பு அமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பின் அடித்தளமான டங்கல் வரைவு அதன் பொதுச்செயலர் ஆர்தர் டங்கல் அவர்களால் வடிவமைக்கப்பட்டது.
WTO இரு ஆண்டுகளுக்கொரு முறை நாடுகளின் சார்பாக வணிக அமைச்சர்கள் நிலையிலான மாநாடு அவர்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக கூட்டப்படுகிறது. WTO ன் முதல் மாநாடு சிங்கப்பூரில் 1996ல் கூட்டப்பட்டது. 2017ல் 11வது மாநாட்டை அர்ஜெண்டினாவில் கூட்டியது. 12 - வது அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டை 2020 ஆண்டில் கஜகஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலக வர்த்தக மையம்
WTC என்பது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்டு அமைந்துள்ளது. இரட்டைக் கோபுரங்கள் என்று அழைக்கப்பட்ட அது ஏப்ரல் 4, 1973ல் துவங்கப்பட்டது. பின்னர் செப்டம்பர், 11, 2001 அன்று விமானத் தாக்குதலால் அழிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பன்னாட்டு வாணிபத்தில் ஈடுபடும் வணிகங்களை அது ஒன்று சேர்க்கிறது.
1. உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள்
பன்னாட்டு வாணிபத்தை விரிவுபடுத்துவது மற்றும் வாணிக தடைகளை தாராளமயமாக்குவதன் மூலம் பொருளாதாரச் செழுமையை கொணர்வதே அடிப்படை நோக்கமாகும்.
i) சுங்கவரி மற்றும் பிற தடைகளை குறைப்பதை உறுதிசெய்தல்
ii) வாணிபத்தில் பேதத்தை நீக்குதல்
ii) உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்குதல்
iv) உலக வளங்களை உத்தம அளவில் பயன்படுத்த வசதி செய்வது
v) பன்னாட்டு வாணிப வளர்ச்சியில் குறைவளர்ச்சி நாடுகளுக்கு நியாயமான பங்கைப் பெறுதல்
vi) வாணிப கொள்கைகள், சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் நீடித்த நெடுநாள் வளர்ச்சி ஆகியவற்றிற்கிடையே இணைப்பை உறுதி செய்தல்
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்கள்
உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்தின் கூறுகள் அனைத்தும் தனி ஒப்பந்தங்களாகவே கருதப்படுகின்றன. வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் (Trade Related Aspects Intellectual Property Rights (TRIPS)
பதிப்புரிமை, வணிக முத்திரை, காப்புரிமை, புவிசார் குறியீடு, தொழில் ரகசியம், உற்பத்தி வடிவமைப்பு போன்றவை அறிவுசார் சொத்துரிமைகளாகும். இந்த ஒப்பந்தத்தின்படி பொருட்கள் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்யும் முறை ஆகிய இரண்டுக்கும் காப்புரிமை வழங்கப்படும். இதற்குமுன் உற்பத்தி முறைக்கு மட்டுமே காப்புரிமை வழங்கும் நடைமுறை இருந்தது. இந்த ஒப்பந்த விதிகளின்படி வளரும் நாடுகள் விதைகள், மாத்திரை, மருந்து, உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றை வாங்குவதற்கு வளர்ந்த நாடுகளை சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. காப்புரிமைகளுக்கு 20 ஆண்டுகளும், பதிப்புரிமைகளுக்கு 50 ஆண்டுகளும், வணிக முத்திரைக்கு ஏழு ஆண்டுகளும் மற்றும் உற்பத்தி வடிவமைப்பிற்கு 10 ஆண்டுகளும் பாதுகாப்பு கால அளவாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
1995ம் ஆண்டு உலக வர்த்த அமைப்பு ஏற்படுத்திய வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை (TRIPS) ஒப்பந்தம் பன்னாட்டு அறிவுசார் சொத்துரிமை சட்டத்திலும் கொள்கை - முடிவெடுப்பதிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளும் முரண்பாடுகளும் வர்த்தகத்தை பாதிப்பதோடு அதன் பயனைத் தடுப்பதாக உள்ளது என்பதை TRIPS செயல்பாட்டாளர்கள் தொடர்பான வர்த்தகத்துக்கு துணை புரிவதாக இருந்தாலும் அமைப்பு நாடுகள் வேறுபட்ட உள்நாட்டுக் கொள்கைகளை கடைப்பிடிக்க வழிவகைகள் உள்ளன.
வாணிபம் தொடர்புள்ள முதலீட்டு வழிமுறைகள் ஒப்பந்தம் (Agreement on Trade Related Investment Measures (TRIMs)
அது வெளிநாட்டு மூலதனம் மீதான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்புடைய ஒப்பந்தம் ஆகும். உறுப்பினர் நாடுகளின் உள்நாட்டு வாணிப மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சமமாக வெளிநாட்டு நிறுவனங்களையும் நடத்த வேண்டும் என இந்த ஒப்பந்தம் கூறுகிறது. வளரும் நாடுகள் இந்த ஒப்பந்தத்தை பரவலாகக் கடைப்பிடிக்கிறது. கீழ்கண்ட விதங்களில் வெளிநாட்டு மூலதனத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்க இந்த ஒப்பந்தம் கோருகிறது.
* எந்தெந்த துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்
* உள்நாட்டு இடுபொருளைப் பயன்படுத்த நிர்பந்திக்கக் கூடாது.
* கட்டாய ஏற்றுமதி நிபந்தனையை விதிக்கக்கூடாது.
* உரிமைத் தொகை இலாபப்பங்கு மற்றும் வட்டி வருவாயை பன்னாட்டு முதலீட்டாளர்கள் வேறுநாட்டுக்கு எடுத்து செல்வதை தடை செய்யக்கூடாது.
* இறக்குமதிக்கு சமமாக ஏற்றுமதி செய்ய வேண்டுமெனவும் நிர்பந்திக்கக் கூடாது.
பன்னாட்டு பணிகள் வாணிபம் தொடர்பான பொது ஒப்பந்தம் (General Agreement on Trade in Services (GATS)
வங்கி, காப்பீடு, போக்குவரத்து, தொலை தொடர்பு, போன்ற பணிகளில் பன்னாட்டு வாணிகம் நடைபெறுவதற்குத் தேவையான சாதகமான விதிகளை முதன்முதலில் தொகுத்துக் கொடுத்த முதலாவது பலதரப்பு பன்னாட்டு ஒப்பந்தமாகும். காட் ஒப்பந்தத்தில் உறுப்பினர் நாடுகள் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு மிகவும் சாதகமான நாடு (Most Favoured Nation, (MEN) என்ற சலுகையை வழங்க அனுமதித்தது. பணிகள் வாணிக ஒப்பந்தத்தில் ஒரு நாட்டுக்கு சாதகமான நாடு என்ற சலுகை வழங்கினர். அந்த சலுகைகளை அனைத்து நாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்த விதி திருத்தியமைக்கப்பட்டது. இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய பணிகள் தொடர்புடைய சட்டவிதிகளை உறுப்பினர் நாடுகளில் விரும்பியவர்கள் படிக்கும் வகையில் பதிப்பிட வேண்டும் என கூறுகிறது.
நார் பொருட்களுக்கான பன்முக பழைய ஒப்பந்தத்தை படிப்படியாக நீக்குதலுக்கான ஒப்பந்தம் (Phasingout of Multi Fibre Agreement (MFA)
துணி மற்றும் ஆயத்த ஆடை ஒப்பந்த விதிகளின்படி பன்னாட்டு வாணிகம் 1974ல் நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் வளரும் நாடுகளிலிருந்து வளர்ந்த நாடுகளுக்கு துணி மற்றும் ஆடை ஏற்றுமதியை பங்களவு நிர்ணயம் செய்து கட்டுப்படுத்தியது. உலக வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான 1995ம் ஆண்டிலிருந்து பத்து ஆண்டுகளில் இந்த நார்ப்பொருட்கள் ஒப்பந்தம் படிப்படியாக நீக்கப்பட்டது. இது இந்தியாவைப் பொருத்தமட்டில் சாதகமான ஒன்றாகும்.
வேளாண்மை ஒப்பந்தம் (Agreement on Agriculture (AOA)
பணிகள் போன்று வேளாண்மையும் உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்தில் முதல்முறையாக சேர்க்கப்பட்டது. வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி தீர்வைக்கு உட்படுத்துதல், தீர்வை குறைத்தல் மற்றும் விவசாய மானியத்தை குறைத்தல் ஆகியவையே வேளாண் ஒப்பந்தத்தின் பிரதான கூறுகளாகும்.
தகராறுகளைத் தீர்ப்பதற்கான அமைப்பு (Dispute Settlement Body)
செயல்முறை காலதாமதத்திற்கு தகராறுகளுக்கான தீர்வு அமைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எந்த ஒரு தகராறும் 18 மாதங்களுக்குள் பன்முக வாணிப முறை மூலம் தீர்க்கப்படுகிறது. இந்த அமைப்பின் நிபந்தனைகளினால் இந்தியா பெருமளவு ஏற்றுமதி வாய்ப்பை இழந்தது.
2. உலக வர்த்தக அமைப்பின் பணிகள்
WTO - ன் முக்கிய பணிகள்
* WTO உடன்படிக்கைகளை நிர்வகித்தல்
* வாணிப பேச்சுவார்த்தைகளுக்கான மன்றம் வாணிப தகராறுகளை கையாளுதல்
* தேசிய வாணிக கொள்கைகளை கண்காணித்தல்
* வளர்ந்து வரும் நாடுகளுக்கான தொழில் நுட்ப உதவி மற்றும் பயிற்சி
WTO - ன் பணிகள் பின்வருவனவாகும்.
i) பன்முக வாணிப உடன்படிக்கைகள் மற்றும் உடன்படிக்கையின் நோக்கங்களை நடைமுறைப்படுத்துதல், நிர்வகித்தல் மற்றும் செயல்படுத்துவதற்கு உதவி செய்தல்.
ii) உடன்படிக்கைகள் தொடர்பான விஷயங்களில் உறுப்பு நாடுகளின் பன்முக வணிக உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கான மன்றமாக செயல்படுகிறது.
iii) தகராறுகளை தீர்க்கும் விதிகள் மற்றும் நடைமுறைகள் மீதான புரிந்துணர்வை நிர்வகிக்கிறது.
iv) பன்னாட்டுபண நிதியம்மற்றும் உலகவங்கி மற்றும் அதனுடன் இணைந்த முகமைகள் உலகளாவிய பொருளாதார கொள்கை உருவாக்கலில் கூடுதலான இணக்கத்தை அடைவதற்கு ஒத்துழைக்கிறது.
3. உலக வர்த்தக அமைப்பின் சாதனைகள் (Achievements of WTO)
உலக வர்த்தக அமைப்பின் வணிக அமைச்சர்களின் மாநாடு
WORLD TRADE ORGANIZATION -
1. கசகிஸ்தான் - 2020
2. பியூநோஸ் ஏரிஸ் - 10 – 13 டிசம்பர் 2017
3. நைரோபி - 15 - 18 டிசம்பர் 2015
4. பாலி - 3 - 6 டிசம்பர் 2013
5. ஜெனிவா - 15 - 17 டிசம்பர் 2011
6. ஜெனிவா - 30 நவம்பர் - 2 டிசம்பர் 2009
7. ஹாங்காங் - 13 - 18 டிசம்பர் 2005
8. கான்கன் - 10 - 14 செப்டம்பர் 2003
9. டோகா - 9-13 நவம்பர் 2001
10. சீட்டில் - 30 நவம்பர் - 3 டிசம்பர் 1999
11. ஜெனிவா - 18 - 20 மே 1998
12. சிங்கப்பூர் - 9 -13 டிசம்பர் 1996
உலக வர்த்தக அமைப்பின் சாதனைகளை கீழே காணலாம்.
1) அயல்நாட்டு செலுத்துநிலை சமமின்மையின் தீய விளைவுகளை நீக்குவதற்கு பன்னாட்டு வாணிகத்தடைகளை பயன்படுத்துவதை குறைத்துள்ளது.
2) சேவைகள் பன்னாட்டு வாணிக பரிவர்த்தனைக்குள் கொண்டுவரப்பட்டு பணிகள் வழங்கு துறையில் வெளிநாட்டு மூலதனம் செய்வதற்கும் அனுமதி பெற்றதும் ஒரு சாதனையாகும்.
3) வாணிகக் கொள்கை மீளாய்வு நடைமுறை அக்கொள்கையில் நிகழும் மாற்றங்களை விடாமல் கண்காணிக்கும் வசதியை கட்டமைத்ததும் ஒரு சாதனையாகக் கருதலாம்.
4. இந்தியாவும் பன்னாட்டு வர்த்தக அமைப்பும்
பன்னாட்டு வர்த்தக அமைப்பு செயல்பட தொடங்கிய ஆண்டிலிருந்தே இந்தியா அதன் உறுப்பு நாடாகும். பலதரப்பு விவாதங்கள் மூலமாக தீர்வுகள் காண்பதற்கு இந்தியாவின் ஆதரவு எப்பொழுதுமே உண்டு. பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினரானதால் இந்தியாவுக்கு கீழ்கண்ட விதங்களில் நன்மைகளைப் பெற்றுள்ளது.
1. இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் இடு பொருட்கள், உதிரி பாகங்கள், மற்றும் இயந்திரங்கள் இந்தியாவுக்கு குறைவான விலையில் அதிகமாக கிடைத்துள்ளது.
2. நாடுகளுடன் தனித்தனியே ஒப்பந்தம் போடாமல் பலநாடுகளில் இந்தியா பொருட்களை விற்பனை செய்யமுடிகிறது.
3. குறைந்த செலவில் உயர்வகை தொழில்நுட்பம் கிடைத்துள்ளது.
4. பன்னாட்டு பரிவர்த்தனை தொடர்புள்ள புகார்களுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
5. பரந்த சந்தை தகவலிலிருந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் பலனடைகின்றனர்.