Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பன்னாட்டு பண நிதியம்

பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் - பன்னாட்டு பண நிதியம் | 12th Economics : Chapter 8 : International Economic Organisations

   Posted On :  16.03.2022 07:40 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்

பன்னாட்டு பண நிதியம்

உறுப்பு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பைப் பெறுவதே நிதியத்தின் அடிப்படை குறிக்கோளாகும்.

பன்னாட்டு பண நிதியம் (International Monetary Fund)


உறுப்பு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பைப் பெறுவதே நிதியத்தின் அடிப்படை குறிக்கோளாகும். உறுப்பு நாடுகளுக்கு குறுகிய கால அயல்நாட்டுச் செலவாணி சமமின்மையை சமாளிக்க உதவுவதற்காக நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டின் படி கடைசியாக 2016 - ல் உறுப்பினராக சேர்ந்த நவ்ரு குடியரசு என்ற நாட்டையும் சேர்த்து நிதியம் 189 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.



1. பன்னாட்டு பண நிதியத்தின் குறிக்கோள்கள் (Objectives of IMF)

i) உறுப்பு நாடுகளிடையே பன்னாட்டு பரிவர்த்தனையில் பணவியல் ஒத்துழைப்பைப் மேம்படுத்துவது

 ii) பன்னாட்டு வாணிபம் வேகமாகவும் சமச்சீராகவும் வளர உதவுவது.

iii) உறுப்பு நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு பண மதிப்பிறக்கம் செய்வதை தடுத்து நாணய மாற்று விகிதம் நிலையாக இருக்கச் செய்தல்

iv) உறுப்பு நாடுகள் விதிக்கும் செலாவணிக் கட்டுப்பாடுகளை குறைத்தல் அல்லது நீக்குதல் 

v) இருதரப்பு வாணிக ஒப்பந்தங்களுக்குப் பதிலாக அனைத்து நாடுகளுக்கிடையிலான பலதரப்பு நடப்பு கணக்கு மற்றும் பண பரிவர்த்தனை முறையை நிறுவுவது

vi) வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் மூலதனம் செய்வதை எளிதாக்குவதன் மூலம் வளரும் நாடுகளின் உற்பத்தி வளங்களையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவது.

vii) பன்னாட்டு நீர்மை பிரச்சினைக்குத் தீர்வு காண்பது.



2. பன்னாட்டுப் பண நிதியத்தின் பணிகள் (Functions of IMF)


i) நாணயமாற்றுவீதத்தில் நிலைத்தன்மையை கொண்டுவருதல்

ஐ.எம்.எப் - ன் முதல் மற்றும் மிக முக்கிய பணியாக நாணய மாற்று வீதத்தை நிலைப்படுத்துதல் மற்றும் நாணய மதிப்பு குறைப்பை வலியுறுத்துதல், உறுப்பு நாடுகள் பன்முக மாற்று வீதங்களுக்கு செல்வதைத் தடுத்தல் மற்றும் தங்கத்தை அறிவிக்கப்பட்ட மதிப்பு நீங்கலாக குறிப்பிட்ட விலையில் வாங்க மற்றும் விற்க வலியுறுத்துகிறது.

ii) அயல் நாட்டுச்செலுத்து நிலை சமமின்மையை சரி செய்தல்

உறுப்பு நாடுகளுக்கு அன்னிய செலாவணிகளை விற்பனை செய்தல் மற்றும் கடனாக வழங்குவதன் மூலம் அவற்றின் அயல்நாட்டு செலுத்துநிலை சமமின்மையை குறுகிய காலத்தில் நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கு உதவுகிறது.

iii) இணை மதிப்பை உறுதிசெய்தல்.

உறுப்பு நாடுகளின் நாணயங்களின் மதிப்பு மூல முறையை உறுதி செய்வதற்கு ஐ.எம்.எப் வலியுறுத்துகிறது. ஐ.எம்.எப் - ன் அமைப்பு உடன்பாட்டின்படி, ஒவ்வொரு உறுப்பு நாடும் அதன் நாணய மதிப்பினை தங்கம், அல்லது அமெரிக்க டாலர்கள் என்ற அடிப்படையில் உறுதி செய்யவேண்டும். இந்த நிபந்தனையின்படி, ஐ.எம்.எப். பன்னாட்டு பண முறையின் சுமூக செயல்பாட்டிற்கு உறுதி செய்கிறது.

iv) நாடுகளின் பணத்திற்கான தேவையை அளிப்புக்கு சமமாகும் வகையில் பராமரித்தல்

நாடுகளின் பணத்திற்கான தேவைக்கு சமமாக அளிப்பை பராமரிக்கும் பிரதான பொறுப்பையும் நிதியம் பெற்றுள்ளது. உயர்வான தேவையுள்ள எந்த நாட்டு பணத்தையும் பற்றாக்குறையுள்ள பணம் என நிதியம் அறிவிக்கலாம். அந்த நாட்டிலிருந்து அவர்களின் பணத்தை கடன் வாங்கியோ தங்கத்தை கொடுத்து பணத்தை கொள்முதல் செய்தோ பற்றாக்குறை என அறிவிக்கப்பட்ட பணத்தின் அளிப்பை நிதியம் உயர்த்தும்.

v) வாணிபத் தடைகளைக் குறைத்தல்

இந்நிதியம் உறுப்பு நாடுகளால் விதிக்கப்படுகின்ற சுங்க வரி மற்றும் பிற வாணிப தடைகளை குறைப்பதன் மூலம் பணம் அனுப்புதல் குறித்த தடைகளை நிறுத்துதல் அல்லது பேத நடவடிக்கைகளை தவிர்த்தல் ஆகியவற்றை இதன் நோக்கமாக கொண்டுள்ளது.

vi) கடன் வசதிகளை வழங்குதல்

உறுப்பு நாடுகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு ஐ.எம்.எப் பல்வேறு வகையான கடன் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை கடன் வசதி, மூன்று ஆண்டுகளுக்கான விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி, ஈடுசெய் நிதிவசதி மற்றும் கட்டமைப்பு சரிசெய்தல் வசதி ஆகியவற்றை இக்கடன் வசதிகள் உள்ளடக்கியுள்ளது.

நிதியம் ஆற்றும் பணிகளை மூன்று தலைப்புகளில் வகைப்படுத்தலாம்.

1. நிதி சார்ந்த பணிகள் - உறுப்பு நாடுகளின் குறுகிய மற்றும் நடுத்தர கால அயல்நாட்டுச் செலுத்துநிலை பற்றாக்குறையை சரிக்கட்ட வழங்கப்படும் நிதி உதவிப் பணிகள். 

2. ஒழுங்காற்றுப் பணிகள் - உறுப்பு நாடுகள் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகளை செயல்படுத்துதல்.

3. ஆலோசனைப் பணிகள் - பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்.



3. நிதியம் வழங்கும் வசதிகள்

நிதியம் வழங்கும் கடன் திட்டங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

(i) அடிப்படைக் கடன் வசதி

உறுப்பு நாடுகள் தற்காலிக அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மை சிரமங்களிலிருந்து விடுபட இந்த வகை கடன் உதவியை நிதியம் அளிக்கின்றது. ஒரு உறுப்பு நாடு நிதியத்திடமிருந்து மற்ற நாட்டு பணத்தையோ சிறப்பு எடுப்புரிமையையோ (SDR) தங்கள் நாட்டுப் பணத்தைக் கொடுத்து பெற்றுக் கொண்டு அயல்நாட்டு செலுத்துநிலை பற்றாக்குறையை நிரப்பிக் கொள்ளலாம். ஒரு உறுப்பினர் நாடு நிதியத்தில் அது பராமரிக்கும் மூலதனப் பங்குத் (Quota in Capital) தொகையில் 25 விழுக்காடு அளவுக்கு நிபந்தனையற்ற கடன் பெறுவதையே அடிப்படைக் கடன் என்கிறோம். இந்த நிபந்தனையற்ற கடன் வாங்கும் உரிமை கையிருப்பு பகுதி (Reserve Tranche) என அழைக்கப்படுகிறது.

சிறப்பு எடுப்புரிமைகள் (Special Drawing Rights) 

தாள் தங்கம் என்று அழைக்கப்படும் சிறப்பு எடுப்புரிமைகள் (SDRs) என்ற திட்டத்தை நிறுவியதில் நிதியம் வெற்றி பெற்றுள்ளது. பன்னாட்டு நீர்மைத் தன்மையை உருவாக்க 1969ல் நிதியம் பன்னாட்டு பண இருப்புகளை ஏற்படுத்தியது. இவை நிதியத்தின் உறுப்பு நாடுகளுக்கு அவர்களின் மூலதனப் பங்குத் தொகையின் அளவுகளுக்கு ஏற்றாற்போல் அளிக்கப்படுகின்றது. இதன் மூலம் சிறப்பு எடுப்புரிமைகள் பன்னாட்டு மதிப்பளவையாகவும் செலுத்து நிலையாகவும் செயல்படுகின்றது. நிதியம் வழங்கும் வைப்புகள், மூலதனம் போன்ற அனைத்து செயல்பாடுகளும் சிறப்பு எடுப்புரிமையில் வெளிப்படுத்தப்படுகின்றது.

ஹெயின் (Haien) கூறியபடி "நிதியம் ஒரு பன்னாட்டு மத்திய வங்கி போல் உள்ளது என்ற கருத்தே நிதியத்தின் சாதனையாகும்.

 (ii) விரிவாக்கப்பட்ட நிதி வசதி

உறுப்பு நாடுகள் தங்களின் மூலதனப்பங்குத் தொகையில் 140 விழுக்காடு அளவுக்கு அடிப்படைக் கடன் தொகைக்கு மேல் அதிகமாக கடன் பெற அனுமதிப்பதே விரிவாக்கப்பட்ட கடன் திட்டம். இது மூன்று ஆண்டுகளில் குறைந்த வட்டியில் திரும்ப செலுத்தத்தக்க கடன் திட்டமாகும்.

(iii) ஈடு செய் நிதி வசதி

நிதியம் 1963 ஆம் ஆண்டில் ஈடு செய் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறைவான ஏற்றுமதி வருவாய் ஈட்டும் முதன்மைத் துறை பொருளுற்பத்தியை சார்ந்திருக்கும் நாடுகளுக்கான தனிப்பட்ட கடன் திட்டமே ஈடு செய் கடன் திட்டமாகும். தானிய விலை ஏற்ற இறக்கத்தினால் இறக்குமதிக்கான தொகையை செலுத்த இயலாமல் சிரமப்படும் நாடுகளுக்கு கூடுதல் கடன் வழங்கும் வகையில் 1981 ஆம் ஆண்டில் ஈடுசெய் கடன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

(iv) தாங்கிருப்பு வசதி

தாங்கிருப்பு நிதி வசதி 1969 - ல் துவங்கப்பட்டது. உணவு தானியங்கள் விளைவிக்கும் நாடுகள் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைத்து உணவுப் பொருள் விலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வழங்கப்படும் கடனே தாங்கிருப்பு வசதிக்கான கடனாகும்.

(v) துணை நிதி வசதி

மூலதனப் பங்களவு சிறிதாக உள்ள உறுப்பு நாடுகள் அயல்நாட்டுச் செலுத்துநிலை சிரமங்களிலிருந்து விடுபட நிதியம் தற்காலிக நிதி உதவித் திட்டத்தை ஏற்பாடு செய்தது.

 (vi) கட்டமைப்பு சரி செய்தல் வசதி (Structural Adjustment Facility (SAF)

மார்ச் 1986ல் சலுகைகளுடன் ஏழைநாடுகளுக்கு கூடுதல் அந்நிய செலாவணி கடனுதவியாக வழங்கும் இத்திட்டத்தை நிதியம் துவக்கியது. டிசம்பர் 1987ல் விரிவாக்கப்பட்ட கட்டமைப்புக் கடன் திட்டத்தை (Enhanced Structural Adjustment Facility (ESAF) நிதியம் துவக்கியது. இத்திட்டத்தின் கீழ் அதிக சலுகைகளுடன் குறைவான வருவாய் உள்ள நாடுகளுக்கு அந்நிய செலாவணி கிடைப்பதை அதிகரிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏழைநாடுகளின் அயல்நாட்டு செலுத்து நிலையை சாதகமாக்கி பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் திட்டங்களை மேற்கொள்ள உதவி செய்வதே இந்த இரண்டு கடன் திட்டங்களின் குறிக்கோளாகும்.



4. நிதியத்தின் சாதனைகள் (Achivements of IMF)

நிதியத்தின் சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

i) பன்னாட்டுப் பண இருப்பை நிறுவுதல்

உலக நாடுகளின் பணத்தை செலாவணி கையிருப்பாகத் திரட்டியதில் நிதியம் சிறப்பாக பங்காற்றுகின்றது. இந்த செலாவணி கையிருப்பை உறுப்பு நாடுகளின் செலாவணித் தேவையை நிவர்த்தி செய்ய பயன்படுத்துகிறது.

ii) பணவியல் சுயகட்டுப்பாடும் ஒத்துழைப்பும்

உறுப்பு நாடுகள் பணபரிவர்த்தனைகளில் சுயகட்டுப்பாடு மற்றும் ஒத்துழைப்பை கடைப்பிடிக்க வைப்பதில் நிதியம் தீவிர ஆர்வம் கொண்டுள்ளது. இதற்காக, தங்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் உண்மையான முயற்சிகள் செய்த நாடுகளுக்கு மட்டும் நிதி உதவிகளை வழங்கியது.

iii) பின்தங்கிய நாடுகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் சிறப்பு கவனம்

பின்தங்கிய நாடுகளின் கடுமையான பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சிறப்பு கவனம் செலுத்தியதே நிதியத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். பாதக செலுத்து நிலையைச் சரிசெய்ய தாராளமான கடன் உதவிகளை வழங்குகின்றது. இருந்த போதிலும் பெரும்பான்மையான பின்தங்கிய நாடுகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.



5. இந்தியா மற்றும் பன்னாட்டு பண நிதியம்

இந்தியா நிதியத்தின் ஐந்தாவது பெரிய உறுப்பு நாடாக 1970 வரை இடம் பிடித்திருந்தது. ஒரு நிரந்தர செயல் இயக்குநரை நியமிக்கும் அதிகாரத்தையும் பெற்றுள்ளது. நிதியத்திலிருந்து பல உதவிகள் பெற்று ஒழுங்காக கடன் தவணைகளை கட்டி வருகின்றது. இந்தியாவின் எஸ்.டி.ஆர். பங்களவு தற்போது 5821.5 மில்லியன் டாலராக உள்ளது. அதிக அளவு எஸ்.டி.ஆர் பங்களவு உள்ள நாடுகளில் இந்தியா 13வது உறுப்பு நாடாகவும் நிதியத்தின் மொத்த பங்களவில் 2.44 விழுக்காடு பங்குகளையும் கொண்டுள்ளது. அயல் நாட்டுச் செலுத்துநிலை பற்றாக்குறையை சரிசெய்வதற்கு கடன்கள் பெறுவதோடு இந்தியா பிறவழிகளிலும் நிதி உதவியை உறுப்பினர் என்று முறையில் பெற்று பயனடைந்து வருகின்றது.

எஸ்.டி.ஆர். (SDR) யாது? 

* ஐ.எம்.எப்-ன் கட்டளைப்பணமாகும்.

* நாணய குழுமத்தின் வலுவான உரிமை கோரல் 

எஸ்.டி.ஆர். குறிப்பது யாது? 

* சிறப்பு எடுப்பு உரிமைகள்(SDR) எஸ்.டி.ஆர். ஏன் உருவாக்கப்பட்டது? 

* உலக வைப்பு நாணயமாக செயல்படுவதற்கு 

* உலக அளவிலான பண நீர்மையை உருவாக்குவதற்கு 

எஸ்.டி.ஆர். எவ்வனம் மதிப்பிடப்படுகிறது?

* 1969-ல் உருவக்கப்பட்டது தொடக்கத்தில் எஸ்.டி.ஆரின் மதிப்பாக 0.888671 கிராம் தூய பொன் - அந்த காலகட்டதில் 1 US$ சமமானதாகும்.


Tags : International Economic Organisations பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்.
12th Economics : Chapter 8 : International Economic Organisations : International Monetary Fund International Economic Organisations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் : பன்னாட்டு பண நிதியம் - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்