பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் - பன்னாட்டு வர்த்தக தொகுதிகள் | 12th Economics : Chapter 8 : International Economic Organisations
பன்னாட்டு வர்த்தக தொகுதிகள் (Trade Blocks)
சில நாடுகள் வாணிகத்தில் போட்டியைத் தவிர்க்க பிற நாட்டுப் பொருளாதாரத்துடன் தங்களுடையப் பொருளாதாரத்தை இணைத்து புதிய வாணிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன. நாடுகளுக்கிடையே சுமூக நன்மை தரும் வாணிகத் தொகுதிகள் பல விதங்களில் அமைகின்றன. சமூக நன்மைக்காக நாடுகள் அமைக்கும் வாணிகத் தொகுதிகள் பரஸ்பர நல்லிணக்கத்திற்கு உதவுகிறது. தடையற்ற வாணிகப் பகுதி, சுங்கத் தீர்வை ஒன்றியம், பொது சந்தை மற்றும் பொருளாதார ஒன்றியம் ஆகிய வடிவங்களில் பொருளாதார ஒருங்கிணைப்பு நிகழ்கிறது.
* தடையற்ற வாணிகப் பகுதி (Free Trade Area)
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஒரே மண்டலமாகக் கருதி வாணிகத்தடைகளை குறைக்க ஒத்துழைக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்படுகிறது. உதாரணம்: SAFTA, EFTA.
* சுங்கவரி ஒன்றியம் (Customs Union)
உறுப்பினர்களுக்கிடையிலான வாணிகத்தில் வரிவிதிக்காமலும் உறுப்பினரல்லாதவர்களுடனான வாணிகத்தில் பொது வரிவிதித்தும் ஒத்துழைக்கும் அமைப்பே சுங்கவரி ஒன்றியம் எனப்படுகிறது. உதாரணம்: BENELUX (பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க்)
* பொதுசந்தை (Common Market)
புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள நாடுகள் தடையற்ற வாணிகம் மற்றும் உற்பத்திக் காரணிகள் இடப்பெயர்வுக்காக அமைக்கும் அமைப்பே பொது சந்தை. உதாரணம்: ஐரோப்பிய பொது அங்காடி (European Common Market - ECM)
* பொருளாதார ஒன்றியம் (Economic Union)
பொது சந்தையையும் சுங்கவரி ஒன்றியத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்படும் அமைப்பே பொருளாதார ஒன்றியம். பொருள் உற்பத்தி, பணிகள் உற்பத்தி, பொருள், பணிகள், காரணிகள் இடம்பெயர்வு மற்றும் பொதுவான உறுப்பினரல்லாத நாடுகள் வாணிகத்தின் மீது வரி ஆகிய அனைத்தும் பொருளாதார ஒன்றியத்தில் உண்டு. உதாரணம் : ஐரோப்பிய பொருளாதார ஒன்றியம் (European Economic Union)