செவ்வியல் உலகம் | வரலாறு - பைசாண்டியம் | 9th Social Science : History: The Classical World

   Posted On :  05.09.2023 12:16 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம்

பைசாண்டியம்

கான்ஸ்டாண்டிநோபிளைத் தலைநகராகக் கொண்டு ஏறத்தாழ 1000 வருடங்கள் ஆட்சி புரிந்த பைசாண்டியப் பேரரசர்கள் தங்களை ரோமானியர்கள் என கூறிக் கொண்டனர்.

பைசாண்டியம்

கான்ஸ்டாண்டிநோபிளைத் தலைநகராகக் கொண்டு ஏறத்தாழ 1000 வருடங்கள் ஆட்சி புரிந்த பைசாண்டியப் பேரரசர்கள் தங்களை ரோமானியர்கள் என கூறிக் கொண்டனர். ஆனால் அவர்களின் மொழி கிரேக்கமாகும். அங்குள்ள ஆடம்பரமான அரச மாளிகைகள், நூலகங்கள், கிரேக்க, ரோமானிய மொழிகளில் எழுதப்பட்டவற்றை கற்றறிந்த அந்நகரின் அறிஞர்கள், திகைக்க வைக்கும் அழகைக் கொண்ட புனித சோபியா தேவாலயம் ஆகியவற்றை கொண்ட கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் அவர்கள் விட்டுச் சென்ற மரபுரிமைக் கொடைகளாகும்.

இருந்தபோதிலும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தமட்டில் இக்காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வளர்ச்சி ஏற்படவில்லை . பேரரசினுடைய பிராந்தியங்களின் பொருளாதாரம் உள்ளூர் நிலப்பிரபுக்களின் கைவசம் இருந்தது. சிறு விவசாயிகள் வறுமையில் வாழ்ந்தனர். நான்காவது சிலுவைப்போரில் எதிரிப்படைகள் இந்நகரைக் கைப்பற்றி கொள்ளையடித்து பின்னர் ஆட்சி செய்தபோது பைசாண்டிய நாகரிகத்தின் அடிப்படை பலவீனம் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. ஆட்டம் கண்டிருந்த பேரரசு இறுதியில் உதுமானிய துருக்கியரிடம் கி.பி. (பொ..) 1453இல்   வீழ்ந்தது.


செவ்வியல் காலத்தில் இந்தியா....


குஷாணர்கள் காலம் ரோமனியப் பேரரசின் இறுதி காலகட்டமான ஜுலியஸ் சீசரின் ஆட்சி காலத்தின் சமகாலமாகும். ஜுலியஸ் சீசரின் காலத்துக்குப் பின் ஆட்சிக்கு வந்த அகஸ்டஸ் சீசர் அவைக்கு குஷாணர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.


செவ்வியல் காலத்தின் சமகாலமான சங்ககாலத்தில் (கி.மு.(பொ.ஆ.மு)-3ம் நூற்றாண்டு முதல் கி.பி. (பொ.ஆ) -3ம் நூற்றாண்டில்) பதினெண் மேல்கணக்கு என்றழைக்கப்படும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் தொகுக்கப்பட்டன. சங்க இலக்கியம் இந்தியாவின் முதல் சமயச் சார்பற்ற இலக்கியம் என போற்றப்படுகிறது.


செவ்வியல் காலத்தின் இறுதிக் காலத்துடன் (நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகள்) பொருந்திய களப்பிரர் காலத்தில் பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோம் ஆகியவற்றோடு மலபார் கடற்கரை வழி நடந்த வணிகம் மேலும் செழிப்படைந்தது. தேக்கு, மிளகு, மணிகள் மற்றும் தந்தம் போன்றவை ஏற்றுமதியாயின.


மீள்பார்வை

கிரேக்கர்கள் நாட்டுப்பற்றுடன் போரிட்டு பாரசீகப் படையெடுப்பை முறியடித்தனர்.

ஏதென்ஸ் முடியாட்சியையும், குழு ஆட்சியையும் மறுத்து மக்களாட்சி முறையைத் தேர்வு செய்தது.

பெரிகிளிஸின் ஆட்சிக்காலத்தில் ஏதென்ஸ், நாகரீகத்தின் உயர்ந்த நிலையில் இருந்தது.

அலெக்ஸாண்டரின் இறப்பிற்குப் பின்னர், கிரேக்க-எகிப்து நகரமான அலெக்ஸாண்டிரியாவில், அறிவியல், கணிதம், தத்துவம் ஆகிய அறிவுப் புலங்கள் வளர்ச்சியின் உச்சநிலையை அடைந்து புதிய ஹெலினிஸ்டிக் சகாப்தத்தை முன்னறிவிப்பு செய்தது.

 கி.மு. (பொ..மு) ஆறாம் நூற்றாண்டு இறுதியில் ரோம் செழித்துயர்ந்து குடியரசாக வளர்ச்சி பெற்றது.

பாட்ரீசியன், பிளபியன் ஆகியோர் இடையிலான வர்க்கப் போர்களும் அடிமைகளின் கிளர்ச்சிகளும் ரோம் ஒரு பேரரசாக மாறுவதற்கு இட்டுச் சென்றன.

 மன்னராட்சி காலம் குறிப்பாக அகஸ்டஸின் ஆட்சியில் ரோமானியர்கள் அறிவியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றிற்கு வளமான பங்களிப்பைச் செய்தனர்.

உள்நாட்டுச் சிக்கல்களும், பிராங்குகள், கோத்துகள், வாண்டல்கள் போன்ற பண்பாட்டில் பின் தங்கிய கும்பல்களின் படையெடுப்புகளும் ரோமப் பேரரசை முடிவிற்குக் கொண்டு வந்தன.

ரோமானியர்கள் தங்கள் நாகரிகத்தை கான்ஸ்டாண்டிநோபிளை தலைநகராகக் கொண்ட கிழக்குப் பகுதியில் தொடர்ந்தனர். இது பைசாண்டிய நாகரிகம் என அழைக்கப்படுகிறது.

கிறித்தவம் பைசாண்டியத்தின் அரசு மதமாக ஆன பின்னர் ஐரோப்பாவிலும் பரவத் தொடங்கியது.

Tags : The Classical World | History செவ்வியல் உலகம் | வரலாறு.
9th Social Science : History: The Classical World : Byzantium The Classical World | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம் : பைசாண்டியம் - செவ்வியல் உலகம் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம்