Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | வேதியியல் - வாழ்க்கையின் மையம்
   Posted On :  20.12.2023 10:18 pm

11 வது வேதியியல் : அலகு 1 : வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள்

வேதியியல் - வாழ்க்கையின் மையம்

அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேதியியல் முக்கிய பங்காற்றுவதுடன், வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதிலும் உதவுகிறது.

அலகு 1

வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள்


We think there is color, we think there is sweet, we think there is bitter, but in reality there are atoms and a void.

- Democritus

கற்றலின் நோக்கங்கள்

இந்த பாடப்பகுதியைக் கற்றறிந்த பின்னர்

வாழ்வின் பல்வேறு சூழல்களில் வேதியியலின் முக்கியத்துவத்தினை விளக்குதல்.

பல்வேறு பொருட்களை, தனிமங்கள், சேர்மங்கள் மற்றும் கலவைகள் என வகைப்படுத்துதல்.

அணுநிறை மற்றும் மூலக்கூறு நிறையினை வரையறுத்தல்.

பொருளின் அளவினை, 'மோல்' அலகினைப் பயன்படுத்தி வரையறுத்தல்.

அவகாட்ரோ எண்ணை விவரித்தல்.

நிறை, மோல் மற்றும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பினை விளக்குதல் மற்றும் அவை சார்ந்த கணக்கீடுகளைச் செய்தல்.

சமான நிறையினை வரையறுத்தல். அமிலம், காரம் மற்றும் ஆக்சிஜனேற்றி / ஒடுக்கிகளின் சமான நிறையினைக் கணக்கிடுதல்.

பரிசோதனைகளின் மூலம் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி எளிய விகித வாய்பாடு மற்றும் மூலக்கூறு வாய்பாடுகளைத் தருவித்தல்.

வேதிவினைக் கூறு விகித கணக்கீடுகள் அடிப்படையிலான எண்ணியல் கணக்குகளைத் தீர்த்தல்.

வினைக் கட்டுப்பாட்டுக் காரணியினைக் கண்டறிதல் மற்றும் ஒரு வேதிவினையில் வினைபடுபொருட்கள் மற்றும் வினை விளைபொருட்களின் அளவினைக் கணக்கிடுதல்.

ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம், ஆக்சிஜனேற்றி ஆக்சிஜன் ஒடுக்கி ஆகிய சொற்கூறுகளை வரையறுத்தல்

பல்வேறு சேர்மங்களில் அடங்கியுள்ள தனிமங்களின் ஆக்சிஜனேற்ற எண்ணைத் தீர்மானித்தல்.

ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைகளில் நிகழும் செயல்முறைகளை விளக்குதல் மற்றும் எலக்ட்ரான் பரிமாற்ற செயல்முறையினை விவரித்தல்

ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைகளை வகைப்படுத்துதல்.

இரு அரைவினைகளிலிருந்து ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டை உருவாக்குதல்,

ஆகிய திறன்களை மாணவர்கள் பெற இயலும்.



வேதியியல் - வாழ்க்கையின் மையம்

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை மூன்றும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாகும். இம் மூன்று அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேதியியல் முக்கிய பங்காற்றுவதுடன், வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதிலும் உதவுகிறது. வேளாண்மை உற்பத்தியினை அதிகரிக்க உதவும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற பல்வேறு சேர்மங்களை வேதியியல் உருவாக்கியுள்ளது. பல்வேறு கால சூழ்நிலைகளைத் தாங்கும் வகையில், நவீன சிமெண்டுகள், கான்கிரீட் கலவைகள், தரமான எஃகு ஆகியவற்றினைக் கொண்டு நல்ல தரமான கட்டிடங்களை நாம் உருவாக்க முடியும். மேலும், நல்ல தரம் வாய்ந்த ஆடை உருவாக்கத்திற்கு தேவையான இழைகளை நாம் பெற்றுள்ளோம்.


உலகில் நாம் வாழும் சூழல் அனைத்திலும் வேதியியல் உள்ளது. நமது உடல் கூட வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். நம் உடலில் நிகழும் தொடர்ச்சியான உயிர் - வேதி வினைகளே, நமது உடல் செயல்பாடுகளுக்கு, காரணமாக அமைகின்றன. நமது சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம், என நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் வேதியியலோடு தொடர்பு கொண்டுள்ளது. நாம் வாழும் உலகம் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. நவீன உலகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு ஏற்ற வகையில் வேதியியல் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது. நம் அன்றாட வாழ்வில் பயன்படும் புதிய வேதிப்பொருட்களை வேதி தொழிற்சாலைகள் தயாரித்து வருகின்றன. எடுத்துக்காட்டாக பலபடிகள், சாயங்கள், உலோகக் கலவைகள், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

1980 - களின் தொடக்கத்தில் HIV / எய்ட்ஸ் நோய்த்தொற்று உணரத்தொடங்கிய காலத்தில், இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலகாலம் மட்டுமே உயிர்வாழும் நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை எதிர்கொண்டு வாழும் வகையில் பயன்தரத்தக்க மருந்துப்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வேதியியலின் கோட்பாடுகளை புரிந்து கொண்டதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும், குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் குளோரோ புளூரோ கார்பன்களுக்கு மாற்றாக சூழலுக்கு ஏற்ற, மாற்று வேதிப்பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலோடு இணைந்த பசுமை செயல்முறைகளை நம்மால் உருவாக்க முடிந்துள்ளது. புதிய மருந்துகள் உருவாக்கம், தொகுப்பு பலபடிகள், சூழலுக்கு எற்ற பொருட்களை உருவாக்குதல் போன்றவற்றில் நமது சமூக முன்னேற்றத்திற்காக வேதியியலின் பல்வேறு பிரிவுகளில், பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நமது அன்றாட நடைமுறை வாழ்வில் வேதியியல் முக்கிய பங்காற்றிவரும் நிலையில், வளர்ந்து வரும் நம் நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு, தீர்வுகாண வேதியியலின் அடிப்படைக் கோட்பாடுகளை புரிந்து கொள்ளுதல் என்பது அவசியமான ஒன்றாகும்.

11th Chemistry : UNIT 1 : Basic Concepts of Chemistry and Chemical Calculations : Chemistry - the Centre of Life in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 1 : வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் : வேதியியல் - வாழ்க்கையின் மையம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 1 : வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள்