Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | அன்றாட வாழ்வில் வேதியியல்

பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் | 6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life

   Posted On :  21.09.2023 07:15 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்

அன்றாட வாழ்வில் வேதியியல்

கற்றல் நோக்கங்கள் ❖ அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல் ❖ சோப்பு தயாரித்தல் பற்றி புரிந்து கொள்ளுதல் ❖ உரங்களின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி அறிந்து கொள்ளுதல் ❖ சிமெண்ட், ஜிப்சம், எப்சம் மற்றும் பாரிஸ் சாந்து பற்றி தெரிந்து கொள்ளுதல் ❖ பீனால் மற்றும் ஓட்டும் பொருள்களின் பயன்பாட்டினை அறிந்து கொள்ளுதல்

அலகு 3

அன்றாட வாழ்வில் வேதியியல்




 

கற்றல் நோக்கங்கள்

அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்

சோப்பு தயாரித்தல் பற்றி புரிந்து கொள்ளுதல்

உரங்களின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி அறிந்து கொள்ளுதல்

சிமெண்ட், ஜிப்சம், எப்சம் மற்றும் பாரிஸ் சாந்து பற்றி தெரிந்து கொள்ளுதல்

பீனால் மற்றும் ஓட்டும் பொருள்களின் பயன்பாட்டினை அறிந்து கொள்ளுதல்

 

அறிமுகம்

இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் பற்றி நாம் படித்திருக்கின்றோம். பின்வரும் பட்டியலிலிருந்து எவை இயற்பியல் மாற்றங்கள் மற்றும் வேதியியல் மாற்றங்கள் என உங்களால் அடையாளம் காண முடியுமா?

ஒரு குச்சி இரு துண்டுகளாக உடைதல்

காகிதம் எரிதல்

காகிதம் சிறிய துண்டுகளாதல்

சர்க்கரையானது நீரில் கரைதல்

தேநீர் தயாரித்தல்

நீர் கொதித்து ஆவியாதல்

குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைதல்

இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கிடையேயான முக்கிய வேறுபாட்டினைக் காணமுடிகிறதா? காகிதத்தை இரு துண்டுகளாக வெட்டினாலும், கிடைப்பவை இரண்டும் காகிதத் துண்டுகளே. ஆனால் காகிதத்தை எரிக்கும்போது அங்கே காகிதம் இல்லை. அதற்குப் பதிலாக சாம்பலும், புகையும் மட்டுமே காற்றுடன் கலந்துள்ளது.

வேதியியல் மாற்றம் என்பது ஒரு பொருள் புதிய பொருளை உருவாக்கும் நிகழ்வு ஆகும், இயற்பியல் மாற்றம் என்பது பொருள்களின் வடிவம், அளவு மற்றும் பருமனில் மட்டும் ஏற்படும் மாற்றமாகும். பருப்பொருளின் நிலையானது நீர்மத்திலிருந்து வாயுவாகவும் அல்லது நீர்மத்திலிருந்து திண்மமாக மாறினாலும் அப்பொருளின் தன்மை மாறாமல் இருக்கும்.

கீழ்க்கண்ட சோதனையை நாம் செய்யலாமா? நீரில் ஒரு சிட்டிகை மஞ்சளைச் சேர்க்கும்போது நீரானது மஞ்சள் நிறமாக மாறுகின்றது. ஒரு பீக்கரில் சிறிதளவு சோப்பு நீரை எடுத்துக்கொள். அதில் சிறிதளவு மஞ்சள்தூளைச் சேர். இப்பொழுது என்ன நிகழ்கின்றது? கரைசலில் ஏதாவது நிறமாற்றம் ஏற்படுகின்றதா? மஞ்சள் நிறமாகவே உள்ளதா? அல்லது வேறு நிறத்திற்கு மாறுகின்றதா?


உன் வீட்டில் உள்ள மற்ற திரவங்களில் மஞ்சள்தூளைச் சேர்த்து என்ன நிகழ்கின்றது என்று செய்துபார். புளிக்கரைசலில் மஞ்சள் துாளைச் சேர்த்து முயற்சித்துப் பார்க்கவும். வீட்டினைத் தூய்மைப்படுத்தும் திரவங்களிலும் சேர்த்துப் பார். நிறமாற்றம் நிகழ்கின்றதா?

வேதியியலாளர்கள் மஞ்சளை இயற்கை நிறங்காட்டி என்று அழைக்கின்றார்கள். இதன் மூலம் ஒரு கரைசல் அமிலத்தன்மை வாய்ந்ததா, காரத்தன்மை வாய்ந்ததா என நம்மால் அடையாளம் காணமுடியும்.

நம்முடைய அன்றாட செயல்பாடுகளில் வேதியியல் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கண்டறிய கீழ்க்கண்ட வினாக்களுக்கு உங்கள் ஆசிரியரின் துணையோடு விடைகளைக் கண்டுபிடியுங்கள்.

பால் தயிராக எவ்வாறு மாற்றமடைகின்றது?

செம்புப் பாத்திரத்தில் இருக்கக்கூடிய கறையை எவ்வாறு அகற்றலாம்?

புதியதாக தயாரிக்கப்பட்ட இட்லி மாவின் இட்லி சற்று கடினமாகவும், பழைய மாவில் தயாரிக்கப்பட்ட இட்லி மிருதுவாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

இரும்பு எவ்வாறு துருப்பிடிக்கின்றது?

வெள்ளைச் சர்க்கரையை சூடேற்றும்பொழுது ஏன் கருப்பாக மாறுகின்றது?

மேற்கண்ட வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் நம்மைச் சுற்றி நடக்கக்கூடிய வேதியியல் மாற்றங்களை நாம் புரிந்துகொள்ள முடியும்.

அன்றாட வாழ்வில் வேதியியல் மாற்றங்களை நாம் பலவிதங்களில் பயன்படுத்துகிறோம். வேதியியல் என்பது பருப்பொருள்களின் அடிப்படைக் கூறுகள், அமைப்பு, பண்புகள் மற்றும் அவற்றில் ஏற்படும் மாறுதல்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு ஆகும். வேதியியலின் சிறப்பு என்னவெனில், அது பருப்பொருள்களின் அடிப்படைத் துகள்களான அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் பண்பையும், அவற்றின் சேர்க்கையால் ஏற்படும் விளைவுகளையும் நமக்கு எளிமையாக விளக்குகின்றது.

நம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பருப்பொருள்களையும் நாம் வேதிப்பொருள்களாகக் கருத முடியும். நாம் அருந்தும் நீர் (H2O) ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் இணைந்த ஒரு வேதிப்பொருளாகும். நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பு (NaCl) சோடியமும், குளோரினும் இணைந்த ஒரு வேதிப்பொருள். நமது உடல்கூட பல வேதிப்பொருள்களால் கட்டமைக்கப்பட்டதே!

இட்லி மாவில் பாக்டீரியாக்கள் நிகழ்த்தும் நொதித்தல் எனும் வேதிமாற்றத்தின் காரணமாகவே, இட்லி மாவு புளித்து, நம்மால் மிருதுவான இட்லி தயாரிக்க முடிகிறது.

 

வெங்காயத்தை நறுக்கும்போது கண்களில் எரிச்சலுடன் கண்ணீரும் வருவது ஏன்?

வெங்காயத்தினை நறுக்கும் போது நம்மில் பலருக்கு கண்களில் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கான காரணம், அதன் செல்களில் பொதிந்துள்ள புரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு எனும் வேதிப்பொருள் ஆகும். இது எளிதில் ஆவியாகக்கூடியது (Volatile). வெங்காயத்தை வெட்டும்போது, சில செல்கள் சிதைந்து இந்த வேதிப் பொருள் வெளிப்படும். எளிதில் ஆவியாகி உடனே கண்களைச் சென்றடைந்து, |எரிச்சல் ஏற்படுத்தி கண்ணீரைத் தூண்டும். வெங்காயத்தை நசுக்கினால் கூடுதல் செல்கள் உடைந்து, இந்த வேதிப்பொருள் அதிகமாக வெளிப்படும். எனவே, இன்னும் அதிகமாக கண்ணீர் வரும். வெங்காயத்தை நீரில் நனைத்து நறுக்கும்போது நமக்கு எரிச்சல் குறைகின்றது. ஏன்?


 

நாம் சமைக்கும்போது உணவுப்பொருள்கள் பல்வேறு வேதிமாற்றங்களுக்கு உள்ளாவதன் காரணமாகவே, அவற்றின் நிறத்திலும், மணத்திலும் விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன.

வேதிமாற்றங்களைப் பயன்படுத்தி நாம் சில பொருள்களை உருவாக்க முடியும். 

உதாரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புகள், உரங்கள், நெகிழிகள் மற்றும் சிமெண்ட் போன்றவை இயற்கையாகக் கிடைக்கும் சில வேதிமாற்றங்களுக்கு பொருள்களை உட்படுத்தி தயாரிக்கப்பட்டவை ஆகும்.

இப்பாடத்தில் நாம் சோப்புகள், உரங்கள், சிமெண்ட், ஜிப்சம், எப்சம், பாரிஸ் சாந்து, பீனால், ஒட்டும் பொருள்கள் போன்றவை தயாரிக்கப்படும் விதம் பற்றியும், அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் பார்க்கலாம்.

 

செயல்பாடு 1 : உங்கள் நண்பர்களுடன் கலந்தாலோசித்து உங்கள் பள்ளியிலும், வீட்டிலும் தினசரி பயன்படுத்தக்கூடிய சில வேதிப்பொருள்களைப் பட்டியலிடுக.

-------------------------------------------------------------

------------------------------------------------------------

-----------------------------------------------------------

Tags : Term 3 Unit 3 | 6th Science பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life : Chemistry in Everyday life Term 3 Unit 3 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல் : அன்றாட வாழ்வில் வேதியியல் - பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்